திருமலை மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் ஒன்றியத்தினால் ‘அனைத்து பட்டதாரிகளுக்கும் பாரபட்சம் இன்றி தொழிலை வழங்கு’ என்ற கோரிக்கையின் அடிப்படையில் இன்றையதினம் (02) கிழக்கு மாகாண சபைக்கு முன்னால் கண்டன ஆர்ப்பாட்டம் ஒன்று மேற்கொள்ளப்பட்டது. குறித்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டிருந்த பட்டதாரிகள் “கனவுகளோடு பட்டம் பெற்ற எம்மை கண்ணீரோடு போராட செய்யாதீர்”, “பல்கலைக்கு சென்றது இன்று பட்டினியில் கிடக்கத்தானா?”, “கஸ்டப்பட்டு பெற்ற பட்டம் வீட்டிலே பட்டதாரிகள் நாங்கள் வீதியிலே” போன்ற வாசகங்கள் அடங்கிய பதாதைகளை ஏந்தியவாறும், கோசங்களை எழுப்பியவாறும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தார்கள்.
பின்னர் அங்கிருந்து ஆளுநர் அலுவலகத்தை நோக்கி நடைபவனியாக வந்து தங்களது கோரிக்கைகள் அடங்கிய மகஜரினை ஆளுநர் செயலாளரிடம் கையளித்திருந்தார்கள்.