2001 ஆம் ஆண்டிலிருந்து நான் இந்த பாராளுமன்றில் இருக்கிறேன். இரு தசாப்தங்களாக எத்தனையோ நிதி அமைச்சர்களின் வீர தீர பிரகடனங்களையும், வரவு செலவு திட்ட உரைகளையும் கேட்டு சலித்து போயுள்ளேன். ஒவ்வொரு வருடமும் இவர்கள் கூறும் சுந்தர கதைகள் உண்மையாகி இருக்குமானால், இந்நாடு இன்று சுவிட்சர்லாந்தை விட முன்னேறி இருக்க வேண்டும். ஆசியாவின் சொர்க்கபுரி ஆகி இருக்க வேண்டும். ஒன்றும் நடக்க வில்லையே. “ரிவர்ஸ் கியரில்” அல்லவா பின்னோக்கி போகிறோம்? ஆசியாவில் பின்னோக்கி போய், இன்று ஆபிரிக்க மட்டத்தில் இருக்கிறோம்.
ஆகவே, நிதி அமைச்சரின் உரையின் 19ம் அத்தியாயம் பற்றி மட்டும் வெகுவாக நான் உரையாட விரும்புகிறேன். அது “சமூக நலன்புரி” என்பதாகும். சமுக நலன்புரி கொடுப்பனவுகள் பெறுகின்ற பெயர் பட்டியலில், தோட்ட தொழிலாளர்களும், கொழும்பு நகர பாமர மக்களுக்கும் இடம்பெற வேண்டும். இதை நாம் கண்காணிப்போம்.
கடந்த எமது நல்லாட்சி அரசின் போது, நாம் அதற்கு முந்தைய ராஜபக்ச அரசின் ஊழல் பேர்வழிகளுக்கு எதிராக வழக்கு தொடர்ந்தோம். இந்த ஆட்சி வந்ததும் அந்த வழக்குகள் பற்றி ஒரு ஆணைக்குழு அமைத்தீர்கள். அந்த ஆணைக்குழு இவர்களை நிபராதிகள் என அறிக்கை தந்தது. அதை அடிப்படையாக கொண்டு சட்ட மாதிபர் அந்த வழக்குகளை வாபஸ் வாங்கினார். எனவே இந்த வழக்குகள் விசாரிக்கப்பட்டு, சாட்சிகள் அழைக்கப்பட்டு, அவர்கள் எவரும் வழக்குகளில் இருந்து விடுவிக்கப்படவில்லை. இதை தெளிவாக அறிந்துக்கொள்ளுங்கள் என தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் கொழும்பு மாவட்ட எம்பி மனோ கணேசன் இன்று இடைக்கால பாதீடு விவாதத்தில் உரையாடும் பொழுது கூறினார்.
நேற்றைய விவாதத்தில் சிங்கள மொழியில் மனோ எம்பி மேலும் கூறியதாவது,
தமது உரையில் ஜனாதிபதி 19ம் அத்தியாயத்தில் என்ன சொல்கிறார்? இதோ வாசிக்கிறேன். “சமூக நலன்புரி பதிவகம் ஒன்றை தாபிக்க தரவு சேகரிப்பு இப்போது நடைபெறுகிறது. பக்க சார்பற்ற ஊர்ஜிதப்படுத்த கூடிய அளவுக்கோல்கள் மூலம் பயனாளிகளை அடையாளம் காணும் புதிய பொறிமுறை தாபிக்கப்படுகிறது.” என்று ஜனாதிபதி- நிதி அமைச்சர் கூறுகிறார்.
இது நல்லது. நான் ஒருபோதும் இலவச கொடுப்பனவுகள் வழங்கும் கொள்கையை ஆதரிப்பவன் அல்ல. ஆனால் 1948 ம் ஆண்டிலிருந்தே அனைத்து திருடர்களும் சேர்ந்து இந்நாட்டை நாசமாக்கி விட்டார்கள். இதனால், நாட்டில் வாழும் குறை வருமானம் கொண்ட, குறை சந்தர்ப்பங்கள் கொண்ட பிரிவினர் துன்பத்தில் உழல்கின்றனர். ஆகவே இது ஒரு “சமூக அவசர காலம்”. ஆகவே இந்த காலத்தில் பின்தங்கிய பிரிவினருக்கு அவர்கள் உயிர்வாழ கொடுப்பனவுகள் அவசியம் என நான் நம்புகிறேன்.
