பெருந்தோட்டத் தொழிலாளர்களின் நாளாந்த குறைந்த பட்ச சம்பளத்தை 1700 ரூபாவாக அதிகரிப்பதற்கான தீர்மானத்தை அனைத்து தோட்ட முதலாளிமார்களும் அடுத்த மாதம் முதல் நடைமுறைப்படுத்த வேண்டும்.
குறைந்தபட்ச சம்பளத்தை வழங்காத தோட்டங்கள் அரசாங்கத்தால் சுவீகரிக்கப்பட்டு முறையானவர்களிடம் கையளிக்கப்படும் என தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார நேற்று (26) தெரிவித்தார்.
சிறு தேயிலை தோட்ட உரிமையாளர்கள் ஏற்கனவே குறைந்தபட்ச சம்பளத்தை விட அதிகமாக சம்பளத்தை செலுத்தி வருவதாகவும், அரசாங்கத்திடம் இருந்து தனியாருக்கு மாற்றப்பட்ட உள்ளூர் தோட்ட நிறுவனங்களில் இந்த சம்பளத்தை அதிகரிப்பதில் சிக்கல் இருப்பதாகவும் அமைச்சர் கூறினார். குறைந்தபட்ச சம்பளத்தை அமுல்படுத்தாத தோட்ட நிறுவனங்களை கையகப்படுத்தி அவற்றை உரிய முறையில் நடைமுறைப்படுத்தக் கூடியவர்களுக்கு வழங்குவதற்கான அடிப்படை சட்டத்தை தயார் செய்ய ஜனாதிபதி அமைச்சரவையில் தீர்மானம் எடுத்துள்ளதாக அமைச்சர் கூறினார்.
எல்பிட்டிய தேயிலைத் தோட்டத் தொழிலில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பள அதிகரிப்பு தொடர்பில் அறிவிக்கும் நிகழ்வில் கலந்துகொண்ட போதே அமைச்சர் இதனை தெரிவித்தார்.
பெருந்தோட்ட முதலாளிகளுடன் பல சுற்றுப் பேச்சுவார்த்தைகளை நடத்தினோம். தொழிற்சங்கங்களுடன் பல சந்திப்புகளை நடத்தினோம். ஆனால் இறுதியில் இரு தரப்பினரும் ஒரு பொது உடன்படிக்கைக்கு வரவில்லை .எனவே தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சு என்ற வகையில் அமைச்சுக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களுக்கு அமைவாக சம்பள நிர்ணய சபையை கூட்டினோம்.
பெருத்தோட்ட முதலாளிமார்கள் முதல் சந்திப்பில் கலந்து கொள்ளாததால், இரண்டாவது சந்திப்பில் பங்கேற்க மாட்டார்கள் என உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டது.
எனவே, உடன்பாடு இல்லாதபோது எடுக்கக்கூடிய ஒரு செயலாக தொழில் ஆணையாளரின் அதிகாரப் பிரதிநிதிகள் மூலம் இறுதியாக சம்பள நிர்வாக சட்ட விதிகளின்படி ETF EPF உடன் அடிப்படை சம்பளம்1350 ரூபாய் மற்றும் மேலதிகக் கொடுப்பனவு 350 ரூபாய் என சம்பளம் 1700 ரூபாய் வழங்கப்பட வேண்டும் என்று நாங்கள் முன்மொழிந்துள்ளோம். அதனை மே 01 ஆம் திகதி அன்று வர்த்தமானியில் வெளியிட்டோம். அதற்கு எதிராக சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு ஆட்சேபனை தெரிவிக்க 15 நாட்கள் அவகாசம் அளிக்கப்பட்டது.
