தேர்தல் ஆணைக்குழுவின் அறிவுறுத்தல்களின்படி 2023 உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்காக அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள் மற்றும் சுயேச்சைக் குழுக்கள் செலுத்திய கட்டுப்பணத்தை திருப்பித் தர முடிவு செய்யப்பட்டுள்ளது.
தேர்தல் ஆணைக்குழு நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க இதனைத் தெரிவித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். 2023 ஆம் ஆண்டு நடைபெறவிருந்த உள்ளூராட்சித் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டன.
17ஆம் திகதி பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட 2025 ஆம் ஆண்டு 1 ஆம் இலக்க உள்ளூராட்சி தேர்தல் (சிறப்பு ஏற்பாடுகள்) சட்டத்தின் பிரிவு 2(3) இன் படி, அத்தகைய தொகையை அவற்றை வைப்புச் செய்த நபருக்கே திருப்பித் தர வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
மேலும், கட்டுப்பணம் வைப்பிலிட்ட பற்றுச்சீட்டை வைப்புத்தொகை செலுத்திய நபரிடம் சமர்ப்பிக்க வேண்டும். தொடர்புடைய அறிவிப்பில், கட்டுப்பணத்தை 28.02.2025 க்கு முன்னர் செலுத்தப்பட்ட தொடர்புடைய மாவட்ட தேர்தல் அலுவலகத்திற்கு வழங்கப்பட வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், எதிர்வரும் 28ஆம் திகதிக்கு முன் சமர்ப்பிக்கப்படும் கோரிக்கைகளுக்கு, சம்பந்தப்பட்ட மாவட்ட தேர்தல் அலுவலகங்கள் உடனடியாக வைப்புத்தொகையை சம்பந்தப்பட்ட நபர்களுக்குத் திருப்பித் தர வேண்டும் என்று அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.