சீசன் டிக்கட் வைத்துள்ள மாணவர்களை புறக்கணித்துச் செல்லும் சாரதிகள் தொடர்பில் முறையிடலாம்

0
118
பாடசாலை மாணவர்கள் மற்றும் போக்குவரத்து சபை பருவச்சீட்டை வைத்துள்ள பிரஜைகளைப் புறக்கணித்துச் செல்லும் பஸ் சாரதிகள் தொடர்பில் 1958 இலக்கத்துக்கு அறிவிக்கவும் –
போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள்  அமைச்சர் பிமல் ரத்நாயக்க பாடசாலை மாணவர்கள் மற்றும் போக்குவரத்து சபை பருவச்சீட்டை வைத்துள்ள பிரஜைகளைப் புறக்கணித்துச் செல்லும் பேருந்து சாரதிகள் தொடர்பில் போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழுவில் கலந்துரையாடப்பட்டது.
எந்தவொரு பிரஜைக்கும் இது தொடர்பில் 1958 இலக்கத்துக்கு அறிவிக்க முடியும் என போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் கௌரவ அமைச்சர் பிமல் ரத்நாயக்க இதன்போது தெரிவித்தார்.
இது தொடர்பில் தான் அறிந்துள்ளதாகவும், இவ்வாறான தவறான செயற்பாடுகள் தொடர்பில் கடுமையான நடவடிக்கை எடுக்க பின்வாங்குவதில்லை எனவும், இது தொடர்பில் இ.போ.ச சாரதிகள் மற்றும் நடத்துனர்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழு அமைச்சர் பிமல் ரத்நாயக்க தலைமையில் 2025.02.28 ஆம் திகதி பாராளுமன்றத்தில் கூடிய போதே இந்த விடயங்கள் கலந்துரையாடப்பட்டன. இக்கூட்டத்தில் துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் கௌரவ பிரதி அமைச்சர் ஜனித ருவன் கொடித்துவக்கு மற்றும் அந்த அமைச்சுடன் தொடர்புபட்ட அரசாங்க நிறுவங்களின் அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.
இங்கு மேலும் கருத்துத் தெரிவித்த குழுவின் தலைவர், தொழில்நுட்பம் இருந்த போதிலும், காட்டு யானைகளுக்கு ஏற்படும் சேதங்கள் குறித்து நடவடிக்கை எடுப்பதில் புகையிரதத் திணைக்கள அதிகாரிகளின் ஆர்வம் இன்மை குறித்து வருந்துவதாகத் தெரிவித்தார். மீனகயா புகையிரத விபத்தில் ஆறு காட்டு யானைகள் கொல்லப்பட்ட சம்பவம் மிகவும் வருத்தமான சம்பவம் என்றும், அது நடந்தும், புகையிரதத் திணைக்கள அதிகாரிகள் தம் வசம் உள்ள GPS தரவுத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி இதுபோன்ற சம்பவங்களைக் குறைக்க ஆர்வம் காட்டவில்லை என்று தலைவர் அதிருப்தியை வெளிப்படுத்தினார்.
இந்த சூழ்நிலைகளைத் தடுக்க அனைத்து சாத்தியமான நடவடிக்கைகளையும் எடுக்குமாறு புகையிரதத் திணைக்கள அதிகாரிகளுக்கு அமைச்சர் பிமல் ரத்நாயக்க ஆலோசனை வழங்கினார். இந்த விவகாரம் தொடர்பாக தற்போது கலந்துரையாடல் நடைபெற்று வருவதாகவும், தேவையான நடவடிக்கைகள் உடனடியாக எடுக்கப்படும் என்றும் புகையிரதத் திணைக்கள அதிகாரிகள் தெரிவித்தனர். புகையிரதத் திணைக்களத்தில் ஒரு வினைத்திறனான முகாமைத்துவக் கட்டமைப்பை தயாரிப்பதற்காக, பாராளுமன்ற உறுப்பினர்களைக் கொண்ட ஒரு குழுவும் இதன்போது ஸ்தாபிக்கப்பட்டது.
அத்துடன், துறைமுகத்திலிருந்து விடுவிப்பு செய்யப்படாத கொள்கலன்கள் தொடர்பான சிக்கல் தொடர்பில் எடுத்துள்ள நடவடிக்கைகள் பற்றி உறுப்பினர்களுக்கு அதிகாரிகள் விளக்கமளித்தனர்.
அதற்கமைய, துறைமுகத்தில் கொள்கலன்கள் சிக்கியுள்ளதால் ஏற்பட்ட தாமதத்தை இல்லாமல் செய்ய அதிகாரிகள் அவசரமாக இணைத்துக்கொள்ளப்பட்டதாகவும், துறைமுகத்தில் நெரிசலைக் குறைக்கும் நோக்கில் துறைமுகத்திற்குள் நுழையும் வாகனங்களை நிறுத்துவதற்காக புளூமெண்டலில் இரண்டரை ஏக்கர் நிலம் சுங்கத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் கௌரவ பிரதி அமைச்சர் ஜனித ருவன் கொடித்துவக்கு தெரிவித்தார். அத்துடன், Port Community System டிஜிட்டல் தொழில்நுட்ப வேலைத்திட்டத்தை நிலைபேறான தீர்வாகக் கொண்டு நீண்டகாலத் திட்டமாக ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பிரதி அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
அத்துடன், 2023 ஆம் ஆண்டிற்கான இலங்கை துறைமுக அதிகாரசபையின் வருடாந்த அறிக்கை மற்றும் 2023 ஆம் ஆண்டிற்கான ஜய கண்டெய்னர் டெர்மினல்ஸ் லிமிடெட்டின் வருடாந்த அறிக்கை என்பன அமைச்சுசார் ஆலோசனைக் குழுவில் பரிசீலிக்கப்பட்டு அந்த அறிக்கைகள் அங்கீகரிக்கப்பட்டன.
மேலும், போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் துறையில் காணப்படும் சிக்கல்களுக்கு சட்டரீதியான மற்றும் நிர்வாகரீதியான தீர்வுகளைப் பெறுவதற்கு போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழுவின் கீழ் நியமிக்கப்பட்டுள்ள மூன்று உப குழுக்களின் தற்போதைய நிலைமை தொடர்பில் அந்தக் குழுக்களின் தலைவர்களினால் முன்னேற்ற மீளாய்வும் சமர்ப்பிக்கப்பட்டன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here