இலங்கையின் வீழ்ச்சிக்கு முக்கிய காரணம் என்ன?

0
255

முற்குறிப்பு: மூத்த பத்திரிகையாளர் விக்டர் ஐவன் (Victor Ivan) எழுதியிருக்கும் முக்கியமான கட்டுரை இது. அவரது முகநூல் பக்கத்திலிருந்து நன்றியுடன் எடுத்தாள்கிறேன். தயவுசெய்து நேரம் எடுத்து இதனை முழுமையாக வாசியுங்கள். சிங்கள சமூகத்தின் மன அமைப்பைப் புரிந்து கொள்ள இது நன்கு உதவும். ஏனைய சமூகங்களுக்கும் இதில் படிப்பினைகள் உள்ளன.

இலங்கையின் தற்போதைய மாபெரும் சரிவு, தோல்வி மற்றும் வங்குரோத்து நிலை ஏற்படுவதில் செல்வாக்கு செலுத்திய முக்கிய காரணி எது?

அரசியல்வாதிகள் மற்றும் அதிகாரிகளின் ஊழலால் இந்த நிலைமை ஏற்பட்டுள்ளதாக பரவலான ஒரு நம்பிக்கை நிலவுகின்றது.

உயிரியல் பன்முகத்தன்மை தொடர்பான விஞ்ஞானி ரொஹான் பெத்தியாகொட, ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவொன்றில்  உரையாற்றும்போது,  நாட்டில் ஏற்பட்டுள்ள நெருக்கடிகளுக்கு அடிப்படைக் காரணம், பொது அறிவை புறக்கணிப்பதால் ஏற்பட்ட ஒரு சூழ்நிலை என விளக்கமளித்துள்ளார். 

நிலுவைத் தொகை நெருக்கடியைச் சமாளிக்க, பணத்தை  பாரியளவில் அச்சிடுதல்,  இரசாயன உரங்களைக் கைவிட்டு இயற்கை உரங்களுக்கு மாறுதல் மற்றும் கோவிட்-ஐ எதிர்த்துப் போராட தம்மிக பாணியைப் பயன்படுத்துதல், பொது அறிவைப் புறக்கணித்துச் செயற்பட்டமை அல்லது அறிவீனமாக செயல்பட்டமை ஆகியன இது தொடர்பில் எடுத்துக்காட்டாக முன்வைக்கப்படும் மூன்று முக்கிய சம்பவங்களாகும். 

கலாநிதி ரொஹான் பெத்தியாகொடவின் உரையில் பாரியதொரு உண்மை இருந்தபோதும், பொது அறிவைப் புறக்கணித்து செயற்படுதல் அல்லது  அறிவியலைப் புறக்கணித்து செயல்படுதல் என்ற விடயம் கோட்டாபய காலத்தில் திடீரென வானத்தில் இருந்து குதித்து வந்த விடயமொன்றல்ல, மாறாக அதனை நீண்டகாலமாக நாட்டினுள் வளர்ச்சிபெற்று வந்த ஒரு குறிப்பிடத்தக்க நிலைமையொன்றாக  கருதலாம்.

அறியாமை கோலோச்சுதல்

இரசாயன உரங்கள் மற்றும் பூச்சிகொல்லிகள் இல்லாமல் கரிம உரங்கள் மற்றும் பாரம்பரிய பூச்சிக் கட்டுப்பாட்டு முறைகளைப் பயன்படுத்துவதன் மூலம், சிறந்த அறுவடையைப் பெறலாம் என்ற சித்தாந்தம் நீண்ட காலமாக (தொண்ணூறுகளின் தொடக்கத்திலிருந்து) சில கருத்தியல் இயக்கங்களால் சமூகமயமாக்கப்பட்ட ஒரு கருத்தியல் ஆகும். 

கமத்தொழில் நிபுணர்கள் குறித்த கருத்தியல் இயக்கத்தின் கருத்துக்களை விமர்சிக்கவில்லை. ஏனென்றால், எந்தவொரு  கமத்தொழில் நிபுணரும் மிக அரிதாகவேனும் அவ்வாறு விமர்சித்தால், அவர் அல்லது அவள் பன்னாட்டு உர மாஃபியாவைச் சார்ந்த ஒருவராக  அடையாளப்படுத்தப்படுத்தப்படும் வேலைத்திட்டமொன்றும் முன்னெடுக்கப்பட்டிருந்தது .

