காற்றுடன் கூடிய மழை நுவரெலியா மாவட்ட மக்களின் இயல்பு வாழ்க்கையில் பாதிப்பு

0
183
நுவரெலியா மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள காலநிலை மாற்றம் காரணமாக பெய்து வரும் கடும் காற்றுடன் கூடிய இடைவிடாத பெரும் மழையினால் இம் மாவட்ட மக்களின் இயல்பு வாழ்க்கையில் பாதிப்புக்கள் ஏற்பட்டுள்ளது.
நுவரெலியா மாவட்டத்தின் நுவரெலியா,கொத்மலை,
வலப்பனை,ஹங்குராங்கெத்த மற்றும் அம்பகமு பிரதேசங்களில் வானிலை மாற்றம் ஏற்பட்டு கடும் மழை பெய்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
அத்துடன் நுவரெலியா,கொத்மலை,வலப்பனை பிரதேசங்களில் கடும் காற்றுடன் கூடிய அடையாள மழை (20) காலை முதல் தொடர்ச்சியாக பெய்து வருவதை அவதானிக்க கூடியதாக இருக்கின்றது.
இதன் காரணமாக இப்பிரதேசங்களில் காட்டாறுகள் ஆறுகள்,மற்றும் குளங்களில் மழை நீர் நிரம்பியுள்ளதுடன்  நீர்த்தேக்கங்கள் நீர் மட்டம் உயர்ந்து காணப்படுகிறது.மேலும் இறம்பொடை, மற்றும் ஹைபொரஸ்ட்  குருந்து ஓயா,டெவோன் ஆகிய நீர்வீழ்ச்சிகளில் அதிகளவான நீர் வீழ்ந்தெழும்பும் அழகையும் அவதானிக்ககூடியதாக இருக்கிறது.
அதேநேரத்தில் பலத்த காற்றுடன் கூடிய மழை பெய்து வரும் நிலையில் பிரதான வீதியோரங்களில் காணப்படும் பாரிய மரங்கள் சிந்தும்,முடிந்தும் விழக்கூடிய சந்தர்ப்பங்கள் காணப்படுவதால் பிரதான வீதிகளில் பயணிக்கும் மக்கள் மற்றும் வாகனங்களை செலுத்தும் சாரதிகள் அவதானத்துடன் செயல்படுமாறு அவ்வப்பகுதி பொலிஸார்களினால் எச்சரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது.
அத்துடன் புகை மூட்டம் அவ்வப்போது அதிகரிப்பதனால் நுவரெலியா- டொப்பாஸ் வழியிலன  கண்டி வீதி,நுவரெலியா- உடப்புசலாவ வீதி,நுவரெலியா-தலவாக்கலை வீதிகளில் பயணிக்கும் வாகனங்கள் முகப்பு விளக்கை ஓளிரவிட்டு பயணிக்கவும் பொலிஸார்  எச்சரிக்கையும்,வேண்டுகோளும் விடுத்து வருகின்றனர்.
அதேநேரத்தில் கடும் காற்று மற்றும் கடும் மழை தொடர்ச்சியாக பெய்வதனால் தேயிலை மலைகளில் தொழில் செய்து வரும் தொழிலாளர்கள் அவதானமாக தொழிலாற்ற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அதேபோல நுவரெலியா மாவட்டத்திற்கு மண் சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள இந்த நிலையில் ஆற்று ஓர பகுதிகளிலும்,மண்மேடு பகுதிகள்,பாரிய மரங்கள் உள்ள பகுதிகளில் வசிக்கும் குடியிறுப்பாளர்கள் அவதானமாக இருக்குமாறு நுவரெலியா மாவட்ட இடர் முகாமைத்துவ நிலையம் பொது மக்களுக்கு அவதான எச்சரிக்கை விடுத்துள்ளது.
மேலும் இக்காலப்பகுதியில் அனர்த்தங்கள் ஏற்படகூடிய இடங்கள் அவதானிக்கப்பட்டால் இது தொடர்பில் அவ்வப் பிரதேச கிராம சேவை அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டுவர பொதுமக்கள் முன்வர வேண்டும் எனவும் நுவரெலியா பிரதேச செயலகம் அறிவித்தல் விடுத்துள்ளது.
அத்துடன் காலநிலை மாற்றம் ஏற்பட்டுள்ள இக்காலப்பகுதியில் இம்மாவட்டத்தில் விவசாயம் பாதிக்கப்பட்டு வருவதுடன் விவசாயிகளும்,விவசாய தோட்டங்களில் அன்றாட தொழிலை செய்து வருபவர்களும் வருமான ரீதியில் பாதிப்புக்கு முகம் கொடுக்க நேரிட்டுள்ளமையும் மேலும் குறிப்பிடத்தக்கது.
ஆ.ரமேஸ்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here