கந்தப்பளையில் காணி ஊழல்! காரணமானவர்கள் யார்?

0
309

 அரசியல்! இந்தப் பெயரில் இடம்பெறும் ஊழல்கள், அக்கிரமங்கள், அநியாயங்கள் அனைத்தும் நமது நாட்டுக்கு கிடைத்த பெரும் சாபக்கேடு. இதனாலேயே அரசியல்வாதிகள் மீது மக்களுக்கு எந்தவொரு நல்ல அபிப்பிராயமும் இருப்பதில்லை.
நுவரெலியா மாவட்டத்தில் கந்தப்பளை நகரத்தில் இடம்பெற்றுள்ள மிகப்பெரிய ஊழல் மேற்சொன்ன விடயத்தை புடம்போட்டுக் காட்டுகிறது.

கந்தப்பளை நகர், கொங்கோடியா தோட்ட மேற்பிரிவில் கோயிலுக்கு அருகில் சந்தைத் தொகுதிக்காக நுவரெலியா பிரதேச சபைக்கு வழங்கப்பட்ட காணி தனியாருக்கு விற்கப்பட்ட தகவல் எமக்குக் கிடைத்திருக்கிறது.

நுவரெலியா பிரதேச சபையின் தலைவர் வேலு யோகராஜ், கந்தப்பளை நகரில் சந்தைத் தொகுதி அபிவிருத்திக்கென குறிப்பிட்டளவு நிலப்பரப்பை காணி அமைச்சு, உடபுசல்லாவ பெருந்தோட்ட நிறுவனம், மாகாண ஆளுநர் அலுவலகம் ஆகியவற்றிடமிருந்து கோரியுள்ளார்.

அதன் அடிப்படையில் நுவரெலியா பிரதேச சபை எல்லைக்குட்பட்ட நுவரெலியா பிரதேச சபை நிர்வாகத்துக்குட்பட்ட 534ஆவது கிராம சேவகர் பிரிவில் சுமார் 90 பேர்ச்சர்ஸ் காணி கிடைக்கப்பெற்றுள்ளது.

அந்த இடத்தில் அமையப்பெறப்போகும் கட்டடத்தொகுதி மற்றும் காணிக்குரிய வரைபடமும் சமர்ப்பிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், அந்தக் காணியில் இருந்த தேயிலைகளுக்கான இழப்பீட்டுத் தொகையான 32 இலட்சத்து 36 ஆயிரத்து 554 ரூபா 73 சதம் பணத்தை தோட்ட நிறுவனத்துக்குச் செலுத்த இணங்கியுள்ளதாகவும் அதனால் அங்கு அபிவிருத்தித் திட்டத்தை செயற்படுத்த அனுமதியளிக்குமாறும் 2019.06.24 ஆம் திகதி நிதியமைச்சின் திட்ட முகாமைத்துவம் மற்றும் கண்காணிப்பு திணைக்களத்திடம் நுவரெலியா பிரதேச சபையின் தலைவர் வே. யோகராஜ் கடிதம் மூலம் கோரிக்கை விடுத்துள்ளார்.

அதன் பின்னர் கொங்கோடியா தோட்ட நிர்வாகத்துக்கு நுவரெலியா பிரதேச சபை தலைவரால் 32,36,554.73 என்ற தொகை 2019.12.31ஆம் திகதி செலுத்தப்பட்டுள்ளது.
இவ்வாறானதொரு சூழ்நிலையில் இந்த இடம் மிகப்பெரிய தொகைக்கு தனியாருக்கு விற்கப்பட்டுள்ளதாக தகவல் கசிந்துள்ளது. இதனால் பலகோடி ரூபா பணப்பரிமாற்றம் நிகழ்ந்துள்ளதாகவும் அறியக்கிடைத்தது.