நல்லாட்சி அரசாங்கம்  பதவிக்கு வந்த பின்னர், இயற்கை விவசாயத்தை பிரபலப்படுத்தும் திட்டத்தை முன்னெடுத்த தேரர் ஒருவருக்கு பெருமளவு நிதி உதவியளித்ததுடன், அதற்காக பாரிய தொகையொன்றை அரசாங்கம் செலவிட்டிருந்தது. 

ஜனாதிபதி கோட்டாபய, அதுவரை நடைமுறையில் இருந்த அந்த முட்டாள்தனமான மற்றும் அழிவுகரமான வேலைத்திட்டத்திற்கு இன்னொரு படி மேலே சென்று, விவசாயத்திற்கு பெரும் அழிவை ஏற்படுத்தும் வகையில் முழு நாட்டையும் இயற்கை விவசாயத்திற்கு மாற்றினார். 

மூடநம்பிக்கை விவகாரத்தில் பாரிய முன்னேற்றம் என்பது, ஜனாதிபதி கோட்டாபயவின் காலத்தில் திடீரென ஏற்படவில்லை. மாறாக, அதுவும் நீண்டகாலமாக  முன்னெடுக்கப்பட்டு வந்த ஒரு செயற்பாட்டின் விளைவாகும். 

நவீன அறிவியல் சார் புத்திஜீவிகள் தரப்பும், குறித்த மௌட்டீகங்களுக்கு எதிராக  வலுவான எதிர்ப்பை  வெளிப்படுத்தாத காரணத்தினால், கட்டுக்கதைகள் பெரிய அளவில் சமூகமயமாக்கப்பட்டது. 

நாட்டின் பாடசாலைக் கட்டமைப்பும், அறிவியலுக்குப் பதிலாக மௌட்டீகத்தை ஊக்குவிக்கும் ஒரு நிறுவன அமைப்பாகவும் செயல்பட்டது. பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களை, அதிபரின் அனுமதியுடன் வழிபாட்டுத் தலங்களுக்கு நேர்ச்சை வைப்பதற்கு அழைத்துச் செல்வது, ஆசிரியர்களின் உத்தியோகபூர்வ விடயமாக மாறியிருந்தது. 

நாட்டின் தொலைக்காட்சி  அலைவரிசைகளும் நாட்டு மக்களுக்கு ராகு காலங்ளை மட்டுமன்றி, எமன் நிற்கும் திசை குறித்தும் விளக்கம் கொடுத்தன.  

முன்னாள் பரீட்சை ஆணையாளர் ஒருவர் மாணவர்களை  ராகு கால தாக்கத்தில் இருந்து விடுவிக்கும் நோக்கில், சாதாரண தரப் பரீட்சை  தொடங்கும்  நாளை, திங்கட்கிழமைக்கு பதிலாக செவ்வாய்க்கு மாற்றி அமைத்திருந்தார். அவரது முட்டாள்தனமான செயலை கல்வித்துறை அதிகாரிகள் தடுக்கவில்லை. அந்த நடவடிக்கை விஞ்ஞானிகளிடமிருந்தோ ஆசிரியர்களிடமிருந்தோ கடும் எதிர்ப்பையும் ஏற்படுத்தவில்லை. 

இலங்கையில் தற்போது ஏற்பட்டுள்ள துரதிஷ்டமான நிலைமைக்கு, மௌட்டீகங்களுடன் தொடர்புடையவர்கள் மாத்திரமன்றி,  விஞ்ஞானத்துடன் தொடர்புடையவர்களும் காரணமாக  இருந்துள்ளனர் என்பதைப் புரிந்துகொள்வது சிரமமான விடயமல்ல. 

பொதுவாக இலங்கை மக்கள் -குறிப்பாக சிங்கள பௌத்த மக்கள்- சில யதார்த்தங்களைப் புரிந்து கொள்ளவோ அல்லது உணர்ந்து  கொள்ளவோ முடியாத ஒரு குறிப்பிடத்தக்க மனோ இயல்பு கொண்ட மக்களாகவே கருதப்பட வேண்டும் என்பதே எனது கருத்தாகும். 

உண்மையை ஏற்றுக்கொள்ள மறுக்கும் தன்மையும், அந்த மன இயல்பின் மற்றொரு பண்பாகும்.  உலகில் உள்ள அனைத்து இனங்களைப் பார்க்கிலும், தங்கள் இனமே உயர்ந்தது என்று சிங்களவர்கள் நினைக்கிறார்கள். அதே சமயம், மக்கள் தொகையில் பாதியளவிலான விவசாய சாதியைச் சேராதவர்கள், தாழ்ந்தவர்களாகப் கருதப்படுகிறார்கள். அது தமிழ் சமூகத்திலும் காணப்படும் ஒரு பண்பாகும். 

மேலே விவரிக்கப்பட்ட குணாதிசயங்களைக் கொண்ட- மிகவும் குறிப்பிடத்தக்க மற்றும் அசாதாரணமான மன இயல்புகள்- இலங்கைச் சமூகத்தைச் சுற்றிப் பிணைந்துள்ளதுடன்,  குறித்த அந்தக்  காரணியானது தற்போதைக்கு ஏற்பட்டுள்ள சரிவு, தோல்வி அல்லது திவால்நிலை ஆகியவற்றில் தாக்கத்தை ஏற்படுத்திய உந்து காரணியாகக் கருதலாம். 

குறித்த காரணி குறித்து அவதானம்செலுத்தப்படாத அதே வேளை,  அதன் இயல்பைப் புரிந்துகொள்ள சில பயனுள்ள எடுத்துக்காட்டுகளை மட்டுமே என்னால் வழங்க முடியும்.

அநகாரிக தர்மபால

சிங்களச் சமூகம் எழுத்தறிவு பெற்ற சமூகமாக மாறிய பின்னர், இலங்கையில் பணியாற்றிய ஐரோப்பிய சிவில் அதிகாரிகளால், சிங்களவர்களுக்கு அவர்களின் கடந்தகால வரலாறு தெளிவாக கற்பிக்கப்பட்டது. 

இலங்கையின் கடந்தகால நாகரிகம், குறிப்பாக அநுராதபுரம், பொலன்னறுவை போன்ற இராச்சியங்க ளுடன் தொடர்புடைத்தாக காணப்பட்ட வளர்ச்சி, அவர்களின் கலைகள், நீர்ப்பாசன முறைகள், விகாரைகள், தாது கோபுரங்கள் பற்றிய வரலாற்று, தொல்பொருள், மத மற்றும் இலக்கிய ஆராய்ச்சிகளில் ஈடுபட்டு அது குறித்து மதிப்புமிக்க நூல்களை வெளியிட்டவர்களில் முன்னோடிகளாகச் செயற்பட்டவர்கள், ஜோன் டொயிலி, அலெக்சாண்டர் ஜோன்ஸ்டன், ஆர். சி. வில்டர்ஸ், எச். டபிள்யூ. கோட்ரிங்டன், ஹியூ நெவில், ரிஸ் டேவிஸ்,தோமஸ் ஸ்டீல் மற்றும் எச். ஈ. பி. பெல் போன்ற இலங்கையில் பணியாற்றிய ஐரோப்பிய அரச அதிகாரிகளாகும். 

இலங்கையின் வரலாறு தொடர்பாக ஐரோப்பிய அதிகாரிகள் வெளிப்படுத்திய குறித்த விடயங்களை, இலங்கையிலுள்ள சில புத்திஜீவிகள் தவறாகப் புரிந்து கொண்டனர். அதற்கு சிறந்த எடுத்துக்காட்டாகக் குறிப்பிடத்தக்கவர், சிங்கள மக்களின் பிரதான சிந்தனையாளராக கருதக்கூடிய அநகாரிக தர்மபாலவாகும். 

ஐரோப்பிய அதிகாரிகள் ஆங்கிலத்தில் எழுதிய புத்தகங்களின் சாரத்தை, சிங்கள பௌத்த மக்களுக்கு முக்கியத்துவம் அளித்து கற்பித்துக் கொடுத்தவர் அவர்தான். பெருமைப்படத்தக்க மேம்பட்டதொரு நாகரிகத்தை இலங்கை கொண்டிருந்தது. ஆனால், அது உலகின் முக்கிய நாகரிகங்களில் ஒன்றாக இருக்கவில்லை. 

