கடவுச்சீட்டுக்களை புதிதாகப் பெற்றுக்கொள்ள அவசரப்படுபவர்கள், செப்டம்பர் மாதம் வரை காத்திருக்குமாறு, குடிவரவு குடியகல்வுக் கட்டுப்பாட்டாளர் நாயகம் ஹர்ஷ இலுக்பிட்டிய அறிவுறுத்தியுள்ளார்.
எதிர்வரும் செப்டம்பர் மாதம் ஐந்து மில்லியன் புதிய கடவுச்சீட்டுக்கள் பெறப்படும் என அவர் தெரிவித்துள்ளார். தற்போதைய கடவுச்சீட்டுக்களுக்கான பற்றாக்குறையைச் சமாளிக்க, ஒரு நாளைக்கு 1000 கடவுச்சீட்டுக்கள் மாத்திரமே விநியோகிக்கப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
பாதுகாப்பு அம்சங்களுடன் கூடிய புதிய தோற்றம் கொண்ட கடவுச்சீட்டுக்கள், செப்டம்பர் மாதம் வரவிருப்பதால், கடவுச்சீட்டுக்களைப் பெற்றுக்கொள்ள அவசரப்படுபவர்கள், செப்டம்பர் மாதம் வரை காத்திருக்குமாறும் அவர் மக்களை அறிவுறுத்தியுள்ளார்.
பழைய கடவுச்சீட்டுக்களைப் படிப்படியாக நீக்கி வரும் நிலையில், மிகவும் பாதுகாப்பான பயண ஆவணத்தை அறிமுகப்படுத்தி வருகின்றமையினால் கடவுச்சீட்டுக்களுக்கு தட்டுப்பாடு நிலவுவதாகவும் அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.
( ஐ. ஏ. காதிர் கான் )