நுவரெலியா கல்வி வலயத்திற்கு உட்பட்ட கொட்டக்கலை , பத்தனை தமிழ் வித்தியாலயத்தில் 42 மாணவர்கள் திடீர் சுகயீனமடைந்த நிலையில் கொட்டக்கலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இன்று காலையே இவ்வாறு அனுமதிக்கப்பட்டதாகத் தெரிய வருகிறது.
சம்பவம் தொடர்பில் தரம் – 6 முதல் 11 வரை கல்வி கற்கும் மாணவர்களில் சிலருக்கு திடீரென மயக்க நிலை, வாந்திபேதி ஏற்பட்டு 42 மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 29 பெண் பிள்ளைகளும் 13 ஆண் பிள்ளைகளுமே அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
நேற்று திங்கட்கிழமை, பிற்பகல் ஐவருக்கு மயக்க நிலை ஏற்பட்டு கொட்டக்கலை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றதுடன் தொடர்ந்தும் மாணவியொருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப்பெற்றுவருவதாகவும் தெரிய வருகிறது.
இந்நிலையில் இன்று ஏற்பட்ட திடீர் சுகயீனத்தால் பாதிக்கப்பட்டவர்களில் 10 ஆண்களும் பத்து பெண் பிள்ளைகளும் சிகிச்சைப் பெறு வருவதுடன், ஏனையவர்கள் வெளிநோயார் பிரிவில் சிகிச்சைப் பெறுவதாகத் தெரியவருகிறது.
பாடசாலையில் தரம் 1 முதல் தரம் ஐந்து வரையான மாணவர்களுக்கு உணவு வழங்கப்பட்டு வருவதாகவும் பாடசாலை நிர்வாகம் சுட்டிக்காட்டியுள்ளது.
எனினும் 42 பேருக்கு திடீர் சுகயீனம் குறித்த காரணம் தொடர்பில் வைத்தியர்கள் சோதனை நடத்தி வருகின்றனர்.
எம்.கிருஸ்ணா