இலங்கையிலிருந்து ஓமான் நாட்டுக்கு பணிப்பெண்களாக கொண்டு செல்லப்பட்டு, அங்கு சிக்கி தவிக்கும் மலையகம் உள்ளிட்ட ஏனைய பிரதேசங்களை சேர்ந்த பணிப் பெண்களை பாதுகாப்பாக நாட்டுக்கு அழைத்து வர வேண்டும் என இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் கலந்துரையாடியுள்ளது.
இந்த கலந்துரையாடல் இன்று (21) கொழும்பில் இடம்பெற்றது. இதில்
நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச் செயலாளருமான ஜீவன் தொண்டமான் அவர்கள், வெளிவிவகார அமைச்சர் அலிசப்ரி மற்றும் தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நானயக்கார ஆகியோரை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.
இது தொடர்பாக மேலும் தெரியவருவதாவது.
இலங்கையிலிருந்து சுற்றுலா விசா மூலம் பணிப்பெண்களாக ஓமான் நாட்டுக்கு சென்று அங்கு தமது நாட்டுக்கு திரும்ப முடியாத நிலையில் தங்கியிருக்கும் மலையக உட்பட்ட ஏனைய பிரதேசங்களில் உள்ள பெண்களின் பாதுகாப்பினை உறுதி செய்து அவர்களை பாதுகாப்பாக நாட்டுக்கு அழைத்து வர வேண்டும் என இ.தொ.கா கலந்துரையாடியுள்ளது.
இதன்போது ஓமான் நாட்டில் விசா இன்றி தங்கியிருக்கும் பணிப்பெண்களிடம் நாளாந்தம் 05 திராம் அபராத தொகை அறவிடப்படுகிறது.
அதேநேரத்தில் இலங்கையிலிருந்து ஓமானுக்கு பணிப்பெண்களாக சேர்த்து கொள்வதற்கு செலவு செய்த அனைத்து செலவுகளையும் வழங்கிவிட்டு பணிப்பெண்களை இலங்கைக்கு அழைத்து செல்லுமாறு அந்நாடு அறிவித்துள்ளது.
அதேவேளை இது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருகின்றதாக கலந்துரையாடலில் தெரிவித்துள்ளதுடன், வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகமும், வெளிநாட்டு வேலை வாய்ப்பு அமைச்சும் இணைந்து ஓமானில் சிக்கியுள்ள மலையகம் உள்ளிட்ட நாட்டின் ஏனைய பிரதேசங்களை சேர்ந்த பணிப் பெண்களை மீண்டும் நாட்டுக்கு அழைத்து வருவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளதாக இ.தொ.கா தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
அத்துடன் ஓமானில் தங்கியுள்ள இலங்கை பணி பெண்களை மீட்டெடுப்பதற்காக இலங்கையில் இருந்து தூதுக்குழு ஒன்று ஓமான் நாட்டிற்கு சென்று அவர்களை மீட்டெடுப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாகவும் இ.தொ.கா மேலும் தெரிவித்துள்ளது.