இலவச பாடநூல் அச்சிடுவதற்கு ரூ.16.5 மில்லியன்

0
213

பாடசாலை மாணவர்களுக்கு இந்த வருடத்தில் இலவச பாடப்புத்தகங்களை அச்சிடுவதற்காக அரசாங்கம் 16.5 மில்லியன் ரூபாவை செலவிடவுள்ளதாக கல்வியமைச்சர் சுசில் பிரேம ஜயந்த தெரிவித்தார்.

இதற்கு முன்னர் மேற்படி இலவச பாடநூல்கள் அச்சிடுவதற்காக 4.5 மில்லியன் ரூபாவே செலவிடப்பட்டு வந்துள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

நாடு தற்போது எதிர்கொண்டுள்ள பொருளாதார சவால்களுக்கு மத்தியில் இந்தளவு தொகையை பாடப்புத்தகங்கள் அச்சிடப்படுவதற்கு செலவிடப்படவேண்டியுள்ளதாகவும் பாடசாலை கல்வி சம்பந்தமான கல்வி அபிவிருத்தி நிதியமொன்றை ஸ்தாபிப்பதற்கு கவனம் செலுத்தப்பட்டு வருவதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையில் நாடு முழுவதும் ரீதியில் விசேட சித்திபெற்ற மாணவர்களை பாராட்டும் நிகழ்வு கல்வியமைச்சில் நேற்று நடைபெற்றது.

அதுதொடர்பில் மேலும் தெரிவித்துள்ள அமைச்சர்,

பல்வேறு சவால்களை எதிர்கொள்ள நேர்ந்தாலும் மக்களுக்கு தேவையானதை பெற்றுக்கொடுப்பதற்கு அரசாங்கம் கடமைப்பட்டுள்ளது. அதற்கிணங்கவே இதுபோன்ற நிதியங்களை ஸ்தாபிக்கவேண்டிய அவசியம் உணரப்பட்டுள்ளது.

அதேவேளை, பாடசாலை சீருடை மற்றும் ஏனைய பாடசாலை உபகரணங்களை கொள்வனவு செய்வதற்காக தனியார் துறையின் ஒத்துழைப்பை பெற்றுக்கொள்வதற்கான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here