உலக நாடுகளுக்கு உணவளித்த எமது நாட்டை பிச்சை எடுக்கும் நிலைக்கு கொண்டு சென்றிருப்பதானது எமது தேச தலைவர்களின் சிறுபிள்ளைத்தனமான வேலை என்று ஆதி குடிவாசிகளின் தலைவர் வன்னில அத்தோ குற்றம் சாட்டியுள்ளார்.
இது தொடர்பாக சிங்கள இணையத்தளம் ஒன்றுக்கு அவர் வழங்கிய நேர்காணலில் கூறியதாவது:
எமது நாடு பிச்சை எடுக்கும் நாடு அல்ல. பிற நாடுகளுக்கும் உணவளித்து உதவிய நாடு. எமது நாடு மாபெரும் தேசம் என்று எமது தலைவர்கள் கூறி வருகின்றனர். தற்போது அந்த மாபெரும் தேசமானது நாடு விட்டு நாடு சென்று பிச்சை எடுத்து சாப்பிடும் நிலைக்கு சென்றுவிட்டது.
எமது நாடு இந்த நிலைமைக்கு சென்றதற்கு அனைவரும் பொறுப்பேற்க வேண்டும். தற்போது எமது அரசியல்வாதிகள் ஆட்சியை கைப்பற்றும் வழிமுறை தொடர்பாகவே சிந்தித்து வருகின்றனர்.
எமது நாட்டை வீழ்ச்சியடைந்த இடத்தில் இருந்து எப்படி மீட்பது என்று சிந்திக்க வேண்டும். ஆனால், அவர்கள் பிச்சை எடுக்கும் நாடு என்ற நிலையை ஆயுதமாக பயன்படுத்தி அதிகாரத்தை அடைய முயற்சிக்கின்றனர்.
ஆட்சிக்கு வந்தால் என்ன செய்வது? செய்வதற்கு ஏதாவது உள்ளதா? தற்போது யாரும் தனியாக பயணிக்க முடியாது என்பதை நான் புரிந்து கொண்டுள்ளேன். அனைவரும் ஒன்றிணைந்து செயற்படவில்லை எனில் சிறிது காலத்தில் நாம் அனைவரும் பாரிய நெருக்கடிக்கு உள்ளாக வேண்டி வரும்.
நாடு அனைத்து துறைகளிலும் அதள பாதாளத்துக்கு சென்றுவிட்டது. ஒரே இரவில் உரம் தடை செய்யப்பட்டது. அதன் முடிவுகள் தற்போது கிடைத்துள்ளன. விவசாயம் முற்றாக செயல் இழந்துவிட்டது.
உணவு இருந்தால்தான் ஒரு நாடு வாழ முடியும். உணவு உண்ண மனிதன் இல்லாத நாட்டை எப்படி ஆள்வது? எந்த நாட்டிலும் யார் அரசியல்வாதிகளாக உருவானாலும் அந்த நாட்டில் வாழும் மக்கள் உயிர் வாழ வேண்டும்.
பசியால் வாடும் மக்களுக்கு அரசமைப்பு சட்டம் புரிவதில்லை. அதிகாரத்தையும் மக்களையும் கட்டியெழுப்புவதற்கு இது உதவப் போவதும் இல்லை. ஆனால், அதிகாரத்தினை கட்டியெழுப்புவதற்கு நேரம் உள்ளது.
ஒரு மகத்தான தேசமாகவும் பணிகளை செய்யவும் அனைவரும் ஒன்றிணைவோம். இந்த நாட்டை காப்பாற்ற அனைவரும் ஒன்றுபடுவோம் என்றார் அவர்.