நுவரெலியா பிரதேச சபைக்கு உட்பட்ட சீத்தாஎளிய பகுதியில் அமைந்துள்ள வரலாற்றுக்குறிய சீதையம்மன் ஆலய பிரதேசத்தை புனித பூமி பிரதேசமாக பிரகடன படுத்த நுவரெலியா பிரதேச சபையில் தவிசாளர் வேலு யோகராஜியினால் முன்வைக்கப்பட்ட பிரேரணை ஏகமானதாக ஏற்றுக்கொள்ளப்பட்டது.
நுவரெலியா பிரதேச சபையின் வருட கடைசி மாதத்திற்கான மாதாந்த அமர்வு சபை தவிசாளர் வேலு யோகராஜ் தலைமையில் (08) நானுஓயாவில் உள்ள சபை தலைமை காரியாலய கூட்ட மண்டபத்தில் இடம்பெற்றது.
இதன்போது சபையில் தவிசாளரின் விசேட பிரேரணையில் இலங்கையில் வரலாற்றுக்குறிய சீத்தா எளிய பிரதேசத்தில் அமைந்துள்ள சீதையம்மன் ஆலய பிரதேசத்தை புனித பூமி பிரதேசமாக பிரகடனம் படுத்த சபை உறுப்பினர்களின் அனுமதியை கோரி பிரேரணையை முன்வைத்தார்.
இந்த நிலையில் எவ்வித ஆட்சேபனைகளும் தெரிவிக்காது இம்மாத சபை அமர்வுக்கு சமூகமளித்திருந்த அனைத்து உறுப்பினர்களும் தவிசாளரின் பிரேரணைக்கு ஆதரவு தெரிவித்தனர்.
இதை தொடர்ந்து வரலாற்றுக்குறிய சீத்தாஎளிய சீதையம்மன் ஆலய பிரதேசத்தை புனித பூமி பிரதேசமாக சட்டரீதியாக பிரகடனப்படுத்த வர்த்தமானி வெளியிட நடவடிக்கை எடுக்கப்படும் என தவிசாளர் வேலு யோகராஜ் சபையின் கவனத்திற்கு கொண்டு வந்தார்.