சேமலாப நிதியை மலையக மக்கள் முதலீடாக்க வேண்டும் – அம்மா பெயரில் பதிப்பகம் அதன் அடையாளமே என்கிறார் திலகர்.

0
140
மலையகப் பெருந்தோட்ட மக்களின் பொருளாதார நிலையில் அவர்களுக்கு வாய்க்கும் ஒரே சேமிப்பு அவர்களின் ஊழியர் சேமலாப நிதி மாத்திரமே. அதனைக் கொண்டே அவர்களது வீட்டை புனரமைப்பது, வண்ணத் தொலைக்காட்சி வாங்குவது, இப்போதெல்லாம் ஒரு முச்சக்கரவண்டி வாங்குவது என அவர்கள் தமது ஆசைகளை நிறைவேற்றுகிறார்கள்.
அதில் தவறு இல்லை. ஆனால் அந்த நிதியை சரியாக முதலீடு செய்வதன் மூலமே தொழிலாளர் குடும்பம் ஒன்று அதன் அடுத்தத் தலைமுறையை நிலைமாற்றம் ( Transformation)  செய்ய முடியும்.  எங்கள் அம்மாவின் ஊழியர் சேமலாப நிதியை ஒரு அச்சகத்தின், பதிப்பகத்தின் முதலீடாக மாற்றினேன்.
அதுவே  எங்களது குடும்பத்தின் அச்சாணியாக இப்போது  இயங்குகிறது. தோட்டத் தொழிலாளியான எங்கள் அம்மா இறக்கும் போது ஓரு பதிப்பகத்தின் / அச்சகத்தின் உரிமையாளராகவே மறைந்தார் . இப்போது எங்கள் குடும்பத்தில் யாரும் தோட்டத் தொழிலாளர்கள் இல்லை.
எனவே    சமூக நிலை மாற்றத்திற்கு ஊழிய சேமலாப நிதியை மலையகப் பெருந்தோட்ட  மக்கள் காத்திரமான  முதலீடாக மாற்ற வேண்டும் எனும் செய்தியையே ‘ அம்மா பாக்கியம்’  நூல் வெளியீடு ஊடாக உணர்த்த விரும்புகிறேன் என பாக்யா பதிப்பக நிறுவனர் நுவரெலியா மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் மலையக அரசியல் அரங்கத்தின் தலைமை ஒருங்கிணைப்பாளருமான மயில்வாகனம் திலகராஜா தெரிவித்துள்ளார்.
பாக்யா பதிப்பக உரிமையாளர் பாக்கியம் அவர்களின் மறைவை அடுத்து அன்னாரது 31 ஆம் நாள் நினைவேந்தல் நிகழ்வும் நன்றி நவிலலும் வட்டகொட தர்மலிங்கபுரம் பாக்யா இல்லத்தில் இடம் பெற்றது. இதன்போது பாக்யா பதிப்பகத்தால் ‘அம்மா பதிப்பகம்’ எனும் நினைவு மலர் வெளியீடும் இடம்பெற்றது. அதன் வெளியீட்டு உரையை நிகழ்த்தும்போதே மேற்படி செய்தியை மலையகப் பெருந்தோட்ட சமூகத்துக்கு வழங்கியுள்ளார்.
மேற்படி நிகழ்வில் பழனிவேல் மயில்வாகனம் முனிலை வகிக்க சாகித்ய ரத்ன மு.சிவலிங்கம், ஆவணக்காப்பாளர் வட்டகொட சுப்பையா இராஜசேகரன் , வி.டி தர்மலிங்கம் அவர்களின் சகோதரர் மாணிக்கவாசகம், சமூக நீதிக் கட்சியின் தலைவர் நஜா முஹம்மட், ஊடகவியலாளர் பெத்தும்  பிரேமரத்ன உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு உரையாற்றினர்.
நினைவுமலர் குறித்துக் கருத்துத் தெரிவித்த சாகித்ய ரத்ன மு.சிவலிங்கம்: ” இலக்கியம் குறித்த  பல நூல்களை வாசித்துள்ள நான் அரசியல் இலக்கியம், நாட்டு இலக்கியம், சமூக இலக்கியம் குறித்து படித்துள்ளேன்.
ஆனால் முதன்முறையாக ‘குடும்ப இலக்கியம்’  எனும் வகையாக இந்த ‘அம்மா’ பாக்கியம்’ நூலைப் பார்க்கிறேன். திலகரின் குடும்பத்தின் பெரியோர்,சிறியோர் மாத்திரமல்ல குடும்ப நண்பர்களும் கூட எழுதி இருக்கும் குறிப்புக்கள் மிகமிக இலக்கிய தரம் வாய்ந்ததாக அமைந்துள்ளது. திலகரின் மூத்த மகன் கவின் “அப்பாயி உன் கத்தலிலதான் எனக்கு விடிஞ்சதே தெரியும்”  என தனது காலை விடியலை விபரிப்பது எத்தனை  இலக்கியத் தரம் வாய்ந்த எழுத்து!,  இளைய மகன் நவினின்  ஆங்கில எழுத்தும் பேச்சும் எத்தனைத் தரமானது!  பாக்கியம் அம்மாவின் பேத்தி  தனுப்பிரியா எழுதி இருக்கும்  ‘பாட்டி என்றாலும் நீயும் தாய்தான்’ எனும் கட்டுரையில், அம்மா பத்து மாதம் சுமந்து பெற்றுவிட்ட பிறகு என்னை 3 வயது முதல் முப்பது வயதுவரை சுமந்த அம்மாயியான நீயும் தாய்தான் என கூறும் விஞ்ஞானபூர்வ இலக்கிய வெளிப்பாடு எத்தனை உச்சமானது !
அதேபோல திலகரின் நண்பர் அசுரா பிரான்ஸில் இருந்து எழுதி இருக்கும் குறிப்பில்   “மலைத்தேசத்தில் வீசிய துயரம் புயல்கள் அனைத்துத் திசைகளாலும் சூழ்ந்து  தாக்கிய  போதும் பாக்கியா தனது பாசச் சிறகினால் போர்த்துப் பாதுகாத்து எங்களை ஆளாக்கினாள்” எனும் படிமம் ” என்பதே திலகரின் பாக்யா தொடர்பான நீண்ட கதையின் படிமச்சித்திரம்’ என எழுதுவது எத்தனை இலக்கிய உச்சம் ! இதுபோல ஒரு குடும்ப இலக்கியமாக இந்தத் தொகுப்பு உச்சம் பெறுகிறது என தெரிவித்தார்.
 வட்டகொட சுப்பையா ராஜசேகரன் திலகர் குடும்பத்துடனான தனது நெருக்கமான உறவையும் தனது சகோதரி முறையான தாயார் பாக்கியம் குறித்த நினைவுகளையும் பகிர்ந்து கொண்டார். அரசியல் செயற்பாட்டாளர் நஜா முஹம்மட், ஊடகவியலாளர் பத்தும் பிரேமரத்ன, ஆங்கில ஆசிரியையான கயனி  பெத்தும்  ஆகியோரும் உரையாற்றினர்.
வி.டி.தர்மலிங்கபுரம் என ஊருக்கு பேர் சூட்டும் நிகழ்.வு இடம்பெற்று நினைவுத்தூபி யும்  ஊர் மக்களுக்கு பொறுப்பளிக்கப்பட்டது. வி.டி.தர்மலிங்கம் அவர்களின் நண்பர். எஸ். மைக்கல் அவரது இளமைக்காலநினைவுகளைப் பகிர்ந்து கொண்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here