வலப்பனை பிரதேச சபைக்கு உட்பட்ட உடபுஸ்ஸலாவை பிளாரமெண்ட் தோட்ட பிரிவான சென் . மாக்றட் தோட்டத் தொழிலாளர்கள் கடந்த பத்து வருடங்களாக அன்றாட தேவைக்கான குடிநீர் பெற்றுக் கொள்வதில் பாரிய பிரச்சினைக்கு முகம் கொடுத்து வருவதாக கவலை தெரிவித்துள்ளனர்.
சென். மாக்றட் தோட்டத்தில் 175 தொழிலாளர் குடும்பங்கள் வசிக்கின்ற போதிலும் இதில் 92 குடும்பங்களுக்கு முறையாக குடிநீர் வசதியில்லை என பாதிக்கப்பட்ட தொழிலாளர் குடும்பத்தினர் தெரிவிக்கின்றனர்.
இத் தோட்டத்தில் வசிக்கும் தொழிலாளர் குடும்பத்தினருக்கு சீரான குடி தண்ணீர் வழங்க 1990 ஆம் ஆண்டு (MTIP) சமூக நிறுவனம் ஊடாக பிரதான குடிநீர் தாங்கி ஒன்று நிர்மாணிக்கும் பணிகள் ஆரம்பித்து அப்பணி 1991 ஆம் ஆண்டு முடிவு பெற்று பொது மக்கள் பாவணைக்கு கையளிக்கப்பட்டது.
இப் பணி ஆரம்பிக்கப்பட்டு இன்று 30 வருடங்கள் ஆகின்றன. இருப்பினும் இந்த தாங்கி ஊடாக தொழிலாளர்களுக்கு தண்ணீர் வழங்கப்பட்டிருந்த நிலையில் கடந்த 10 வருடங்களாக இந்த தண்ணீர் தாங்கி தோட்ட நிர்வாகத்தால் முறையாக பராமரிக்க படாத நிலையில் முறையான தண்ணீர் வினியோகம் இடம்பெறாது குடி தண்ணீருக்காக பாரிய தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது எனவும் தொழிலாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
அதேநேரத்தில் சென். மாக்றட் புதிய கிராமத்தில் வசிக்கும் 83 குடும்பங்களுக்கு “பாம்” நிறுவனம் ஊடாக நிர்மாணிக்கப்பட்டுள்ள குடி தண்ணீர் வினியோகம் சீராக உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே இத்தகைய தோட்டத்தில் எஞ்சிய 92 குடும்பங்களுக்கு குடி தண்ணீர் வசதி சீரற்ற போயுள்ள நிலையில் அன்றாட தேவைகளை பூர்த்தி செய்து கொள்வதில் தாம் பாதிக்கப்பட்டுள்ளதாக 92 குடும்பத்தை சேர்ந்தவர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில் குடி நீர் தட்டுப்பாடு காரணமாக தினமும் அதிகாலை வேளையில் தோட்ட நிர்வாகம் வழங்கும் சொற்ப தண்ணீரை பெற்றுக்கொள்ள குழாய்களுக்கு அருகில் பல மணிநேரம் காத்திருப்பதால் நாளாந்த தொழிலும்,பாடசாலை செல்லும் மாணவர்களின் இயல்பு நிலையும் பாதிக்கப்படுவதாகவும் தொழிலாளர்கள் தெரிவிக்கின்றனர்.
இது தொடர்பாக தோட்ட நிர்வாகம், பிரதேச அரசியல்வாதிகள், சமூக நிறுவனங்கள் முன் வந்து இந்த குடி தண்ணீர் பிரச்சினைக்கு தீர்வை பெற்று தர வேண்டும் என தோட்ட மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.