எனினும் இதற்கான முறையான ஏற்றுக்கொள்ளக்கூடிய அளவிலான முன்மொழிவுகள் மற்றும் திட்டம் எதுவும் முன்வைக்கப்படாததால் கடந்த வியாழன் அன்று நாளாந்த குறைந்த பட்ச சம்பளம் 1350 ரூபாய் மேலதிக கொடுப்பனவு 350 ரூபாய் என வர்த்தமானி அறிவிப்பை தொழில் திணைக்களம், அரசாங்கம் மற்றும் தொழில் அமைச்சர் என்ற வகையில் உத்தியோகபூர்வமாக உறுதிப்படுத்தி வெளியிட்டோம்.
இந்த சம்பளம் குறித்து ஜனாதிபதி பல சந்தர்ப்பங்களில் முதலாளிமார்களுடன் பேசினார். அவர்களிடம் கோரிக்கை விடுத்தார். இத்தேயிலை தொழிலை அபிவிருத்தி செய்ய ஜனாதிபதி விரும்பினார். கொரோனா காலத்தில் இந்த நாடு வீழ்ந்த காலத்தில் முறையாக உணவு உட்கொள்ள முடியாமல் பெருத்தோட்டத் தொழிலாளர்கள் பெரும் தியாகம் செய்தனர். எனவே பெருத்தோட்டத் தொழிலாளர்களுக்கு நியாயமான சம்பளத்தை வழங்குமாறு ஜனாதிபதி தோட்ட முதலாளிமார்களுக்கு அவ்வப்போது அறிவித்து வந்தார் . ஆனால், இறுதியில் அவர்களிடமிருந்து வெற்றிகரமான பதில்கள் எவையும் கிடைக்கவில்லை. அதனால் தான் இந்த சம்பள உயர்வு குறித்த முடிவை எடுத்தோம். எனவே இனிவரும்காலத்தில் அனைத்து பெருத்தோட்ட முதலாளிமார்களும் இக்குறைந்தபட்ச நாளாந்த அடிப்படை சம்பளத்தை வழங்க வேண்டும். குறிப்பாக 1350 ரூபாவிற்கு மேல் குறைந்த பட்ச அடிப்படை சம்பளம் வழங்கும் சிறு தேயிலை தோட்ட உரிமையாளர்கள் மற்றும் தேயிலை தொழிற்சாலை உரிமையாளர்கள் உள்ளனர் என்பதை நினைவுபடுத்த விரும்புகிறோம். தொழிலாளர்களுக்கு 1700 முதல் 2000 ரூபாய் வரை கொடுப்பவர்கள் இருக்கிறார்கள்.
எனவே, இவ்வாறு முறையாக செயல்படுத்துபவர்களுக்கு இந்தத் தொகை எவ்வித பிரச்னையும் இல்லை. ETF EPF செலுத்த தேவையான தொகை 1000 ரூபாவாக இருந்தது.
அரசு தோட்டங்களை தனியாருக்கு குத்தகைக்கு விடும்போது, குத்தகைக்கு பெற்றவர்கள் இத்தோட்டங்களில் உள்ள மரங்களை வெட்டி வேறு தொழில் செய்கின்றனர். இந்த தேயிலை மற்றும் றப்பர் மூலம் எமது தொழிலாளர்களுக்கு உரிய ஊதியம் கிடைப்பதில்லை என இன்று பலவாறு தெரிவிக்கப்படுகின்றன .
அதனால்தான் இந்த சம்பள அதிகரிப்பு முன்மொழியப்பட்டுள்ளது. மேலும் பயனுள்ள வகையில் அதை செலுத்த வாய்ப்பு உள்ளது. எதிர்காலத்தில், உற்பத்தியை முழுமையாக அதிகரிக்க வேண்டும். அதற்கு அரசு என்ற வகையில் நாங்களும் துணை நிற்கிறோம். தமது திறமையின்மையினால் தொழிலாளிகளுக்கு சம்பளம் வழங்காமல் மறைத்து இலாபத்தைமுறையாக காட்டாது செயற்படும் பெருத்தோட்ட முதலாளிமார்கள் குறித்து கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
சிலர் அரசு தோட்டங்களை கையகப்படுத்தி, நிர்வாகத்தை கையகப்படுத்தி, அவற்றை முறையாக நிர்வகிக்காமல், தொழிலாளர்களுக்கு சம்பளம் வழங்காமல் உள்ளனர்.