இந்நிலையில், கொடுப்பனவுகளை, உதவிகளை பெரும் பயனாளிகளை தெரிவு செய்வது என்ற முறையில் உள்ள அரசியல் ஊழலை ஜனாதிபதி தெரிந்து கொண்டுள்ளார் என நான் நம்புகிறேன். இந்நாட்டை நாசமாக்கிய திருட்டு அரசியல்வாதிகள், இதிலும் தங்கள் ஆதரவாளர்களை போட்டு நிரப்பி உள்ளனர்.
ஆகவே இன்று சமுர்தியாக இருக்கலாம், வேறு கொடுப்பனவுகளாக இருக்கலாம், இவற்றை பெரும் பயனாளிகள் பெயர் பட்டியலில், வசதி உள்ளவர்கள் , அதாவது உதவி பெற தகைமை இல்லாதோர் கணிசமாக இருக்கிறார்கள். அதேவேளை உதவி பெற வேண்டிய குறை வருமானம் கொண்ட, குறை சந்தர்ப்பங்கள் கொண்ட பிரிவினர் பட்டியலில் இல்லாமல் இருக்கிறார்கள்.
இத்தகைய உதவி தேவைப்படும் பெருந்தொகை மக்கள், மலைநாட்டு தோட்டங்களில் கஷ்ட வாழ்க்கை வாழ்கிறார்கள். கொழும்பு மாநகரத்தில் கஷ்டப்படும் நகர ஏழைகளாக வாழ்கிறார்கள். இவர்களுக்கு கிடைக்க வேண்டிய நிவாரணங்களை, வேறு பிரிவினர் பெறுகிறார்கள்.
இந்த பெயர் பயனாளி பெயர பட்டில்களை தயாரிக்கும் போது பயன்படுத்தப்படும் புதிய பக்க சார்பற்ற ஊர்ஜித அளவுகோல்கள் எவை என்பதை அறிய நாம் விரும்புகிறோம். ஆகவே வெளிப்படை தன்மையுடன், எமது கருத்துகளையும், பங்களிப்புகளையும், ஜனாதிபதி-நிதியமைச்சர் உள்வாங்க வேண்டும்.
கொழும்பு என்பது அனைவருக்கும் பொதுவான நாட்டின் தலைநகரம். இங்கே நிரந்தரமாக வாழ்வோரும் உள்ளனர். தொழில் காரணமாக தற்காலிகமாக வாழ்வோரும் உள்ளனர். சொந்த வீடுகளில் வாழ்வோரும் உள்ளனர். வாடகை வீடுகளில் வாழ்வோரும் உள்ளனர். எல்லோருக்கும் குடும்பம், குழந்தைகள், வயிறு, பசி இருக்கின்றன. ஆகவே இந்த சமுக அவசர காலத்தில், குறைந்த வருமானம் கொண்ட அனைவரும் கொடுப்பனவு பட்டியலில் உள்வாங்கபட வேண்டும்.
குறிப்பாக தோட்ட தொழிலாளர்கள் பரவலாக இந்த கொடுப்பனவுகளை பெறும் பின்தங்கியோர் பட்டியலில் சேர்க்கப்படுவதில்லை. காகிதத்தில் எழுதப்படும் நாட்சம்பள கணக்கை முப்பது நாளால் பெருக்கி மாத வருமானத்தை கணக்கிட்டு இவர்கள் அப்புறப்படுத்தப்படுகிறார்கள். ஆனால், இந்த சம்பளம், வருமானம் இவர்களுக்கு கிடைப்பதில்லை என்பது உங்கள் விளங்க வேண்டும். எனது இந்த கேள்விகளுக்கு ஜனாதிபதி- நிதி அமைச்சர் உரிய பதில்களை வழங்க வேண்டும் என கோருகிறேன்.