‘க்ளப்’ வசந்த சுட்டுக்கொலை நடந்தது என்ன?

0
382

அத்துருகிரியவில் இன்று நடந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் கொல்லப்பட்ட வசந்த சுரேந்திர பெரேரா எனப்படும் க்ளப் வசந்த இலேசுப்பட்ட பிரமுகர் அல்ல.. பாதுகாப்பு மற்றும் அரசியல்வாதிகள் ஏராளமானோர் அவரின் நண்பர்கள்.. தமிழ் அரசியல்வாதிகளும் அதில் அடக்கம்..

ஆரம்பகாலத்தில் கட்டப்பஞ்சாயத்து , கிஸ்தி , வரி , வசூல் , வட்டி என்றவாறு ஓடிக்கொண்டிருந்த அவரது வாழ்க்கை பணத்தால் நிறைந்தது.. கதிர்காமக் கந்தனின் பக்தர்.. பல இடங்களில் மயிரிழையில் உயிர் தப்பியுள்ளார்.. அப்படி தப்பிய நாட்களில் அவர் கதிர்காமம் சென்று பணத்தை வாரியிறைத்து பூஜை, தான தருமங்களை செய்வார்..

செய்யும் தவறுகளுக்கு பரிகாரமாக புண்ணிய வேலைகளை செய்யலாமென நம்பும் தமிழ் பெருச்சாளி முதலைகளை போல வசந்தவும் நம்பி செயற்பட்டார். மயிரிழையில் உயிர்தப்பிய சம்பவங்களில் அவர் கதிர்காமக் கந்தனை மகிழ்விக்க செய்யும் வேலைகளை கண்டு பூரிப்படையதோர் இல்லை..

மாக்கந்துர மதுஷின் நெருங்கிய நண்பர்தான் க்ளப் வசந்த.டுபாயில் மதுஷ் பார்ட்டி ஒன்றை நடத்தியதும் அதில் கஞ்சிப்பான இம்ரான் உட்பட்ட பலர் சிக்கிக் கொண்டதும் தெரிந்த விடயம்.. அந்த பார்ட்டிக்கு செல்லவிருந்த க்ளப் வசந்த , மனைவியுடன் கட்டுநாயக்க விமான நிலையம் சென்றபோது விமானம் புறப்பட்டிருந்தது. மதுஷின் பார்ட்டிக்கு செல்ல முடியாமல் போனதே என்று வீடு திரும்பி கவலைப்பட்டுக் கொண்டிருந்த க்ளப் வசந்த , அந்த பார்ட்டியில் சிக்கியவர்களை டுபாய் பொலிஸ் கைது செய்தது என்ற செய்தி வந்த கையோடு கந்தன்தான் தன்னை காப்பாறியதாக கூறி கதிர்காமத்தில் போய் நின்றார்..

இங்கே தான் ஆரம்பித்தது
முடிவின் தொடக்கம் ..

மாக்கந்துர மதுஷின் நெருங்கிய நண்பர் கஞ்சிப்பான இம்ரான் டுபாயில் சிக்கிய புள்ளிகளில் ஒருவர்.. மதுஷின் பணம் வசந்தவிடம் இருப்பதும் முதலீடாக அது பல வடிவங்களில் இருப்பதும் இம்ரானுக்குத் தெரியும்.. கைது செய்யப்பட்டு அழைத்துச் செல்லப்படும்போதே மதுஷ் எல்லா விடயங்களையும் இம்ரானிடம் கூறிவிட்டார் .

கூட்டிக்கழித்துப் பார்த்தார் கஞ்சிப்பான இம்ரான்.

தமிழ்ப்படங்களின் தீவிர ரசிகரான க்ளப் வசந்த , மாக்கந்துர மதுஷின் பார்ட்டியை டுபாய் பொலிசுக்கு போட்டுக்கொடுத்து மதுஷிடமிருந்து கிடைத்த காசையெல்லாம் சுருட்டவும், அதனால்தான் பார்ட்டியில் கலந்துகொள்ளாமல் விட்டிருக்கலாமெனவும் சந்தேகப்பட்டார் கஞ்சிப்பான இம்ரான்..

இலங்கையில் சிறையில் இருந்த காலத்திலும் இப்போது தப்பி வெளிநாட்டில் இருக்கும் நேரத்திலும் மூன்றாவது நபர்கள் ஊடாக வசந்தவுக்கு தகவல் அனுப்பி நியாயம் கேட்டிருக்கிறார் கஞ்சிப்பான இம்ரான்.. எப்போது கேட்டாலும் வசந்த அளித்த ஒரே பதில் ‘ மதுஷின் பணம் என்னிடம் இல்லை’ என்பதுதான்..

இதனால் கடும் ஆத்திரத்தில் இருந்த கஞ்சிப்பான இம்ரான் , இன்றைய இந்த சம்பவத்தை திட்டம் தீட்டியதாக பொலிஸ் சொல்கிறது. இன்று வசந்த மீது வாரியிறைக்கப்பட்ட துப்பாக்கி ரவைகளில் ’KPI என்ற மூன்றெழுத்து எழுதப்பட்டிருந்தது. கஞ்சிப்பான இம்ரான் என்ற பெயரின் சுருக்கம் அது என்கிறது பொலிஸ் ..

டெட்டூ பச்சை குத்துதல் கடை திறப்பில் இருந்து கொலையாளிகள் காரில் , வேனில் தப்பி ஓடும்வரை எல்லாமே பக்கா திட்டமிட்டு செய்யப்பட்டுள்ளது..

துப்பாக்கிதாரி ரவைகளை தீர்க்கும்போது க்ளப் வசந்தவின் பாதுகாப்பு அதிகாரி மேசைக்கு கீழ் ஒளிந்து தப்பியமை , கடையை திறந்தவர்களுக்கு சிறு காயம் கூட இல்லாமை , துப்பாக்கி , படை பட்டாளத்தோடு செல்லும் வசந்த இன்று எதுவுமில்லாமல் சென்றமை போன்ற விடயங்கள் பொலிஸாரின் கவனத்தை ஈர்த்துள்ளது. எப்படியோ யாரோ கொடுத்த கயிறை விழுங்கியுள்ளார் வசந்த.. எந்த பாதுகாப்புமில்லாமல் சென்றதும் அதனால் தான்..

‘பட்டப்பகலில் சுட்டுத்தள்ளிவிட்டு போகிறார்கள் இதென்ன சிக்காகோவா?” என்று பொலிஸாரிடம் கேட்கிறார் இன்றைய சம்பவ இடத்தை பார்வையிட்ட அத்துருகிரிய நீதவான்… ( அப்படியாவது அமெரிக்காவில் இருக்கிறோமே என்று மகிழாதீர்கள் )

க்ளப் வசந்தவின் மரணம் மேலும் பல உண்மைகளை அம்பலப்படுத்தப்போகிறது.. அந்த தகவல்களுக்காக காத்திருப்போம்….!

(கஞ்சிப்பான பெயரை சுருக்கமாக பொறிக்கப்பட்ட துப்பாக்கி ரவை மற்றும் க்ளப் வசந்தவின் தற்பாதுகாப்புக்காக இருந்தும் பயன்படுத்தப்பட முடியாமல் போன கைத்துப்பாக்கி என்பவற்றின் படங்கள் இணைக்கப்பட்டுள்ளன. இவை சம்பவ இடத்திலிருந்து மீட்கப்பட்டன.
மூத்த ஊடகவியலாளர் சிவா ராமசாமி அவர்கள் தனது முகப்புத்தகத்தில் பதிவிட்டுள்ள பதிவையே இங்கு தருகிறோம்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here