.
இலங்கை போக்குவரத்து சபை சாலைகளில் தனியார் பேருந்துகள் எரிபொருள் பெறும்போது பாரிய பிரச்சினைகள் ஏற்படுகிறது. இந்நிலையில் உரியமுறையில் எரிபொருள் தமக்கு வழங்கமையையடுத்து யாழ்ப்பாணம் மாவட்ட தனியார் பேருந்து உள்ளூர் மற்றும் வெளியூர் சேவைகள் இன்று இடம்பெறவில்லை.
இன்று திங்கள் கிழமையும் தமக்கு எரிபொருள் வழங்கப்படாவிடின் செவ்வாய் முதல் தொடர்ந்து சேவைகள் இடம்பெறாது.
மேலும் யாழ்ப்பாணம் மாவட்ட செயலருடன் இடம்பெற்ற கலந்துரையாடலுக்கு பின்னும் எரிபொருளை பெறுவது தோல்வியில் முடிந்துள்ளது.
இதேவேளை இ.போ.ச. பேருந்து கடந்த வெள்ளிக்கிழமை இரவு 9 மணியளவில் யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு நோக்கி புறப்பட்ட 57 வழித்தட இ.போ.ச பேருந்தின் சாரதி மற்றும் காப்பாளர் இருவரும் கல்கமுவ சாலை இ.போ.ச சாலை ஊழியர்களினால் தலாதகம எனும் பகுதியில் தாக்கப்பட்டுள்ளனர்.
இந்தத் தாக்குதலைக் கண்டித்தும், தாக்குதல் நடத்தியவர்களை கைது செய்ய வலியுறுத்தியும் இலங்கை போக்குவரத்து சபையின் யாழ். சாலை ஊழியர்கள் நேற்று பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டனர்.
எனினும் தாக்குதலை நடாத்திய ஊழியர்களுக்கு எதிராக உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது. இதன் காரணமாகவே இன்றும் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
இதனால் ஏனைய சாலை மற்றும் வெளிமாவட்ட பஸ்கள் எதுவும் யாழ்ப்பாணம் பஸ் நிலையத்திற்குள் நுழையாதவாறு வாயில் தடைபோடப்பட்டுள்ளது.
இதேவேளை பேருந்து சேவைகள் இன்மையால் அலுவலக பணியாளர்கள் மற்றும் வைத்தியசாலைக்கு கிளினிக் செல்லும் நோயாளாளர்கள் என பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். தற்போது எரிபொருள் நெருக்கடியால் பேருந்துகளிலேயே பலர் பயணிக்கும் நிலையில் இந்த பணி புறக்கணிப்பு மேலும் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.