எரிபொருள் நிரப்பு நிரப்பு நிலையத்தில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தால் 4 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் நால்வர் படுகாயமடைந்துள்ளனர்.
குருநாகல் வேஹேர பகுதியில் நேற்று நள்ளிரவு இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
காயமடைந்தவர்கள் குருணாகல் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
நேற்றிரவு 11.00 மணியளவில் குறித்த எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு எரிவாயு நிரப்புவதற்காக வந்த லொறி ஒன்றுக்கு எரிவாயு நிரப்பும் போது, 6,000 லீற்றர் கொள்ளளவு கொண்ட இரண்டு எரிவாயு தொட்டிகளில் ஒன்று வெடித்ததால் இவ்வாறு தீ ஏற்பட்டுள்ளது.
பயிற்சி பெறாத தொழிலாளி ஒருவர் எரிவாயு நிரப்பும் நடைமுறையை தவறாகக் கையாண்டதால் இந்த வெடிப்பு ஏற்பட்டுள்ளதாக பொலிசார் சந்தேகிக்கின்றனர்.
எரிபொருள் நிரப்பு நிலைய முகாமையாளர் மற்றும் தொழிலாளர்கள் எரிபொருள் நிரப்பும் செயன்முறையில் ஈடுபட்டிருந்த போது ஏற்பட்ட திடீர் வெடிப்பில் இந்த உயிரிழப்பு ஏற்பட்டிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
குருணாகல் மாநகர சபையின் தீயணைப்பு பிரிவு, குருணாகல் பொலிஸார், இலங்கை இராணுவத்தினர் உடனடியாக இணைந்து சுமார் 2 மணித்தியாலங்களின் பின்னர் தீயை கட்டுப்படுத்தியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
அங்கிருந்த மற்றுமொரு 6,000 லீற்றர் கொள்ளவு கொண்ட எரிவாயுத் தொட்டியை மாநகர சபை ஊழியர்கள் மிகுந்த முயற்சியுடன் மூடியதால், ஏற்படவிருந்த பாரிய சேதம் ஓரளவு தவிர்க்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த சம்பவம் தொடர்பாக குருணாகல் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.