எதிர்காலத்தில் பிரிமா மற்றும் செரண்டிப் நிறுவனங்கள் கோதுமை மாவின் விலையை குறைக்காது விடின், குறைந்த எடை கொண்ட பாணுக்கு எதிரான அரசின் நடவடிக்கைகள் தொடருமானால், நாட்டின் பாண் உற்பத்தி முற்றாக காணாமல் போகலாம் என்று அகில சிறிலங்கா வெதுப்பக சங்கத்தின் தலைவர் எம்.கே.ஜெயவர்தன எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இது தொடர்பாக சிங்கள வார ஏடு ஒன்றுக்கு அவர் வழங்கிய சிறப்பு நேர்காணலின் போது மேலும் தெரிவித்துள்ளதாவது:
குறைந்த எடை கொண்ட பாண் தயாரிப்பவர்களை அரச அதிகாரிகள் கைது செய்து வருவதன் காரணமாக சில வெதுப்பகங்களில் பாண் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது. சிலர் சிறிய பாண் தயாரித்து ஏனைய வெதுப்பக பொருட்களை தயாரிப்பதற்கு முன்னுரிமை வழங்கி வருகின்றனர்.
பிற வெதுப்பக பொருட்களின் எடைக்கு தரம் இல்லாததால், வெதுப்பக உரிமையாளர்கள் அவற்றை தயாரித்து வெதுப்பக தொழிலை பராமரிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அப்படி இருந்தும் குறைந்த நிறை கொண்ட பாண் தயாரிப்பதை நான் ஏற்கவில்லை.
வர்த்தக மற்றும் உணவுப் பாதுகாப்பு அமைச்சர் நளின் பெர்னாண்டோவுடன் அண்மையில் இடம்பெற்ற கலந்துரையாடலில், இந்தப் பிரச்சினையை ஒரு வாரத்திற்குள் தீர்த்து வைப்பதாக அமைச்சர் என்னிடம் உறுதியளித்துள்ளார். எனவே அது தொடர்பில் எனக்கு நம்பிக்கை உள்ளது என்றார் அவர்.