இது தொடர்பில் விசேட குழுவொன்றை நியமிப்பதற்கு ஜனாதிபதி கடந்த வாரம் அமைச்சரவையில் புதிய தீர்மானத்தை எடுத்தார். அதிகரித்த சம்பளத்தை வழங்க முடியாத தோட்டங்களை மீளப் பெற்று திறமையானவர்களுக்கு வழங்குவதற்கான அடிப்படை சட்டமூலத்தை உருவாக்குவதற்கு கடந்த வாரம் அமைச்சரவையின் அனுமதி பெறப்பட்டது.
இதன்போது தோட்ட முதலாளிகளுக்கு அரசாங்கத்தின் தோட்ட குத்தகை முறை, நாடு பொருளாதார ரீதியாக ஸ்திரமற்ற நிலையில் இருந்த வேளையில், நாடு கட்டமைக்கப்பட்டு, அப்பாவி ஏழை மக்கள் கஷ்டப்பட்டு வாழ்க்கையை நடத்தும் வேளையில், சொந்த லாபத்தை நோக்காமல், இந்த நேரத்தில், தொழிலாளிக்கு சம்பளம் கொடுப்பதில் கவனம் செலுத்துங்கள்.
தோட்டங்களை நிர்வகிப்பது சிரமமாக இருந்தால், லாபம் இல்லை என்றால், தோட்டங்களை முறையாக செய்யக்கூடியவர்களிடம் ஒப்படைப்பதற்காக அரசிடம் ஒப்படையுங்கள்.
அடிப்படை வசதிகள் செய்து கொடுக்காத, தோட்டத் தொழிலாளர்களை கவனிக்காத தோட்டங்கள் அரசாங்கத்தினால் கையகப்படுத்தப்பட்டு, அவற்றை முறையாகப் பராமரிக்கக் கூடியவர்களுக்கு வழங்க அமைச்சரவை பத்திரம் தயாரிக்கப்படும்.
இந்த நாட்டை முன்னோக்கி கொண்டு செல்வதற்கு தமக்கு ஆதரவளிக்குமாறு சகலரையும் ஜனாதிபதி கேட்டுக் கொண்டுள்ளார். எனவே அவருக்கு ஆதரவை வழங்க வேண்டும். ஏனெனில் நாடு மிகவும் மோசமாக பொருளாதார நெருக்கடியில் வீழ்ந்து தற்போது மீண்டும் கட்டியெழுப்பப்பட்டுள்ளது. இப்போது நாடு முன்னேற வேண்டும். நிறம், கட்சி, இனம், சாதி, மதம் என்ற பேதமின்றி அனைவரின் ஆதரவையும் எதிர்பார்க்கிறோம்.
இந்த நாடு மிகவும் அதிர்ஷ்டமான நாடு. பொருளாதாரத்தில் மிகவும் மோசமான நிலைக்கு வந்த நாட்டை அனைவரும் ஒன்றிணைந்து ரணில் விக்கிரமசிங்க அவர்களிடம் ஒப்படைத்தோம். அவர் வீழ்த்த பொருளாதாரத்திலிருந்து நாட்டை கட்டியெழுப்பி சிறந்த முன்னேற்றத்தை கண்டுள்ளார்.
எனவே தான் ரணில் விக்கிரமசிங்க அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்டு நிச்சயம் வெற்றி பெறுவார் எனக் கூறுகின்றோம்.மீண்டும் நாடு முன்னோக்கி செல்ல வெண்டும் என்றால் ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற வேண்டும்.
எனவே அடுத்த மாதம் முதல் உயர்த்தப்பட்ட சம்பளத்தை வழங்க முடிவு செய்துள்ளோம். இல்லையெனில், சட்டத்தை அமல்படுத்த தொழில் திணைக்களத்துக்கு அதிகாரம் உள்ளதுஎனவும் அமைச்சர் தெரிவித்தார்.