பத்து சத சம்பள உயர்வு கோரி 1940 ஆண்டு முல்லோயா கோவிந்தன் தன் உயிரைத் தியாகம் செய்தார். அதுவே இன்று 1000/- 1700/- என மாறியுள்ள்து. எனவே கூலி தொகைதான் மாறி இருக்கிறதே தவிர கூலி நிலைமை மாறவில்லை . மறுபுறத்தில் பெருந்தோட்டத் துறை சிறு தோட்ட முறைமைக்கு வேகமாக மாற்றப்படுகிறது. எனவே நூறு ஆண்டுகளுக்கு மேலாக கூலிக்காகவே போராடிக் கொண்டு இருக்காது நாட்டின் ஏனைய மக்களைப் போன்று நாமும் சிறு தோட்டஉடமையாளராவோம்.
கூலியா ? காணியா? தீர்மானிக்க வேண்டிய தருணம் இது. அதற்கான போராட்டத்தை தேயிலை இலங்கையில் நட்டு வைத்து ஆரம்பித்த ஜேம்ஸ் டெயிலர் நினைவிடத்திலும் முல்லோயா கோவிந்தன் கல்லறையிலும் உறுதி எடுத்துக் கொள்வோம். என மலையக அரசியல் அரங்கத்தின் தலைமை ஒருங்கிணைப்பாளரும் முன்னாள் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான மயில்வாகனம் திலகராஜா தெரிவித்துள்ளார்.
சர்வதேச தொழிலாளர் தினத்தை யும் சர்வதேச தேயிலை தினத்தையும் நினைவு கூர்ந்து மலையகப் பாட்டாளிகள் அரங்கம் ஒழுங்கு செய்த பேரணி ஹங்குரங்கத்தை லூல்கந்துர தோட்டத்தில் அமைந்த ஜேம்ஸ் டெயிலர நினைவிடத்தில் (2024-06-01) நடைபெற்றது. இந்த பேரணியை ஆரம்பித்து வைத்து உரையாற்றியபோதே திலகர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,
மலையகம் 200 என கடந்த ஆண்டு முழுவதுமாக மலையகம், நாடு தழுவியதாகவும் சர்வதேச கவனத்தை ஈர்க்கும் வகையிலும் பல்வேறு நிகழ்வுகள் நடைபெற்றன. ஆனாலும் 100 ஆண்டுகளுக்கு மேலாக மலையக சமூகத்தனர் கூலிக்காக போராடியே வருகின்றனர். 1940 ஆம் ஆண்டு 10 சத சம்பள உயர்வுக்காக போராட்டம் நடாத்திய பொழுது பொலிசாரின் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி முல்லோயாதோட்டத்தில் கோவிந்தன் எனும் தொழிலாளி மரணித்தார். அவரே மலையகத்தின் முதல் தியாகி. அன்று முதல் இன்றுவரை காலம் மாறி இருக்கிறதே தவிர நாம் கூலிக்காகவே போராடிக் கொண்டு இருக்கிறோம். கூட்டு ஒப்பந்தம் என்றும் வர்த்தமானி என்றும் கூலித் தொகைகளை அறிவித்து எம்மை இலங்கை அரசு எந்நாளும் ஏமாற்றி வருகிறது.
மறுபுறத்தே இலங்கைக்கு தேயிலையை வர்த்தகப் பயிராக ஜேம்ஸ் டெயிலர் அறிமுகப்படுத்தியிருந்தார். இப்போது 150 ஆண்டுகள் ஆகும்போது பெருந்தோட்ட முறைமை மாற்றப்பட்டு சிறு தோட்ட உடைமை முறைமை தென்னிலங்கை நோக்கி நகர்த்தப்படுகிறது.
1992 ஆம் ஆண்டு 6 லட்சமாக இருந்த பெருந்தோட்டத் தமிழ்த் தொழிலாளர்கள் இன்று ஒரு லட்சமாகக் குறைக்கப்பட்டுள்ளார்கள். அதே நேரம் 40 ஆயிரமாக இருந்த சிங்கள சிறு தோட்ட உடமையாளர்கள் இன்று 5 லட்சமாக அதிகரிக்கப்பட்டுள்ளார்கள். தமிழ்த் தொழிலாளர்கள் கூலிகளாகவே வைக்கப்பட்டுள்ளனர். மாறாக சிங்கள மக்கள் சிறு தோட்ட உடமையாளர்களாக்கப்பட்டு வருகிறார்கள்.
இங்கே இன ரீதியாக ஒரு பொருளாதாரத் துறை இயக்கப்படுவதை அவதானிக்க வேண்டும்.
எனவே தொடர்ந்தும் கூலி ஒப்பந்தம், கூலி வர்த்தமானி என தொங்கிக் கொண்டு திரியாமல் இலங்கை நாட்டின் குடிகளாக நிலத்துடன் கூடியதாக “மலையகத் தமிழ்த் தொழிலாளர்களையும் சிறுதோட்ட உடமையாளர்களாக்கு” எனும் கோரிக்கையை ஒற்றைக் கோரிக்கையாகவும் ஒருமித்த கோரிக்கையாகவும் முன்கொண்டு செல்வோம். இன்னும் 25 ஆண்டுகளில் பெருந்தோட்டங்கள் முற்றாக மூடப்பட்டு முற்று முழுதாக சிறு தோட்ட உடமையாக மாற்றப்படும்.அதற்குள் நாம் விழித்துக் கொள்ள வேண்டும் எனவும் தெரிவித்தார்.
மலையகப் பாட்டாளிகள் அரங்கத்தின் தலைவர் ஜெகநாதன், செயலாளர் பாலசேகர் உபதலைவர் சுப்பிரமணி மலையகப் பெண்கள் அணித் தலைவர் இதயஜோதி தேசிய அமைப்பாளர் சுரேஷ்குமார் இளைஞர் அமைப்பாளர் கனகராஜ் உள்ளிட்ட பலர் மேற்படி நிகழ்வில் கலந்து கொண்டிருந்தனர்.
எஸ் சதீஸ்