இலங்கை வானொலியின் அதிமூத்த அறிவிப்பாளர் மறைந்தார்

0
69

“இலங்கை வானொலியின் அதிமூத்த அறிவிப்பாளர்களில் ஒருவரான வீ. நாகலிங்கம் அவர்கள், 2024ஆம் ஆண்டு, டிசம்பர் மாதம், 25ஆம் திகதி  ரொரன்ரோவில் காலமானார்.

1934ஆம் ஆண்டு, ஓகஸ்ட் மாதம், 26ஆம் திகதி யாழ்ப்பாணம், அரியாலையில் பிறந்த இவர், 1957ஆம் ஆண்டளவில் இலங்கை வானொலியின் கல்விச்சேவை நிகழ்ச்சிகளிலும் கிராமிய நிகழ்ச்சிகளிலும் கலைஞராகப் பங்குபற்றி ஒலிபரப்புத் துறையில் தனது பணியை ஆரம்பித்தார்.

1958ஆம் ஆண்டு, பகுதிநேர அறிவிப்பாளர் தெரிவுக்குத் தோற்றிப் பகுதிநேர அறிவிப்பாளராகத் தெரிவுசெய்யப்பட்டு, வர்த்தகசேவையில் பணிபுரிய ஆரம்பித்தார்.

அரச உத்தியோகத்தில் நிரந்தரப் பதவிவகித்த இவர், வானொலியில் பகுதிநேர அறிவிப்பாளராகவும், அப்போது தமிழ் வர்த்தகசேவைக்குப் பொறுப்பாக இருந்த காலம்சென்ற எஸ். பீ. மயில்வாகனம் அவர்களுடன் இணைந்து பல நிகழ்ச்சிகளை வழங்கியிருக்கிறார்.

விளம்பர முகவர் நிறுவனமொன்றை ஆரம்பித்து அதன்மூலம் பல விளம்பர நிகழ்ச்சிகளை வானொலியில் அறிமுகம் செய்தார். இவரால் விளம்பரதாரராக அறிமுகப்படுத்தப்பட்ட ப்றவுண்ஸன் இன்டஸ்ட்றீஸ் ஸ்தாபனத்தினரே, அப்போது வானொலியில் ஒலிபரப்பப்பட்டு மிகப் பிரசித்திபெற்ற ‘புழுகர் பொன்னையா’ நாடகத்துக்கு அனுசரணை வழங்கினார்கள்.

1960களின் பிற்பகுதியில் வர்த்தகசேவையில் ஒலிபரப்பான ஈழத்துப் பாடகர்களை அறிமுகம்செய்யும் ‘இசையரங்கு’ நிகழ்ச்சியை எஸ். பீ. மயில்வாகனம் அவர்களுடன் இணைந்து தயாரித்தவர் வீ. நாகலிங்கம் அவர்கள்.

1970களில் அரசாங்கத்தில் உயர்நிர்வாகப் பதவியை வகித்துக்கொண்டே அப்போது இலங்கையில் பிரபலமாக இருந்த பொப்இசைத் துறையிலும் ஆர்வம்காட்டி, ‘உதயதாரகை’ என்ற பெயரில் பல பொப்இசை நிகழ்ச்சிகளை மேடையில் தயாரித்து வழங்கினார்.

1983ஆம் ஆண்டு இனக்கலவரத்தால் ஏற்பட்ட பாதிப்பைத் தொடர்ந்து கனடாவுக்குக் குடிபெயர்ந்த வீ. நாகலிங்கம் அவர்கள், தனது பிள்ளைகளுடன் வாழ்ந்துவந்தார்.

நேற்றுக் காலமான வீ. நாகலிங்கம் அவர்களின் பூதவுடல், இம்மாதம் 29ஆம் திகதி, ஞாயிற்றுக்கிழமை,
8911 Woodbine Avenue, Markham, Ontario
என்ற முகவரியில் அமைந்துள்ள
Chapel Ridge Funeral Home -ல்
நண்பகல் பன்னிரண்டு மணிதொடக்கம் இரண்டுமணிவரை பார்வைக்கு வைக்கப்பட்டு, இறுதிக்கிரியைகள் நடைபெற்று மாலை 4.30க்கு
2 Stalwart Industrial Drive, Gormely, Ontario
என்ற முகவரியில் அமைந்துள்ள
North Toronto மயானத்தில் தகனம் செய்யப்படும்.

அமரர் வீ. நாகலிங்கம் அவர்களின் ஆத்மசாந்தி வேண்டிப் பிரார்த்திப்போம்.”

சிரேஷ்ட ஊடகவியலாளர்

என். மதியழகன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here