சாரணர் இயக்கத்தை 2024 ஆம் ஆண்டாகும்போது ஒன்பது மாகாணங்களையும் உள்ளடக்கியதாக விஸ்தரிப்பதற்கும் அதன் அங்கத்துவத்தை 02 இலட்சமாக அதிகரிப்பதற்கும் தேவையான பூரண ஒத்துழைப்பை வழங்குவதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.
இதற்காக கல்வி அமைச்சு மற்றும் இளைஞர் விவகார அமைச்சு ஆகியவற்றின் ஆதரவைப் பெறவுள்ளதாகவும் ஜனாதிபதி மேலும் குறிப்பிட்டார்.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்களுக்கு இலங்கை தலைமை சாரணர் மற்றும் போசகர் பதவிகளை இலங்கை சாரணர் இயக்கத்தினால் உத்தியோக பூர்வமாக வழங்கும் நிகழ்வு இன்று முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது.
இதன்போது கருத்து தெரிவிக்கும்போதே ஜனாதிபதிஇவ்வாறுதெரிவித்தார்.
சாரணர் ஆணையாளர் சட்டத்தரணி ஜனப்ரித் பெர்னாண்டோ , உத்தியோகபூர்வ கழுத்துப்பட்டி மற்றும் நியமனச் சான்றிதழை ஜனாதிபதியிடம் கையளித்தார். சாரணர் இயக்கத்தின் தற்போதைய முன்னேற்றம் தொடர்பான அறிக்கையும் இச்சந்தர்ப்பத்தில்ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டது.
இங்கு உரையாற்றிய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க , 75ஆவது சுதந்திர தினக் கொண்டாட்டத்திற்கு சாரணர் இயக்கத்தின் பூரண ஆதரவைப் பெற எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்தார்.
ஜனாதிபதி அலுவலகத்தின் கீழ், காலநிலை மாற்றம் தொடர்பானஜனாதிபதியின் ஆலோசகர் ருவன் விஜேவர்தன தலைமையில் முன்னெடுக்கப்பட்டுவரும் சுற்றுச்சூழல் தொடர்பான நிகழ்ச்சிகளில் இணைந்து செயற்படுமாறும் சாரணர்களுக்கு ஜனாதிபதி அழைப்பு விடுத்தார்.
இலங்கை சாரணர் இயக்க ஹோமாகம மாவட்டக் கிளையின் 60 ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு ஜனாதிபதிக்கு நினைவுப் பதக்கம் அணிவிக்கப்பட்டதுடன்நினைவுச் சஞ்சிகையும் வழங்கி வைக்கப்பட்டது.
பிரதான சாரணர் ஆணையாளர் சட்டத்தரணி ஜனப்ரித் பெர்னாண்டோ, பிரதி பிரதான ஆணையாளர் எம்.எஸ்.எஸ். முஹீட், செயற்குழுத் தலைவர் ரன்சிறி பெரேரா மற்றும் ஏனைய அதிகாரிகள், ஹோமாகம மாவட்ட சாரணர் ஆணையாளர் கலாநிதி அனில் பெரேரா, புதிய மாவட்ட ஆணையாளர் கே.ஏ. சந்திரபத்மா, உதவி மாவட்ட ஆணையாளர் சுரங்க ஹந்தபான்கொட உள்ளிட்ட பலர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.
ஜனாதிபதி ஊடகப் பிரிவு