இலங்கைக்கு மீண்டும் திரும்பிய முன்னாள் அரச தலைவர் கோட்டாபய ராஜபக்சவை வரவேற்க செல்லவிடாத மனைவியை அரிசி பாத்திரத்தால் கணவர் ஒருவர் தாக்கியுள்ளதாக கொழும்பு செய்திகள் தெரிவிக்கின்றன.
இச்சம்பவம் கம்பஹாவுக்கு சற்று தொலைவில் உள்ள கிராமத்துக்கு அருகில் இடம்பெற்றுள்ளது. ஸ்ரீங்கா பொதுஜன பெரமுனவின் ஆயுட்கால உறுப்பினரான அவர், பல தேர்தல்களில் கட்சிக்காக கடுமையாக உழைத்துள்ளார். கோட்டாபய ராஜபக்ச நாட்டை விட்டு வெளியேறி, அரச தலைவர் பதவியில் இருந்து வெளியேறிய காலம் தொட்டு கவலையாக இருந்து வந்துள்ளார்.
கோட்டாபய ராஜபக்ச நாடு திரும்புகின்றார் என்பதனை அறிந்த அந்த நபர், அவரை வரவேற்க கட்டுநாயக்க செல்ல பல நாட்களாக தயாராகி இருந்துள்ளார்.
நேற்று முன்நாள் இரவு கோட்டாபய ராஜபக்ச நாடு திரும்புகின்றார் என்பதனை அறிந்த அவர், தனது முச்சக்கர வாகனத்தில் கட்டுநாயக்கவுக்கு செல்வதற்கு அலாரம் வைத்துள்ளார். எனினும், கோட்டாபாய ராஜபக்சவை வரவேற்க கணவர் செல்வதற்கு மனைவி கடும் எதிர்ப்பு தெரிவித்த போதிலும் அவர் அதனை பொருட்படுத்தவில்லை.
எனவே, அவர் தூங்கச் சென்றதும், நள்ளிரவில் எழுந்த அவரது மனைவி அலாரத்தை நிறுத்தியுள்ளார். அதன்படி, அதிகாலையில் எழுந்திருக்க முடியாமல், பகலில் சற்று தாமதமாக எழுந்ததால், மனைவியுடன் தகராறு செய்துள்ளார்.
அலாரத்தை நிறுத்தியதனால் ஆத்திரமடைந்த அவர், அரிசி பாத்திரத்தால் மனைவியை தாக்கியுள்ளார். இதனால், அவருக்கு சிறிதளவிலான காயங்கள் ஏற்பட்டன. அதன் பிறகு அவர்களின் மோதலினை அப்பகுதியைச் சேர்ந்த இருவரால் தீர்த்து வைக்கப்பட்டதாக கொழும்பு செய்திகள் மேலும் தெரிவிக்கின்றன.