நுவரெலியா கந்தப்பளை தோட்ட வைத்தியசாலைக்கு அவசியமாக தேவைப்பட்டிருந்த ஒரு சில மருந்து பொருட்கள் நன்கொடையாக வழங்கி வைக்கப்பட்டுள்ளது.
தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவர் பழனி திகாம்பரத்தின் வழிகாட்டலில் தொழிலாளர் தேசிய சங்கத்தின் பிரதித் தலைவரும் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமாகிய மயில்வாகனம் உதயகுமார் தலைமையில் இந்த அத்தியாவசிய மருந்து பொருட்களை இன்றைய தினம் வழங்கி வைத்தார்.
அத்தியாவசிய மருந்து தட்டுப்பாடுகள் நாட்டில் அனைத்து வைத்தியசாலைகளிலும் காணப்படுகின்ற போதிலும் வழங்கப்படுகின்ற மருந்துகளில் தேசிய, மாவட்ட, பிரதேச வைத்தியசாலைகளுக்கு அதிக முன்னுரிமை கொடுக்கப்படுகிறது.
தோட்டப்புற வைத்தியசாலைகள் பெரிதாக கவனிக்கப்படுவதில்லை. ஒரு தோட்ட வைத்தியசாலையில் சுமார் 500க்கும் மேற்பட்ட பெருந்தோட்ட மக்கள் நன்மையடைகின்றனர்.
இதனை கருத்தில் கொண்டு பாராளுமன்ற உறுப்பினர் மயில்வாகனம் உதயகுமார் தனக்கு முன்வைக்கப்பட்ட பல்வேறு கோரிக்கைகளின் அடிப்படையில் கந்தப்பளை தோட்ட வைத்தியசாலைக்கு அத்தியாவசிய மருந்து பொருட்கள் சிலவற்றை வழங்கி வைத்தார்.
இந்த நிகழ்வை தோட்ட வைத்தியசாலை அதிகாரி, தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைமையக முக்கியஸ்தர்கள் மற்றும் தொழிலாளர் தேசிய சங்கத்தின் நுவரெலியா பிராந்திய முக்கியஸ்தர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.