கடந்த இரண்டரை வருட கால இடைவெளிக்குப்பின், அண்மையில் முதற்தடவையாக நேரடிப் பிரசன்னத்துடன், இலங்கைப் பல்கலைக்கழக நூலகர் அமைப்பினர், இலங்கைப் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் நூலக, தகவல் விஞ்ஞான நிலைக்குழுவோடிணைந்து, சர்வதேச ஆய்வு மாநாடொன்றைப் பிரமாண்டமானமுறையில் கொழும்பில் ஏற்பாடு செய்திருந்தனர்.
கல்வி மற்றும் நூலகத் தகவல் விஞ்ஞானத் துறைகளில் வீரியம் பெற்றுவரும் பல்வேறு அபிவிருத்திப்போக்குகளை ஆய்வுகளினூடு ஆராய்ந்த இம்மாநாட்டில், மாலைதீவு, இந்தியா மற்றும் இலங்கையைச் சேர்ந்த பல்வேறு ஆய்வாளர்களும், துறைசார் விற்பன்னர்களும் தத்தமது புலமைசார் படைப்புக்களை விஞ்ஞானபூர்வமாக நிரூபித்ததுடன், சமகாலச் சவால்களை எவ்வாறு ஆரோக்கியமாக மேற்கொண்டு, நூலகத்துறையை மீள் பொறிமுறைக்குள்ளாக்கும் நுட்பமுறைபற்றியும் ஓர் அறிவுசார் குழுநிலை விவாதமும் நடைபெற்றது.
இலங்கைப் பல்கலைக்கழக நூலகர் அமைப்பின் தலைவரும், இச்சர்வதேச ஆய்வு மாநாட்டின் இணைத்தலைவருமான டாக்டர் டபிளியு. ஜெ. ஜெயராஜ் இது குறித்துக் கூறுகையில்,
ஓர் நாட்டின் தர நிர்ணயமானது, அறிவுசார் சமூகத்தின் விகிதாசாரத்தை வைத்தே கணிக்கப்படுவதுடன், இவ்வறிவுசார் சமூகத்தைச் செல்நெறிப்படுத்துவதில் நூலகத் தகவல்துறை பாரிய பங்காற்றிவருவதால், கொரோனா பேரிடர்பாட்டுக்குப் பின்னரான புதிய ,யல்புநிலைக்கேற்ப மீள் உருவாக்கலுக்கு ள்ளாகிவரும் நூலகத்துறையினை மக்களுடன் இணைக்க வேண்டிய தேவைப்பாடுள்ளதெனக் குறிப்பிட்டார்.
பிரதம அதிதியாக, இலங்கைப் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் நூலக, தகவல் விஞ்ஞான நிலைக்குழுத்தலைவர் சிரேஸ்ட பேராசிரியர் பிரேமகுமார டி. சில்வா மற்றும் கௌரவ அதிதியாகக் கிழக்குப் பல்கலைக்கழக உபவேந்தர் பேராசிரியர் வி. கனகசிங்கம் கலந்து சிறப்புரையாற்றிய இச்சர்வதேச மாநாட்டில், தலைவருக்கான ஆரம்ப உரையினை அமைப்பின் தலைவர் டாக்டர் டபிளியு. ஜெ. ஜெயராஜ், மாநாட்டு அறிமுக உரையினை மாநாட்டு இணைத்தலைவர் டாக்டர் சி. சி. ஜயசுந்தர ஆகியோர் நிகழ்த்தியிருந்தனர்.
பிரதம அதிதி தமதுரையில், கற்றல் மற்றும் தொடர்பாடல் வலையமைப்பினைக் கட்டியெழுப்பிவரும் பல்கலைக்கழக நூலகங்களானது, மக்களை இலகுநிலையில் உள்வாங்கும் நிலையில் தமது பாரிய பங்களிப்பினை அளித்து வருவதை வெகுவாகப் பாராட்டிப் பேசினார்.
கௌரவ அதிதி தமதுரையில், நூலகங்களின் மரபுசார் வழிமுறைகளிலிருந்து தொழினுட்பரீதியிலான படிமுறை வளர்ச்சிக்கு அத்திவாரமிடுவதில் இவ்வாறான ஆய்வு மாநாடுகள் செல்வாக்குச் செலுத்துவதையும்;, எதிர்காலச் சந்ததியினரைப் புடமிடுவதில் மேற்கொள்ளப்பட்டுவரும் நூலக ஆய்வுகளின் தளங்களையும் வெகுவாகச் சிலாகித்துப் பேசினார்.
இம்மாநாட்டின் ஆரம்ப நிகழ்வில் அரங்கேறிய, கிழக்குப் பல்கலைக்கழக சுவாமி விபுலானந்தா அழகியற் கற்கைகள் நிறுவக பட்டதாரி மாணவர்களின் கலாச்சார நடனம் பார்வையாளர்களைப் பெரிதும் கவர்ந்தது.
மேலும் ஜெனரல் சேர் ஜோன் கொத்தலாவெல பாதுகாப்புப் பல்கலைக்கழக நூலகர் டாக்டர் வத்மானெல் செனவிரெட்ண, களனிப் பல்கலைக்கழக நூலக, தகவல் விஞ்ஞான சிரேஸ்ட விரிவுரையாளர் டாக்டர் நாமலி சுரவீர மற்றும் கொழும்புப் பல்கலைக்கழக பிரதி நூலகர் டாக்டர் டி. சந்திராணி குருப்பு ஆகியோர் தலைவர்களாகவும், இலங்கைப் பல்கலைக்கழக நூலகர் அமைப்பின் பொதுச் செயலாளர் டாக்டர் கல்பனா சந்திரசேகர், நிர்வாகக்குழு உறுப்பினர்களான டாக்டர் சிராந்தி விஜேசுந்தர, டாக்டர் கே.டி.என் ஹர்சனி ஆகியோர் அறிக்கையாள ர்களாகவும் செயற்பட்ட மூன்று ஆய்வரங்குகளில் பதினொரு ஆளுமை ஆய்வுகள் நிகழ்த்தப்பட்டு விவாதிக்கப்பட்டன.