ஈராக் – பாக்தாத்தில் உள்ள உயர் பாதுகாப்பு வலயத்தை மீறி, அந்நாட்டின் நாடாளுமன்றக் கட்டடத் தொகுதிக்குள் நூற்றுக்கணக்கான போராட்டக்காரர்கள் நுழைந்துள்ளனர்.
போராட்டக்காரர்கள் மீது பொலிஸார் கண்ணீர்ப்புகை மற்றும் தண்ணீர்த்தாரைப் பிரயோகத்தை மேற்கொண்டுள்ளனர் என்று தெரிவிக்கப்படுகின்றது.
இந்தச் சம்பவத்தின்போது, நாடாளுமன்ற உறுப்பினர்கள் எவரும் அங்கு இருந்திருக்கவில்லை என்று அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
போராட்டக்காரர்கள் பாக்தாத்தின் அதி உயர் பாதுகாப்பு வலயத்துக்குள் ஊடுருவியுள்ளனர். அங்கு தூதரகங்கள் உட்பட தலைநகரின் மிக முக்கியமான கட்டடங்கள் உள்ளன.
பாதுகாப்புப் படையினர் ஆரம்பத்தில் போராட்டக்காரர்களை தடுத்து நிறுத்தியதாகத் தோன்றினாலும், பின்னர் அவர்கள் நாடாளுமன்றத்தை முற்றுகையிட்டனர் என்று ஏ.எப்.பி. செய்திச் சேவையிடம் அந்நாட்டுப் பாதுகாப்பு பிரிவு அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்துக்கு நுழைந்து பாடல் பாடி, நடனமாடி, மேசைகளில் படுத்திருந்த போராட்டக்காரர்களைக் கட்டடத்தை விட்டு வெளியேறுமாறு ஈராக் நாட்டின் தற்போதைய பிரதமர் முஸ்தபா அல் – காதிமி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
மதபோதகர் முக்தாதா அல் – சதரின் ஆதரவாளர்கள், பிரதமர் பதவிக்குப் போட்டி வேட்பாளரை நியமிப்பதற்கு எதிர்ப்புத் தெரிவித்து இவ்வாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
கடந்த ஆண்டு ஒக்டோபர் மாதம் நடைபெற்ற தேர்தலில் அல்-சதருடைய கட்சி 73 இடங்களைக் கைப்பற்றி அதிக ஆசனங்களைப் பெற்ற கட்சியாகத் திகழ்ந்தது.
எனினும், ஆட்சிப் பொறுப்பு ஏற்பது தொடர்பில், கூட்டணி கட்சிகளுக்கு இடையே இருந்த சிக்கல்கள் காரணமாக இழுபறி நீடித்தது.
இந்த நிலையில் மொஹட் அல் – சுடானி பெயர் பிரதமர் பதவிக்காக அறிவிக்கப்பட்டது. இதனை எதிர்த்து அல் – சதருடைய ஆதரவாளர்கள் போராட்டத்தில் இறங்கியுள்ளனர்.
இதேவேளை, கடந்த 2016 ஆம் ஆண்டு அல் சதருடைய ஆதரவாளர்கள் நாடாளுமன்றத்துக்குள் நுழைந்து இதே போன்ற போராட்டத்தை நடத்தினர்.
மேலும், கடந்த 2019 ஆம் ஆண்டு பொதுமக்கள் பெருமளவில் ஒன்றுதிரண்டு நாட்டில் ஏற்பட்ட ஊழல் மற்றும் வேலைவாய்ப்பின்மை தொடர்பாகப் பெரும் போராட்டம் நடத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது.