‘கோதா-கோ-கம’ போராட்ட குழுக்கள் – எதிரணி எம்.பிக்களுக்கிடையில் இடம்பெற்ற கலந்துரையாடல்

0
297

நேற்று மாலை, எதிரணி எம்பிகளுக்கும், ‘கோதா-கோ-கம’ போராட்ட குழுக்களுக்கும் இடையில் ஒரு கலந்துரையாடல் சந்திப்பு நிகழ்ந்தது.

ராஜித சேனாரத்ன எம்பி, சர்வகட்சி போராட்டக்குழு ஆகியோர் இந்த சந்திப்பை ஏற்பாடு செய்திருந்தனர். சுவாரசியமாகவும், கரடு முரடாகவும் இந்நிகழ்வு நிகழ்ந்தது.
நானும், நண்பர் சுமந்திரனும் இருந்தோம். தவிர ராஜித, ரிஷாத், திகா, ராதா, தயாசிறி, சம்பிக்க, அனுர பிரியதர்ஷன, சந்திமல் வீரக்கொடி, திஸ்ஸ ஆகியோர் உட்பட பலர் கலந்தனர்.

ஆரம்பத்தில் ரத்தின ஆமதுரு எம.; பியும் அங்கே காணப்பட்டார். ‘இவர் இங்கே என்ன’ என நான் யோசித்த போதே, ‘அவசர வேலை’ என்று சொல்லி அவர் போய் விட்டார்.

ரத்தின ஆமதுரு எம்பிக்கு அழைப்பு இல்லை. சுயமாக வந்தார். ஆகவே போக சொல்லி விட்டோம் என்று கூறி, உரையாடலை ஒருவழியாக தாமதமாக போராட்ட குழுவினர் ஆரம்பித்தனர்.

ஏற்பாட்டு ‘கோதா-கோ-கம’ போராட்ட குழு, ஒரு 10 அம்ச சிங்கள ஆவணம் ஒன்றை எமக்கு தந்திருந்தது. தமிழில் இல்லை, ‘சொறி’ என்றார்கள்.
உரையாடல், ஆரம்பிக்கப்பட்டதுமே, அங்கிருந்த ‘கோதா-கோ-கம’ போராட்ட குழுக்கள் மத்தியில் வாத பிரதிவாதங்கள் ஏற்பட்டன. ‘நாம் அப்படி, நீர் எப்படி’ என்றும், ‘இந்த ஆவணத்தை முழுக்க ஏற்க முடியாது’ என்றும், ’20வீதம், ஏற்கலாம், 80வீதம் ஏற்க முடியாது’ என்றும் குழுவினர் தங்களுக்குள் வாதிட்டனர்.

நாம் அமைதியாக பார்த்துகொண்டு இருந்தோம். பிறகு சம்பிக உட்ட சில எம்.பிக்கள், வேறு வேலை உள்ளது என கூறி இந்நிகழ்வுக்கு ஆதரவை கூறிவிட்டு போனார்கள்.

‘கோதா-கோ-கம’ போராட்ட குழுக்களுக்கள் ஒவ்வொருவரும், தம்மை அறிமுகப்படுத்தி கொள்ள ஆரம்பித்தனர். அதிலும் குழுக்களுக்குள் முரண்பாடு ஏற்பட்டது.

கடைசியில், ‘கோதாபயவை விரட்டுவோம், அவருடன் எந்த ‘டீலும்’ செய்யக்கூடாது’ என்ற குறைந்தபட்ச உடன்பாட்டில் ஏனைய விடயங்களை பிறகு பார்ப்போம் என்று கூறி, உரைகள் ஆரம்பமாயின.

அதன்பிறகு, போராட்டக்குழு உறுப்பினர்கள், பேசினார்கள். இதில் சிலர், அங்கிருந்த எம்பிகளை கடுமையாக விமர்சிக்க ஆரம்பித்து விட்டனர்.
‘எமது போராட்டம் கோதாபய ராஜபக்சவை விரட்டும் போராட்டம். இப்படி காலத்துக்கு காலம் நாட்டில் போராட்டங்கள நிகழ்ந்துள்ளன. அவை காட்டிக்கொடுக்கப்பட்டுள்ளன. வடக்கில் தமிழ் இளைஞர்களின் போராட்டமும் அப்படிதான். உங்களுக்கு மறுவாழ்வு கொடுக்க எமக்கு முடியாது.’
‘இங்கே இருக்கின்ற எல்லோரும் ராஜபக்சவுடன் அரசியல் செய்தவர்கள், ராஜபக்சவை மீண்டும் பதவிக்கு கொண்டுவர பாடுபட்டவர்கள். தமிழ் கூட்டமைப்பை தவிர எல்லோரும் ஒன்றுதான்.’ என ஒரு காலிமுக திடல் போராளி (பெயர் வேண்டாம்..!) உச்சதொனியில் பேசினார்.

நான் இடைமறித்து ‘நான் ஒருபோதும் ராஜபக்சவுடன் அரசியல் நடத்தியவன் அல்ல’ என்று சொன்னேன். அப்போது முதலில் பேசியவர், ‘மன்னிக்க, உங்களை எமக்கு தெரியும். நான் உங்களை சொல்லவில்லை. இங்குள்ள ஏனையோரை சொன்னேன்’ என்றார். நான் தொடர்ந்து சொன்னேன்.

‘தம்பிகளா, உங்கள் உணர்வுகள் மெச்சத்தக்கவை. உங்கள் போராட்டம் வெல்ல வேண்டும். அதன்மூலம் மாற்றம் வர வேண்டும். அந்த மாற்றம் முற்போக்கான மாற்றமாக வர வேண்டும்.’

‘நாம் இந்நாட்டில் ஜனாதிபதியாக, பிரதமராக வரவேண்டி அரசியல் செய்யவில்லை. அரச பயங்கரவாத இனவாதத்துக்கு எதிராக எங்கள் மக்களை நாம் பிரதிநிதித்துவம் செய்கிறோம்.’ ‘கோதபாய, பலமான பாதுகாப்பு செயலாளராக இருந்த போதே, நான் அவரை எதிர்த்து போராட்டம் செய்தவன்’

‘கோதாபயவை விரட்டுவோம், அவருடன் எந்த ‘டீலும்’ செய்யக்கூடாது, என்ற முதல் நிபந்தனையை, இணைந்து வேலை செய்வற்காக, இங்கே எல்லோருக்கும் நீங்கள் கூறினீர்கள். நல்லது. நாம் அதற்கு 200வீதம் உடன்படுகிறோம்.’
‘எமக்கும் உங்களுடன் சேர்ந்து வேலை செய்ய ஒரு நிபந்தனை உள்ளது. அதை என் பக்கத்தில் அமர்ந்துள்ள நண்பர் சுமந்திரனும் ஏற்றுக்கொள்வார் என நான் திடமாக நம்புகிறேன்.’

‘எம் நிபந்தனை இதுதான். நம்நாடு, பல மொழி பேசி, பல மதங்கள் கடைபிடிக்கப்பட்டு, பல இனங்கள் வாழும் பன்மைத்துவ நாடு. இது, ஒரு சிங்கள பௌத்தம் மட்டும் என்ற நாடு அல்ல. இது சிங்கள, தமிழ், முஸ்லிம், பௌத்த, இந்து, இஸ்லாம், கத்தோலிக்க நாடு. இன்னும் எவ்வளவோ இருக்கு. ஆனால், நீங்கள் முதற்கட்ட அடிப்படையாக, இந்த பன்மைத்துவத்தை ஏற்க வேண்டும். கோதாபயவை விரட்ட நாம் சேர்ந்து வேலை செய்வோம்.’

‘ஏனெனில் நாம் தோற்கடிக்க எண்ணுவது, கோதாபய ராஜபக்ச என்ற தனி நபரை அல்ல. ராஜபக்சர்கள் பிரதிநிதித்துவம் செய்யும் அந்த பேரினவாத கொள்கையைத்தான்.’

இதற்கு அங்கிருந்த காலிமுக திடல் போராளிகள் உடனடியாக பதில் எதுவும் கூறவில்லை. ‘இல்லை, அதை ஏற்க மாட்டோம்’ என்றும் கூறவில்லை. ஆனால், என் கருத்தை அமைதியாக கேட்டுக்கொண்டார்கள்.

எமது அணியில் அமர்ந்திருந்த சிங்கள எம.;பிகளும் ஒன்றும் கூறவில்லை.
நான் பேசி விட்டு வேறு வேலை காரணமாக இடையில் கிளம்பி வந்து விட்டேன்.
கிளம்பும் முன், நான் நண்பர் சுமந்திரனிடம் ஒரு யோசனையை முன்வைத்தேன். ‘இந்த காலிமுக திடல் போராளிகளுடனான உரையாடலை தமிழ் தேசிய கூட்டமைப்பும் (TNA), தமிழ் முற்போக்கு கூட்டணியும் (TNA) ஒருமித்து கையாள்வோம். இந்த அவகாசத்தை பயன்படுத்துவோம். நாம் சில அடிப்படைகளை எழுத்து மூலம் தயாரித்து அவர்களுக்கு வழங்குவோம்.’

என் கருத்தை சுமனும், என்னருகில் இருந்த ராதாவும், திகாவும் உடன் ஏற்றுக்கொண்டனர். எனினும் நாம் கட்சிரீதியாக கூடி இதுபற்றி அதிகாரபூர்வமாக முடிவெடுக்க வேண்டும். அதை நாம் செய்வோம். நண்பர் சுமந்திரனும் செய்வார் என எதிர்பார்க்கிறேன்.

Mano Ganesan – Mp’s FB

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here