தமிழ் இலக்கியத் துறையில் பெரும் பங்காற்றி அண்மையில் காலஞ்சென்ற சிரேஷ்ட சட்டத்தரணி ராஜ குலேந்திரன், திறனாய்வாளர், கே. எஸ். சிவகுமாரன் ஆகியோருக்கான நினைவேந்தல் நிகழ்வொன்றை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் புதிய வெளிச்சங்கள் இலக்கிய மையம், கொழும்பு -6, ருத்ரா மாவத்தையில் அமைந்துள்ள கொழும்பு தமிழ்ச் சங்க, சங்கரப்பிள்ளை மண்டபத்தில் எதிர்வரும் அக்டோபர் 2 ஆம் திகதி ஞாயிறு மாலை 4.00 மணிக்கு நடாத்தவுள்ளது.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீமின் தலைமையில் நடைபெறவுள்ள பிரஸ்தாப நிகழ்வில், உலக அறிவிப்பாளர் பீ. எச். அப்துல் ஹமீத், சாஹித்ய ரத்னா மு. சிவலிங்கம், சிரேஷ்ட ஊடகவியலாளர் என். எம். அமீன், மருத்துவக் கலாநிதி ‘ஞானம்’ ஞானசேகரம் ஆகியோர் உரையாற்றவுள்ளனர்.
கலாநிதி எம். ஏ. எம். சுக்ரி – மணிப்புலவர் மருதூர் ஏ மஜீத் நினைவு அரங்கில் நடை பெறவுள்ள இந் நிகழ்வு முஸ்லிம் காங்கிரஸின் புதிய வெளிச்சங்கள் இலக்கிய மையம் தமிழுக்கு தொண்டாற்றியவர்களை நினைவு கூரும் வரிசையில் முன்னர் கவிக்கோ அப்துல் ரஹ்மான்,செனட்டர் மஷுர் மௌலானா, எஸ். எச். எம். ஜெமீல் போன்றோருக்கு நடாத்திய நினைவேந்தல் நிகழ்வுத் தொடரில் ஒன்றாகும்.