வலப்பனை பிரதேச சபைக்கு உட்பட்ட இராகலை பிரதேசத்தில் வசிக்கும் ஐந்தாயிரத்திற்கு மேற்பட்ட மக்களுக்கு குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டு பாரிய பிரச்சினைக்கு முகம் கொடுத்துள்ளதாக பிரதேச மக்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
இதன் காரணமாக தற்போது பிரதேச மக்கள் தமது அன்றாட தேவைகளை மேற்கொள்ள முடியாது திண்டாடி வருவதாக கவலை தெரிவித்துள்ளனர்.
கடந்த ஒருமாத காலமாக இராகலை பிரதேசத்தில் நீடித்துள்ள குடி நீர் தட்டுப்பாடு காரணமாக தோட்டப்பகுதிகள் பலவற்றுடன் நகர்புற மக்களும் கிராமபுற மக்களும் முறையாக குடி தண்ணீர் கிடைக்காத நிலையில் பாதித்து வருவதாக பிரதேச மக்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
இது தொடர்பாக இராகலை பிரதேச மக்கள் மேலும் தெரிவித்துள்ளதாவது.
இராகலை மேல் பிரிவு தோட்டத்தின் தேயிலை மலை உச்சி பகுதியில் கடந்த கால அரசாங்கத்தினால் நீரேந்தும் வனப்பகுதியில் பாரிய குடிநீர் தாங்கி ஒன்று அமைக்கப்பட்டு உள்ளது.
இவ்வாறு அமைக்கப்பட்டுள்ள குடிநீர் தாங்கி ஊடாக இராகலை நகரம், ஸ்டாபோட்,இராகலை மத்திய பிரிவு நகரம்,இராகலை முதலாம்,இரண்டாம் மற்றும் மத்திய பிரிவு தோட்டங்கள்,உட்பட மந்திரிதென்ன,ஒப்ராசி, டிக்ஸன்,கல்கடப்பத்தனை,
டெல்மார் தோட்டம் போன்ற இடங்களில் வசிக்கும் மக்களுக்கு குடிநீர் சேமித்து வழங்கப்பட்டு வருகிறது.
இந்த குடிநீர் வழங்கும் நடவடிக்கையை இராகலை பிரதேச குடிநீர் வழங்கும் சபை ஊடாக வழங்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
இருந்த போதிலும் தினமும் இருவேளை இம்மக்களுக்கு குடி தண்ணீர் முறையாக வழங்கப்பட்டு வந்த போதிலும் கடந்த ஒருமாத காலமாக இக் குடிநீர் வழங்கும் நடவடிக்கையில் மாற்றம் ஏற்பட்டு நான்கு நாட்களுக்கு ஒருமுறை மாத்திரம் குடி தண்ணீர் விணியோகம் செய்யப்படுவதாக பிரதேச மக்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
இது இவ்வாறிருக்க இராகலை பிரதேசத்தில் மழை வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக அறிகின்ற போதிலும் பிரதான நீர் தாங்கியில் வழமைக்கு மாறாக நீர் நிறம்புவது குறைவாகிவருவதை பிரதேச மக்கள் அவதானித்துள்ளனர்.
இந்த நிலையில் இந்த பிரதான நீர் தாங்கிக்கு வரும் நீரை சிலர் மறைத்து விவசாய காணிகளுக்கு முறையற்ற விதத்தில் பெறுகின்றனர் எனவும் இதனால் பிரதான நீர் தாங்கியில் நீர்
குறைவடைவதற்கு காரணமாக உள்ளதாக பிரதேச மக்கள் தெரிவித்துள்ளனர்.
எனவே இது தொடர்பாக நுவரெலியா மாவட்ட செயலாளர் மற்றும் வலப்பனை பிரதேச செயலாளர்களின் கவனத்திற்கு கொண்டு வந்துள்ளதாக தெரிவிக்கும் பிரதேச மக்கள் காலம் தாழ்த்தாது பிரதேச செயலாளர்கள் நடவடிக்கை எடுக்க முன்வர வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அத்துடன் பிரதான குடிநீர் தாங்கிக்கு வந்து சேரும் தண்ணீரை தடுத்துள்ளவர்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறும், விவசாய நடவடிக்கைகளுக்கு தாங்கியில் இருந்து முறைக்கேடாக பொறுத்தப்பட்டுள்ள குழாய்களை அகற்றி அதற்கு பதிலாக தாங்கியிலிருந்து மேலதிகமாக வெளியேறும் தண்ணீரை விவசாய நடவடிக்கைக்கு பெற்று கொள்ள நடவடிக்கை எடுக்குமாறும் மேலும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஆ.ரமேஸ்.