முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவை சிங்கப்பூரில் தங்குவதற்கு மேலும் 14 நாட்கள் அவகாசம் வழங்குமாறு சிங்கப்பூர் அரசாங்கத்திடம் இலங்கை அரசாங்கம் கோரிக்கை விடுத்துள்ளதாக சிங்கள நாளேடு ஒன்றின் இணையத்தளம் செய்தி வெளியிட்டுள்ளது.
இது தொடர்பாக இன்று சனிக்கிழமை வெளியான அந்த இணையத்தளத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
சிங்கப்பூரில் தங்கியிருக்கும் கோட்டாபய ராஜபக்ச, விசா காலாவதியானதை அடுத்து, இம்மாதம் 11 ஆம் திகதி நாட்டுக்கு திரும்பவிருந்தார். எவ்வாறாயினும், அரசாங்கத்தின் வேண்டுகோளுக்கு இணங்க, இம்மாதம் இறுதி வாரம் வரை ராஜபக்ச சிங்கப்பூரில் தங்கியிருப்பார் என்று அறியப்படுகின்றது.
செயற்பாட்டாளர்களின் பலத்த எதிர்ப்பை எதிர்கொண்ட கோட்டாபய ராஜபக்ச, கடந்த மாதம் 14 ஆம் திகதி மாலைதீவு ஊடாக சிங்கப்பூர் சென்றதை அடுத்து, அங்கு இரண்டு வாரங்கள் தங்கியிருக்க அனுமதிக்கப்பட்டார்.
பின்னர் அந்த காலமும் மேலும் இரண்டு வாரங்களுக்கு நீடிக்கப்பட்டது என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.