மேற்சொன்ன இடத்தை 32,36,554.73 என்ற தொகையை கொடுத்து தான் பெற்றுக்கொண்டபோதிலும், நுவரெலியா பிரதேச சபைத் தலைவர் அதனை பெருந்தொகை பணத்துக்கு வேறு நபருக்கு விற்பனை செய்துள்ளதாக கந்தப்பளை பொலிஸ் நிலையத்தில் 2021.09.01 ஆம் திகதி ஊஐடீ ஐ 23802 என்ற இலக்கத்தின் கீழ் இளங்கோவன் சஞ்சித் என்பவரால் முறைப்பாடு பதிவுசெய்யப்பட்டுள்ளது.

நுவரெலியா பிரதேச சபைத் தலைவர் வேலு யோகராஜால் 2019.12.31 ஆம் திகதி தோட்ட நிர்வாகத்துக்கு செலுத்தப்பட்ட (மேலே குறிப்பிடப்பட்டுள்ளது) 32,36,554.73 என்ற தொகையுடைய காசோலை கந்தப்பளை இலங்கை வங்கிக் கிளையில் உள்ள ஐ.சஞ்சித் என்பவரின் வங்கிக் கணக்கிலிருந்து காசோலை இலக்கம் 353058 ஊடாக கொடுப்பனவு வழங்கப்பட்டுள்ளது.

பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்தவரும் பிரதேச சபைத் தலைவருக்காக காசோலை கொடுத்தவரும் ஒருவரே என்பது இங்கு புலனாகிறது.
பிரதேச சபைக்காக கோரப்பட்ட நிலத்துக்குரிய பணம் தனி நபர் ஒருவரால் செலுத்தப்பட்டிருக்கிறது. பிரதேச சபை ஒழுங்கு விதிகள் இங்கே அப்பட்டமாக மீறப்பட்டுள்ளன.

இவ்வாறிருக்க, காணியில் நிர்மாணப் பணிகள் இடம்பெற்றுக்கொண்டிருக்கும் போது அதனை நிறுத்துமாறு மாகாண உதவி ஆணையாளரால் அறிவுறுத்தப்பட்டிருந்தது.
இராகலை உடபுசல்லாவை வீதி, கந்தப்பளை கோயிலுக்கு அருகில் நிர்மாணிக்கப்படும் பணிகள் சட்டத்துக்கு உட்பட்டு செயற்படுத்தப்பட  வில்லையென்றும் 1982ஆம் ஆண்டு 04ஆம் இலக்க நகர அபிவிருத்தி அதிகார சட்டத்தின் 08யு(1) பிரிவை மீறும் வகையில் அமைந்துள்ள இந்தத் திட்டத்தை உடனடியாக நிறுத்துமாறும் நுவரெலியா பிரதேச சபைத் தலைவருக்கு அறிவுறுத்தல் வழங்குவதாக மாகாண உதவி ஆணையாளர் வை.பீ.விஜேவர்தனவால் அறிவிக்கப்பட்டிருந்தது. எனினும், அந்த அறிவிப்பையும் மீறி தன்னிச்சையாக கட்டட நிர்மாணப் பணிகள் இடம்பெற்றுள்ளன.

இப்போது இந்தக் காணியில் கட்டடத்தொகுதி அமைக்கப்பட்டு தனி நபர்களால் வர்த்தக நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. நுவரெலியா பிரதேச சபைக்கு உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்ட காணி தனியாருக்கு எவ்வாறு விற்பனைசெய்யப்பட்டது என்ற கேள்வி இங்கே எழுகிறது. இது குறித்து நுவரெலியா பிரதேச சபையின் தொழில்நுட்ப அதிகாரி அத்தரகமவிடம் தொடர்புகொண்டு கேட்டோம்.

குறித்த காணியில் நுவரெலியா பிரதேச சபையின் எவ்விதத் திட்டங்களும் முன்னெடுக்கப்படவில்லையென அவர் தெரிவித்தார். ஆக, நுவரெலியா பிரதேச சபைக்கு உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்ட காணி தனியாருக்கு கைமாறப்பட்டுள்ளது. அங்கு நிர்மாணப் பணிகள் தனியாரால் மேற்கொள்ளப்பட்டு விற்பனை செய்யப்பட்டுள்ளன.

