சுதந்திரம் அடைந்தபோது இந்தியா துண்டாகும் என பலர் கணித்தனர். ஆருடம் அனைத்தையும் தகர்த்து தேசியக்கொடி பறக்கிறது. உலக ஜனநாயகத்தின் தாய்நாடு இந்தியாதான். உலகிற்கு ஜனநாயகத்தை சொல்லிக்கொடுத்தது இந்தியா . வளர்ச்சியை நோக்கி விரைவாக பயணிக்க வேண்டிய நேரமிது என்றும், ஒவ்வொரு இந்தியனும் வேகமாக அடியெடுத்து வைக்கும் நேரமிது என்றும் இந்தியாவின் 76ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு பிரதமர் மோடி டெல்லி செங்கோட்டையில் உரையாற்றினார்.
75ஆம் ஆண்டு நிறைவுபெற்று, 76ஆம் ஆண்டு சுதந்திர தினத்தையொட்டி மகாத்மா காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திவிட்டு, செங்கோட்டையில் தேசியக் கொடியை ஏற்றிவைத்தார் பிரதமர் மோடி. அதன்பின்னர் முப்படைகளின் அணிவகுப்பு மரியாதையை அவர் ஏற்றுக்கொண்டார். பின்னர் நாட்டுமக்களுக்கு சுதந்திர தின வாழ்த்து தெரிவித்து தனது உரையை துவங்கினார் பிரதமர் மோடி. அப்போது பேசிய அவர், “உலகின் எல்லா பகுதியிலும் இந்திய தேசியக் கொடி பறக்கிறது. இந்தியாவின் சுதந்திர போராட்ட வரலாறு நீண்ட நெடியது. வளர்ச்சியை நோக்கி விரைவாக பயணிக்க வேண்டிய நேரமிது. ஒவ்வொரு இந்தியனும் வேகமாக அடியெடுத்து வைக்கும் நேரமிது.
சுதந்திரத்திற்காக நாம் கொடுத்த தியாகங்கள் மிகப்பெரியது. சுதந்திரம் பெற்றுக் கொடுத்தவர்களின் நோக்கத்தை நிறைவேற்றுவோம். பெண்களின் சக்தியை சுதந்திர போராட்டத்தில் அவர்கள் வெளிப்படுத்தினர். நேரு, பட்டேல், சாஸ்திரி, லோகியா ஆகியோர் சுதந்திர போராட்டத்தை முன்னெடுத்தனர். காந்தி, அம்பேத்கர், பகத்சிங் உள்ளிட்டோர் சுதந்திரத்திற்கு வழிகாட்டினர். சுதந்திர போராட்டத்தில் பழங்குடியினத்தவர் பெருமளவில் பங்களித்தனர். விடுதலை போராட்ட வீரர்களுக்கு தலை வணங்குகிறேன். இந்தியா நாளுக்குநாள் புதிய வளர்ச்சி அடைந்து வருகிறது.
விவேகானந்தர், தாகூர் ஆகியோரின் பங்களிப்பை மறக்க முடியாது. நாட்டின் 140 கோடி மக்களை தேசியக் கொடி ஒருங்கிணைக்கிறது. இந்தியாவின் அனைத்துப் பிரிவினரும் சுதந்திர போராட்டத்தில் பங்கேற்றனர். நாடு இரண்டாக பிரிக்கப்பட்டபோது மக்கள் கடும் இன்னல்களை சந்தித்தனர். 75 ஆண்டுகளை கடந்த சுதந்திரம் நாட்டின் புதிய தொடக்கம். பல ஆண்டுகளாக மறைக்கப்பட்ட சுதந்திர வீரர்களை வெளிக்கொணர்வோம்..
பஞ்சம், போர், தீவிரவாதம் அனைத்தையும் தாண்டி முன்னேறுகிறது இந்தியா. பன்முகத்தன்மையே இந்தியாவின் வலிமை. சுதந்திரத்திற்கு பிறகு பிறந்தவன் என்றாலும் தியாகங்களை உணர்ந்துள்ளேன். மகளிர், பழங்குடிகள் முன்னேற்றத்திற்கு அனைவரும் பாடுபட வேண்டும். கடைசி மனிதனுக்கும் அனைத்தும் கிடைக்க வேண்டும் என்பதே இலக்கு. வளர்ச்சிக்காக நாட்டு மக்களை மேலும் காத்திருக்க செய்ய முடியாது.
மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்ற சிறப்பான வாய்ப்பு கிடைத்துள்ளது. 75 ஆண்டுகள் ஆன நிலையில் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றுவது கட்டாயம். கோரிக்கையை ஏற்று தேசியக்கொடியை மக்கள் பறக்கவிட்டதில் மகிழ்ச்சி. இல்லங்களில் தேசியக்கொடி ஏற்றி நாட்டுப்பற்றை மக்கள் வெளிப்படுத்தியுள்ளனர். நாட்டில் தயாரிக்கப்பட்ட கொரோனா தடுப்பூசி 200 கோடி டோஸ்களை தாண்டியுள்ளது. பல சவால்களுக்கு இடையிலும் இந்தியா வேகமாக முன்னேறுகிறது.
அரசியல் நிலைத்தன்மை எவ்வளவு முக்கியம் என்பதை உலகிற்கு இந்தியா காட்டியுள்ளது. அனைவருக்கும் நல்லாட்சி; அனைவருக்கும் வளர்ச்சி என்பதே இலக்கு. இந்திய வரலாற்றில் அடுத்த 25 ஆண்டுகள் மிக முக்கியம். உலக நாடுகள் தங்கள் பிரச்னையை இந்தியாவின் வழியில் தீர்வுகாண முயல்கின்றன. மிகப்பெரிய திட்டங்களை தீட்டி செயல்படுத்த வேண்டும் என்பதே இலக்கு. அந்நிய ஆட்சியாளர்களின் தாக்கங்களை முழுவதுமாக அகற்ற வேண்டும். அடிமைத்தனத்தை முழுவதுமாக வேரறுக்க வேண்டும்