ஆனால் கடந்தகாலத்தில் இலங்கையின் பெருமைக்குரிய அம்சங்கள் பற்றி, ஐரோப்பிய சிவில் அதிகாரிகள் எழுதிய புத்தகங்களின் அடிப்படையில், இலங்கையின் சிங்கள பௌத்த நாகரரிகத்தை  உலகில் நிலவிய அனைத்து நாகரிகங்களிலும் மிக  உயர்வானதாக – உன்னதமானதாக தர்மபால சித்தரித்தார். 

அதன் காரணமாகவே உலகில் தோன்றிய உன்னதமான, சிரேஷ்ட மக்கள் பிரிவினராக சிங்கள பௌத்தர்கள் கருதப்படத் தக்கவர்கள் என்ற கோட்பாட்டை அவர் முன்வைத்தார் 

பி. எச். பார்மர் என்பவரும் இலங்கை, சிங்கள இனம், பௌத்தம் ஆகியன அனைத்து நாடுகளையும் விடவும், மதங்கள் மற்றும் இனக்குழுக்களைக் காட்டிலும் சிரேஷ்டமானவை என்றும் உன்னதமானவை என்றும் சிந்திப்பதற்கு,  மகாவம்சம் எவ்வாறு தாக்கத்தை ஏற்படுத்தியது என்பது குறித்து  கூர்மையானதொரு பகுப்பாய்வு செய்துள்ளார். 

தர்மபாலாவின் செல்வாக்கு அதனையும் விட அதிகமானதாக  இருந்தது. இலங்கையில் உள்ள சிங்கள பௌத்த நாகரிகமே உலகில் இதுவரை தோன்றிய மிகச்சிறந்த நாகரிகம் என்று நம்பும் சூழ்நிலையை, சிங்கள பௌத்த மக்கள் மத்தியில் உருவாக்கியவர் தர்மபாலவாகும். உலக நாகரிகங்களைப் பற்றிய சீரான புரிதல் தர்மபாலவுக்கு இல்லை என்பது அதன் மூலம் தெளிவாகின்றது. 

ஆனால், 21ஆம் நூற்றாண்டில் வாழும் சிங்கள பௌத்த அறிஞர்களும் இதே கருத்தைக் கொண்டுள்ளதை எவ்வாறு விளக்குவது? 

எல்லோரையும் விட நாமே சிறந்தவர்கள் என்ற அகங்கார மனப்பான்மையே, நாட்டு விவகாரங்களில் குழப்பத்தை ஏற்படுத்தி, பெரும் இரத்தக்களரியையும் ஏற்படுத்தியது. 

இன்று, அவ்வாறு பெருமைக்குரியதாக கருதப்பட்ட நாடும் அதன் மக்களும் முற்றிலும் நிர்க்கதியான நிலையில்- தோல்வியடைந்து திவாலான நிலையில் உள்ளனர். 

அரசியலமைப்பை துஷ்பிரயோகம் செய்தல்

என்னுடைய இரண்டாவது எடுத்துக்காட்டு மூலம் அந்தக் குறிப்பிடத்தக்க மனோநிலையை நன்றாகப் புரிந்துகொள்ள முடியும் என்று நினைக்கிறேன். 

மக்களின் இறையாண்மையை ஏற்றுக்கொள்ளும், எழுத்து வடிவிலான அரசியலமைப்புகளை அடிப்படையாகக் கொண்ட ஜனநாயக அரசியலமைப்புகளின் தோற்றமானது, நிலப்பிரபுத்துவ முடியாட்சி முறை வீழ்ச்சியடைந்து, நவீன தேசிய அரசுகளின் தோற்றத்துடன்தான் சமகாலத்தில் தொடங்குகிறது. 

