கொடிய HIV யிலிருந்து பாதுகாத்துக்கொள்வோம்

0
224

உலக எய்ட்ஸ் விழிப்புணர்வு நாள் ஆண்டுதோறும் டிசம்பர் 1ஆம் திகதி கடைபிடிக்கப்படுகின்றது. உலகம் முழுவதும் உள்ள எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கான உரிமைகள், மருத்துவ சிகிச்சை, அடிப்படை தேவைகள் ஆகியவற்றை பாதுகாப்பது, மேலும், உலக அளவில் எய்ட்ஸ் பரவலைக் கட்டுப்படுத்தும் திட்டங்கள், நடவடிக்கைகளை மேற்கொள்வது போன்ற செயல்களை உலக சுகாதார அமைப்பு செய்து வருகிறது.

எய்ட்ஸ் நோயால் உயிர் இழந்தவர்கள், மற்றும் எச்.ஐ.வி என்னும் மனித நோயெதிர்ப்புக் குறைபாட்டு வைரஸ் நோயால் பாதிக்கப்பட்டவர்கள் அனைவரையும் இந்நாளில் நாம் நினைவுகூர்கின்றோம்.

1987ஆம் ஆண்டில், எய்ட்ஸ் பற்றிய உலகளாவிய செயல்திட்டத்தின் இரு அதிகாரிகளான ஜேம்ஸ் பன் மற்றும் தாமஸ் நெட்டர், தொற்றுநோய் பற்றிய சர்வதேச விழிப்புணர்வை மக்களுக்கு ஏற்படுத்தவும், விழிப்புணர்வுக் கல்வி கற்பிக்கவும் உலக எய்ட்ஸ் விழிப்புணர்வு நாளிற்கான யோசனையை முன்வைத்தனர்.

உலக எய்ட்ஸ் நாளானது, தொற்றுநோயினால் ஏற்பட்டக் களங்கத்தைத் துடைக்கவும்,  வைரஸ் பற்றிய உண்மைகள், மற்றும் அதிலிருந்து தங்களை எவ்வாறு பாதுகாத்துக் கொள்வது என்பது பற்றியும் மக்களுக்குக் கற்பிக்கின்றது.

ஒவ்வோர் ஆண்டும் எச்.ஐ.வி நோயால் பாதிக்கப்பட்ட புதிய நபர்களின் எண்ணிக்கை இன்னும் குறிப்பிடத்தக்கதாக உள்ளது என்பதையும், இதை எதிர்த்துப் போராட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்பதை மக்களுக்கும் அரசுகளுக்கும் நினைவூட்டும் நாளாக இந்நாள் அமைகின்றது.

எச்.ஐ.வி, மற்றும் எய்ட்ஸ் நோய்க்கான அடையாளமாக உலகம் முழுவதும் சிவப்பு நாடா பரவலாக அங்கீகரிக்கப்பட்டு, பலரும் உலக எய்ட்ஸ் தினத்தன்று சிவப்பு ரிப்பனை அணிகின்றனர்.

ஒவ்வோர் ஆண்டும், UNAIDS, WHO, மற்றும் பிற அமைப்புகளுடன் கலந்துரையாடிய பிறகு, உலக எய்ட்ஸ் பிரச்சாரம் உலக எய்ட்ஸ் தினத்தின்போது கடைபிடிக்க ஒரு கருப்பொருளைத் தேர்ந்தெடுக்கிறது. உலக சுகாதார அமைப்பு இந்த ஆண்டு “equalize”  சமப்படுத்துதல் என்ற தலைப்பில் உலகநாடுகளை எய்ட்ஸ் நாளைக் கடைபிடிக்க கேட்டுக்கொண்டுள்ளது.

Acquired Immunodeficiency Syndrome என்னும் எய்ட்ஸ் உலகில் முதன்முறையாக 1981ஆம் ஆண்டு புதிதாக உருவாகியுள்ள உயிர்கொல்லி நோயாக அறிவிக்கப்பட்டது. அதற்கு பின்பு முதன்முறையாக இந்தியாவில் சென்னையில் உள்ள பாலியல் தொழிலில் ஈடுபடக் கூடிய பெண் ஒருவருக்கு 1986ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதன்முறையாக இது கண்டறியப்பட்டது.

உலகெங்கிலும் சுமார் 3 கோடியே 80 இலட்சம் மக்கள் எச்ஐவி வைரஸுடன் வாழ்கின்றனர் எனவும், 1984ஆம் ஆண்டு முதல் 3 கோடியே 5 இலட்சத்திற்கும் அதிகமானோர் எய்ட்ஸால் தங்கள் உயிரை இழந்துள்ளனர் எனவும் தெரிய வருகின்றது.

தற்போது பலவிதமான சமூக பொருளாதார காரணங்களால் எய்ட்ஸ் தொற்று நோய்க்கான சிகிச்சை கிடைப்பதில் சமத்துவம் இல்லாமல் இருப்பதாக உலக சுகாதார நிறுவனம் கவலை கொண்டு இந்த ஆண்டு சமப்படுத்துதல் என்ற தலைப்பில் எய்ட்ஸ் நாளைக் கடைப்பிடிக்கிறது.

2021 ஆம் ஆண்டின் இறுதியில் எடுக்கப்பட்ட நிலவரப்படி எச்.ஐ.வி நோயால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை சுமார் 38.4 மில்லியன் ஆக இருந்தது.

