‘எவரையும் கைவிடாதீர்’ – நலன்புரி திட்டத்துக்கு விண்ணப்பியுங்கள்

0
337

குறைந்த வருமானம் பெறும் 31 இலட்சம் குடும்பங்களுக்கு நலன்புரி உதவிகள் வழங்கும் வேலைத்திட்டம் துரிதப்படுத்தப்பட்டுள்ளதாக என நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க தெரிவித்தார்.

‘எவரையும் கைவிடாதீர்’ எனும் தொனிப்பொருளில் நாட்டின் அனைத்து மாவட்டங்களையும் உள்ளடக்கும் வகையில் இந்த வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் இராஜாங்க அமைச்சர் குறிப்பிட்டார்.

இந்தத் திட்டத்தின் கீழ், சமுர்த்தி, முதியோர், மாற்றுத்திறனாளிகள் மற்றும் சிறுநீரக நோய் வாழ்வாதாரத் திட்டத்தின் கீழ் பயனடையும் குடும்பங்கள் அல்லது  தனிநபர்கள், மானியங்களை எதிர்பார்த்து காத்திருப்போர் பட்டியலில் உள்ளவர்கள் மற்றும் தற்போதைய பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்டு அரசாங்க உதவியை எதிர்பார்க்கும் நபர்கள் ஆகியோருக்கு இந்த சலுகைகள் கிடைக்கும் என்று  இராஜாங்க அமைச்சர் தெரிவித்தார்.

பயனாளிகளிடமிருந்து  விண்ணப்பங்கள்  கோரும் பணிகள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும், அதற்கான கால அவகாசம் ஒக்டோபர் 15 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளதாகவும்  அவர் தெரிவித்தார்.

நலன்புரி நன்மைகள் சபையின் (www.wbb.gov.lk) இணையத்தளத்தில்  இருந்து எவரும் உரிய விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

புதிய விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளதன் ஊடாக தகுதியுள்ள அனைத்து பயனாளிகளையும்  உள்வாங்க எதிர்பார்க்கிறோம். நலன்புரி நன்மைகள் சபையின் மூலம் தகுதியான அனைவருக்கும்  நிவாரணங்கள்  வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும்.

யாரையும் விட்டு விடாமல் இந்த கொடுப்பனவு வழங்க வேண்டும்  என்ற தேசியப் பொறுப்பில் நாங்கள் ஒன்றுபட்டுள்ளோம். தற்போது பொது உதவி, நலன்புரித்திட்ட உதவிகள் மற்றும் ஊனமுற்றோர் உதவித்தொகை பெறும் பலர்  உள்ளனர்.    அவர்கள் பிரதேச செயலகத்தில் பதிவு செய்வது கட்டாயமாகும். தற்போது குறைந்த அளவிலான பயனாளிகள் மட்டுமே பதிவு செய்துள்ளனர். அதனால்தான் பதிவு காலத்தை நீடித்திருக்கிறோம். இதனை மேலும் நீடித்தால் பயனாளிகளுக்கு  கொடுப்பனவு வழங்குவது இன்னும் தாமதமாகும்.எனவே  இதை துரிதமாக முன்னெடுக்க   வேண்டும்.

இதை வெளிப்படைத் தன்மையுடன் செய்ய தரவு கட்டமைப்பை தயாரித்துள்ளோம். கிராமத்து இளைஞர்களுக்கும் இதில்  பெரும் பொறுப்பு உள்ளது. கிராமத்தில் உள்ள ஆதரவற்ற மக்களைக் கண்டறிந்து, அவர்களுக்கு  இந்த திட்டம் தொடர்பாக தெளிவுபடுத்த  முடியும். 

விண்ணப்பம்  கிடைக்கப் பெற்றதன்  பின்னர் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் சென்று  குறித்த குடும்பங்கள் தொடர்பில் ஆராய்ந்து மேலதிக நடவடிக்கைகளை  எடுப்பார்கள். பின்தங்கிய  குடும்பங்களுக்கு புள்ளிகள் வழங்கும் முறையொன்றும் ஆரம்பிக்கப்படும்.  அதன்படி, அவை தரவு கட்டமைப்பில் சேர்க்கப்படும் என்றும் தெரிவித்தார் .

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here