இது 200 ஆண்டுகளுக்கு மேல் பழமையானது. அந்தக் கட்டமைப்புக்கு மாற்றம்பெற்ற நாடுகள்- தத்தமது நாட்டின் அனைத்து சட்டங்களுக்கும் மேலாக- அரசியலமைப்பை உச்ச சட்டமாக கருதின. ஜனநாயக நாடுகள் அரசியலமைப்பைப் பாதுகாத்து,  அதற்கு உச்சபட்ச கௌரவமும் வழங்கின. அரசியலமைப்பை மீறுவது கடுமையான குற்றமாக கருதப்பட்டது. எந்த காரணத்திற்காகவும் அரசியலமைப்பு மீறப்பட்டிருந்தால், அது தாமதமின்றி சீர் செய்யப்பட்டது. 

அமெரிக்க ஜனாதிபதி ரூஸ்வெல்ட்டினால் மேற்கொள்ளப்பட்ட அரசியலமைப்பு மீறலை, 1952 இல் நிறைவேற்றிக்கொள்ளப்பட்ட 22 வது திருத்தம் சீர்செய்ததுடன், 1978 இல் நிறைவேற்றிக்கொள்ளப்பட்ட 43 மற்றும் 44 வது திருத்தங்கள், இந்தியாவில் இந்திரா காந்தியின் ஆட்சியின்போது 1976 இல் ஏற்றுக்கொள்ளப்பட்ட 42 வது திருத்தத்தின் மூலமாக மேற்கொள்ளப்பட்ட அரசியலமைப்பு மீறலை சீர்செய்திருந்தன. 

ஆச்சரியம் என்னவென்றால், சுதந்திரம் பெற்றதில் இருந்து, அரசியல் நாகரிகத்திற்கு அப்பாற்பட்ட தேசமொன்றின் ரூபத்தில், அவ்வப்போது அரசியலமைப்பை மீறும் கொள்கையை இலங்கை கடைப்பிடித்து வருகிறது. 

டி.எஸ். சேனநாயக்கவும், எஸ். டபிள்யூ. ஆர். டி. பண்டாரநாயக்காவும், சிறிமா பண்டாரநாயக்காவும் அரசியலமைப்பை மீறியுள்ளனர். 1978 ம் ஆண்டின் ஜனாதிபதி அரசியலமைப்பு முறை உருவாக்கப்பட்ட பின்னர், அரசியலமைப்பை மீறுவது பாரிய அளவில் நடக்கும் சம்பவம் ஒன்றாக மாறியதுடன்,  அரசியலமைப்பின் சில மீறல்கள் சட்டவாக்கம், நிறைவேற்று மற்றும் நீதித்துறை ஆகிய நிறுவனங்கள் கூட்டிணைந்து மேற்கொண்ட விடயங்களாக நடைபெற்றன. 

அரசியலமைப்பு மீறல்கள் விடயத்தில் இலங்கை உலகிலேயே ஈடு இணையற்ற நிலையில் உள்ளது.. ஷிராணி பண்டாரநாயக்கவைத் தவிர, அரசியலமைப்பு மீறல்களுக்கு எதிராக புத்திஜீவிகளிடம் இருந்தோ அல்லது பொதுமக்கள் மத்தியில் இருந்தோ வலுவான எதிர்ப்பு இயக்கங்கள் உருவாகவில்லை. 

ஷிராணி பண்டாரநாயக்க சம்பவத்தைத் தவிர, சட்டத்தரணிகள் சங்கமும் கூட, அரசியலமைப்பு மீறல்களுக்கு எதிராக நிற்கும் கொள்கையைப் பின்பற்றவில்லை. 

சுதந்திரம் அடைந்ததில் இருந்து, தமது நாட்டின் உச்சபட்ச சட்டம் தொடர்ந்து மீறப்படும் சூழ்நிலை இருந்தால் -அது குறித்து நாட்டின் புத்திஜீவிகளிடம் இருந்தேனும் கடும் எதிர்ப்பு வரவில்லை என்றால் – அந்தச் சமூகம் ஆரோக்கியமான மனோநிலை கொண்ட சமுதாயமாக எப்படி கருதப்படும்? 

 

Siraj Mashoor – Face book

 

மேலும், அந்த அரசை எவ்வாறு தார்மீக அரசாக கருத முடியும்? அந்தத் தேசத்தில் இப்போது ஏற்பட்டுள்ள பயங்கரச் சரிவைக் கண்டு நாம் எப்படி ஆச்சரியப்பட முடியும்?

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here