உலகில் அதிக பாதுகாப்பு செலவீனங்கள் செய்யும் நாடுகளில் இலங்கை 10 ஆவது இடத்தில் உள்ளதாக இலங்கை நிதியமைச்சினால் நடத்தப்பட்ட சமீபத்திய பொருளாதார ஆய்வு தெரிவித்துள்ளதாக சிங்கள வார ஏடொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
இன்று ஞாயிற்றுக்கிழமை வெளியான அந்த வார ஏட்டின் செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
அரசாங்க செலவீனத்தில் உலகிலேயே பாதுகாப்புக்காக அதிகம் செலவிடும் நாடு வடகொரியா. அமெரிக்கா, சீனா, பிரித்தானியா, ஜப்பான், பிரான்ஸ் மற்றும் இந்தியா போன்ற சக்தி வாய்ந்த நாடுகள் தங்களது பொதுச் செலவில் அதிக சதவீதத்தை பாதுகாப்புக்காக ஒதுக்கியுள்ளன.
இவ்வளவு பாரிய பாதுகாப்பு செலவீனங்களைக் கொண்ட இலங்கையின் பொருளாதார வளர்ச்சி விகிதம் இந்த ஆண்டு எதிர்மறை 9 (-9) ஆக குறைந்துள்ளது. இதன் காரணமாக, அடுத்த ஆண்டு தொடக்க பாதிக்குள், நாட்டின் பொது மற்றும் தனியார் துறைகளில் பணிபுரியும் சுமார் 200,000 பணியாளர்கள் வேலை இழப்பர் என்ற ஆய்வு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆசியாவிலேயே அதிக சதவீத அரச பணியாளர்களைக் கொண்ட நாடாகவும் இலங்கை திகழ்கின்றது என்பதும் அந்த அறிக்கை காட்டும் மற்றுமொரு சிறப்பு விடயமாகும்.
இலங்கையின் பணியாளர்களில் 18% பேர் அரச பணியாளர்கள். ஆனால் மிகவும் வளர்ந்த மலேசியாவில் அந்த சதவீதம் 14%. மியான்மரில் 5%. ஒட்டுமொத்த ஆசியாவில், மற்ற நாடுகளில் உள்ள அரசு பணியளார்களின் விகிதம் 10% ஆகும்.
இந்த தனித்துவமான பொருளாதார தரவுகளை குறிப்பிடும் கணக்கெடுப்பு அறிக்கையானது, நிதியமைச்சகத்துடன் இணைந்து நாட்டில் உள்ள பிரபல தனியார் பொருளாதார ஆய்வு நிறுவனம் ஒன்றினால் தயாரிக்கப்பட்டுள்ளது.
இந்த அறிக்கை விரைவில் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என்று நிதியமைச்சின் மூத்த செய்தித் தொடர்பாளர் எமது வார ஏட்டிடம் தெரிவித்துள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.