கண்டி ஸ்ரீ தலதா மாளிகையின் எசல பெரஹராவை முன்னிட்டு 550 இற்கும் மேற்பட்ட பஸ்கள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபையின் தலைவர் லலித் டி அல்விஸ் தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் 15 ஆம் திகதி முதல் விசேட ரயில் சேவைகளை முன்னெடுக்கவுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.
கோட்டை, நாவலப்பிட்டி மற்றும் மாத்தளையில் இருந்து கண்டி வரை விசேட ரயில் சேவையை முன்னெடுக்கவுள்ளதாக திணைக்களத்தின் போக்குவரத்து அத்தியட்சகர் என்.ஜே இதிபொலகே கூறியுள்ளார்.
பெரஹர நடைபெறும் காலத்தில் வழமையாக நாளொன்றில் மாத்திரம் சுமார் 30 தொன் பொலித்தீன், பிளாஸ்டிக் உள்ளிட்ட கழிவுப் பொருட்கள் சேர்வதாக மத்திய சுற்றாடல் அதிகார சபையின் பணிப்பாளர் நாயகம் ஹேமந்த ஜயசிங்க குறிப்பிட்டுள்ளார்.
இதனால் பல வருடங்களாக பல நிறுவனங்களின் தலைமையின் கீழ் கழிவு முகாமைத்துவ வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுவருவதாக அவர் கூறினார்.
குப்பைகளை உரிய இடங்களில் மாத்திரம் போடுமாறும் பொலித்தீன் பிளாஸ்டிக் உள்ளிட்ட மக்காத பொருட்களின் பாவனையை முடிந்தவரை குறைத்து சுற்றுச்சூழலை பாதுகாக்கும் செயற்பாட்டில் இணைந்துகொள்ளுமாறும் ஹேமந்த ஜயசிங்க வேண்டுகோள் விடுக்கிறார்.