இன்றைய தினம் மிக அவதானமாக இருக்க வேண்lடுமென வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
தாழமுக்கம் காரணமாக, மழைவீழ்ச்சி அதிகரித்துக் கொண்டேயிருக்கிறது. இதுபற்றிய சிவப்பு எச்சரிக்கை (Red Alert) அறிவித்தல் வந்துள்ளது.
ஆனாலும், இதுவரை புயல் அபாயம் பற்றி அறிவிக்கப்படவில்லை.
தென்மேற்கு வங்காள விரிகுடா கடற்பரப்புகளுக்கு மேலாக விருத்தியடைந்துள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று (25) காலை மத்திய மற்றும் தென்மேற்கு வங்காள விரிகுடா கடற்பரப்புகளுக்கு மேலாக ஒரு தாழமுக்கமாக வலுவடையக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக, வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.
மேற்குறிப்பிட்ட தொகுதியின் தாக்கம் காரணமாக, நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் மேகமூட்டமான வானம் காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
வடக்கு, வடமத்திய, கிழக்கு, மத்திய, ஊவா மாகாணங்களிலும் அம்பாந்தோட்டை மாவட்டத்திலும் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.
மேல் மற்றும் வடமேல் மாகாணங்களின் கரையோரப் பிரதேசங்களில் காலை வேளையிலும் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.
கிழக்கு மாகாணத்தில் சில இடங்களில் 150 மி.மீ. இற்கும் அதிகமான மிகப் பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.
வடக்கு, வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் அம்பாந்தோட்டை மாவட்டத்திலும் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 35-45 கிலோ மீற்றர் வரையான வேகத்தில் ஓரளவு பலத்த காற்று வீசக் கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இடியுடன் கூடிய மழை வேளைகளில் ஏற்படும் தற்காலிகமான பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.