மிகவும் சூட்சுமமான முறையில் காணி பெற்றுக்கொள்ளப்பட்டு பெருந்தொகை பணம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. உண்மையில் இந்த விடயத்தில் நுவரெலியா பிரதேச சபைத் தலைவர் முழுப் பொறுப்பையும் ஏற்க வேண்டும். அரச காணியை எந்த அடிப்படையில் தனியாருக்கு விற்பனை செய்ய முடியும்? அவ்வாறு விற்பனை செய்வதாயின் அதற்குரிய சட்ட விதிமுறைகள் கையாளப்பட்டுள்ளனவா? விற்பனை செய்யப்பட்டமைக்கான ஆவணங்கள் உரிய நபர்களிடம் அல்லது பிரதேச சபையிடம் இருக்கின்றனவா? இதற்கு அனுமதியளித்தவர்கள் யார்?

கந்தப்பளையில் மண்சரிவால் பாதிக்கப்பட்ட பெருந்தோட்ட மக்கள் வீடின்றி நிர்க்கதியாகியிருக்கும் நிலையில் அவர்களுக்கு காணியை பெற்றுக்கொடுக்க முன்வராத அரசியல்வாதிகள் சுயநல இலாபத்துக்காக எவ்வாறெல்லாம் நடந்துகொள்கிறார்கள் என்பது இந்த விடயத்தில் வெளிச்சமாகியிருக்கிறது.

நேர்மையாக நடந்து மக்களுக்காக பணிசெய்வார்கள் என்ற நம்பிக்கையிலேயே தமது பிரதிநிதிகளை மக்கள் தெரிவுசெய்கிறார்கள். ஆனால் அவ்வாறு தெரிவானவர்கள் தாம் நியமிக்கப்பட்டமைக்கான நோக்கத்தை நிறைவேற்றுவதில்லை. இதனாலேயே அசிங்கமான அரசியல் என இவ்வாறான அரசியல்வாதிகள் மீது நாம் உமிழ்கிறோம்.

நுவரெலியா பிரதேச சபையின் தலைவர் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் சிரேஷ்ட உறுப்பினராவார். இந்த மோசடி தொடர்பில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் நடவடிக்கை எடுக்காதது ஏன்? இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் செந்தில் தொண்டமான் உடனடியாக உயர்பீடத்தைக் கூட்டி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கந்தப்பளை காணி மோசடியில் இ.தொ.காவின் அடுத்த கட்ட செயற்பாடுகள் எவ்வாறிருக்கப்போகின்றன என்பதை நாம் அவதானிக்கிறோம்.
அந்தக் கட்சியின் உயர்பீடம் இந்த விடயத்தை மூடி மறைக்க முயற்சிக்குமாயின் மக்களுக்கு செய்யும் மிகப்பெரிய துரோகமாகவே கருத முடியும். மக்கள் மீது அக்கறைகொண்ட, அவர்களின் துன்பங்களை நன்கறிந்து வெளிப்படையாக சேவையாற்றும் பண்புடையவர்களையே இந்தச் சமூகம் எதிர்பார்க்கிறது.

அவ்வாறானவர்களை உருவாக்கவில்லை என்ற கறுப்புப் புள்ளி இலங்கை தொழிலாளர் காங்கிரஸக்கு ஏற்பட்டுவிடக் கூடாது.
மேலும், இந்த விடயத்தில் மலையக சமூகம் ஒன்றிணைந்து நியாயத்துக்காக குரல் கொடுக்க வேண்டும். எம் மத்தியில் உள்ள தவறான அரசியல்வாதிகள் களையெடுக்கப்பட்டால் மாத்திரமே சமூகத்தில் முன்னேற்றத்தை எதிர்பார்க்க முடியும்.

-நிர்ஷன் இராமானுஜம்-
(இன்றைய ஞாயிறு தமிழன் இதழில் வெளிவந்துள்ள கட்டுரை)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here