குளிப்பது தமது உடல்நலத்தை பாதிக்குமாம்!

0
361

‘உலகிலேயே அழுக்கான மனிதர்” என்று கூறப்பட்ட ஓர் இரானிய தாத்தா தமது 94 வயதில் மரணமடைந்துள்ளார். பல்லாண்டுகளாக குளிக்காமல் இருந்த இவர் குளித்த சில மாதங்களிலேயே இறந்துள்ளார்.

மனிதர்கள் யாருடனும் தொடர்பில் இல்லாமல் தனியாக வசித்து வந்த அமோ ஹாஜி எனும் இவர் 50 ஆண்டுகளுக்கும் மேலாக குளிக்காமல் இருந்துள்ளார்.

குளிப்பது தமது உடல்நலத்தை பாதிக்கும் என்று அமோ ஹாஜி கருதியதால், அதைத் தொடர்ந்து தவிர்த்து வந்தார். இரானின் ஃபார்ஸ் மாகாணத்தில் உள்ள ஒரு கிராமத்தில் வசித்து வந்த அமோ ஹாஜியை குளிக்க வைக்க அந்த ஊரின் மக்கள் மேற்கொண்ட முயற்சிகள் தொடர்ந்து தோல்வியடைந்து வந்தன.

எனினும், அவர்களது அழுத்தம் காரணமாக சில மாதங்களுக்கு முன்னர்தான் அவர் குளித்தார் என்று உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

தேஜ்ஹா எனும் கிராமத்தில் வாழ்ந்தவர்கள் செங்கற்கள் மற்றும் மண்ணால் கட்டிக்கொடுத்த சிறிய அறையில் இவர் வசித்து வந்தார்.

உடல்நலம் சரியில்லாமல் போன அவர் கடந்த ஞாயிறன்று உயிரிழந்தார் என்று இரானின் ஐஆர்என்ஏ செய்தி முகமை கூறுகிறது. பல ஆண்டுகளாக இவர் குளிக்காமல் இருந்ததால் அவரது உடல் முழுவதும் கரிய அழுக்கும் சீழும் படிந்திருந்ததாக அந்தச் செய்தி கூறுகிறது.

அழுகிய இறைச்சி மற்றும் ஒரு பழைய எண்ணெய் கேனில் ஊற்றிவைக்கப்பட்ட தண்ணீர் ஆகியவையே இவரது முக்கிய உணவாக இருந்ததாக ஐஆர்என்ஏ செய்தி முகமை தெரிவிக்கிறது.

அவரைக் குளிக்க வைக்க நடந்த முயற்சிகள் அவருக்கு கடும் வருத்தத்தை உண்டாக்கின என்று அச்செய்தி குறிப்பிடுகிறது.

பிடித்த உணவு – முள்ளம்பன்றி இறைச்சி

அமோ ஹாஜி புகை பிடிப்பதை மிகவும் விரும்புபவராக இருந்துள்ளார். ஒன்றுக்கும் மேற்பட்ட சிகரெட்டுகளை ஒரே நேரத்தில் அவர் புகைக்கும் படங்கள் குறைந்தது ஒருமுறையாவது எடுக்கப்பட்டுள்ளது.

2014ஆம் ஆண்டு டெஹ்ரான் டைம்ஸ் ஊடகத்துக்கு அவர் அளித்த பேட்டியில் முள்ளம்பன்றி இறைச்சிதான் தமக்கு மிகவும் பிடித்தமான உணவு என்று கூறியுள்ளார் அமோ ஹாஜி.

தமது இளம் வயதில் உண்டான ”உணர்வுபூர்வமான பின்னடைவுகளால்” தாம் குளிக்காமல் இருப்பது போன்ற வழக்கத்துக்கு மாறான முடிவுகளை எடுத்ததாக அவர் அந்த ஊடகத்திடம் அப்போது கூறியிருந்தார்.

இவர்தான் உலகிலேயே மிகவும் நீண்ட காலம் குளிக்காமல் இருந்தவரா என்பது தெளிவாகவில்லை.

இந்தியர் ஒருவர் 35 ஆண்டுகள் குளிக்காமல், பல் தேய்க்காமல் இருந்தார் என்று 2009இல் ஊடகங்கள் செய்தி வெளியிட்டன. அவருக்கு என்ன ஆனது என்பது தற்போதைக்குத் தெரியவில்லை.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here