இவர்களில் மூன்றில் இரண்டு பங்கு (25.6 மில்லியன்) ஆப்பிரிக்காவில் வாழ்கின்றனர். இங்கிலாந்து நாட்டில் ஒவ்வொரு ஆண்டும் 4,139 பேருக்கும் மேலாக எச்.ஐ.வி நோயால் பாதிக்கப்படுகின்றனர்.

கல்வி மற்றும் விழிப்புணர்வு இவைகளால் மட்டுமே எய்ட்ஸ் நோயை தடுக்க முடியும் என்று நாடகங்கள் மூலம் மக்களுக்கு விழிப்புணர்வுகளை ஏற்படுத்துவது இந்த நாளின் நோக்கமாகும். இந்த ஆண்டின் உலக எய்ட்ஸ் தினத்தின் முக்கிய நோக்கம்(தீம்), ‘சமமாக்குதல்(Equalize)’ என்று முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதன்படி எச்.ஐ.வி நோயினால் மக்களிடையே வரும் ஏற்ற தாழ்வுகளை குறைக்கவும், எய்ட்ஸ் நோயை முற்றிலும் ஒழித்து மக்களை காக்க நாம் அனைவரும் ஒன்றாக செயல்பட வேண்டும் என்பதாகும்.

உடலின் நோய் எதிர்ப்பு மண்டல செயல்பாடுகள் குறையும்போது, பல்வேறு நோய்களின் தாக்கம் அதிகரித்து இறுதியில் உயிரைப் பறிக்கும் நிலை ஏற்படுகிறது. தற்போது எய்ட்ஸ் பற்றிய விழிப்புணர்வு அதிகரித்திருந்தாலும் எச்.ஐ.வி. உலகின் மிகப்பெரிய பொது சுகாதாரப் பிரச்சனையாக தொடர்ந்து இருந்து வருகிறது.  .

எச்.ஐ.வி. பரவும் வழிகள்

எச்.ஐ.வி. தொற்றுள்ள ஒருவருடன் பாலியல் உறவு கொள்ளுதல்,. தொற்றுள்ள இரத்தத்தால் அசுத்தமடைந்த ஊசியை மறுபடியும் பயன்படுத்துதல், தொற்றுள்ள ஒருவரிடமிருந்து மற்றொருவர் உடலுக்கு இரத்தம் செலுத்துதல், HIV தொற்றுள்ள தாயின் இரத்தத்தின் வழியாக கருவிலுள்ள குழந்தைக்கும், தாய்ப்பால் வழியாக,  பிறந்த குழந்தைக்கும் பரவுகிறது. பச்சை குத்தல், காது குத்தல், அக்குபஞ்சர் மற்றும் பல் மருத்துவத்தின்போதும் எச்.ஐ.வி. பரவும் ஆபத்து உள்ளதால் கவனமாக இருக்க வேண்டியது அவசியம். Antiretroviral Therapy (ARV)என்கிற, எச்.ஐ.வி. தொற்றுக்கு கொடுக்கப்படும் சிகிச்சையின் மூலம் அந்த கிருமியைக் கட்டுப்படுத்தி பரவாமல் தடுக்க முடியும்.

நோய்த்தடுப்பு முறை

எய்ட்ஸ் நோய் வராமல் தடுக்க, தவிர்த்தல், உண்மையாய் இருத்தல், காப்புறைப் பயன்படுத்துதல் போன்றவைகள் முக்கியமாகக் கருதப்படுகின்றன. எச்.ஐ.வி. தொற்று அல்லது எய்ட்ஸ் நோய் பற்றிய சரியான புரிதலை மக்களிடம் ஏற்படுத்த வேண்டும்.

அங்கீகரிக்கப்பட்ட இரத்த வங்கிகள் வழியாக மட்டுமே இரத்த மாற்றம் செய்தல், மற்றும் பெற்றோரிடம் இருந்து குழந்தைக்குத் தொற்று பரவுவதைத் தடுக்க மருத்துவரிடம் உரிய ஆலோசனை பெறுதல் அவசியம். பாலியல் தொழிலாளிகள், நரம்பு வழியே போதையேற்றும் பழக்கமுடையவர்கள், கனரக வாகன ஓட்டுநர்கள், இடம்பெயரும் தொழிலாளர்கள், அகதிகள், கைதிகள் போன்றவர்களுக்கு இத்தொற்று ஏற்படும் வாய்ப்புள்ளதால், இதுபோன்ற நபர்கள் ஆறு மாதங்களுக்கு ஒரு முறை எச்.ஐ.வி. பரிசோதனை செய்வது நல்லது. எச்.ஐ.வி. பாதிப்பு இருப்பவர்களோடு இணைந்து பணியாற்றுவது, அவர்களைத் தொடுதல், கைகுலுக்குதல் போன்ற உடல் தொடர்புகளால் எச்.ஐ.வி. பரவுவதில்லை.

மையங்களில் சிறப்பு மருத்துவ சிகிச்சை அளிக்கப்படுகிறது. பள்ளி, கல்லூரி மாணவ மாணவிகள், மற்றும் பொதுமக்களுக்கு எய்ட்ஸ், பால்வினை தொற்று சிகிச்சை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

எய்ட்ஸ் தொற்று உள்ளோரை பரிவுடன் அரவணைத்து சம உரிமை அளித்து, அவர்களது தன்னம்பிக்கை வளர உதவுவோம்.

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here