சர்வதேச ரீதியில் அதிகளவு ஆதரவை பெற வேண்டிய தருணத்தில் உள்ள நமது நாடு இன்று அதிகாலை காலி முகத்திடலில் இடம்பெற்ற சம்பவத்தை தொடர்ந்து மேலும் அனாதரவான நிலைக்கு தள்ளப்படக்கூடிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது என நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.உதயகுமார் தெரிவித்தார்
நாட்டு மக்களின் நேரடி வாக்குகளால் புதிய ஜனாதிபதி தேர்வு செய்யப்படாவிட்டாலும் கூட பாராளுமன்றத்தின் ஊடாக நியமிக்கப்பட்ட புதிய ஜனாதிபதிக்கு சர்வதேச அளவில் வாழ்த்துக்களும் ஆதரவுகளும் வந்ததுடன் உள்நாட்டிலும் பல்வேறு கட்சிகள் அவருக்கு ஒத்துழைப்பு வழங்க விருப்பம் தெரிவித்தனர்.
ஆனாலும் வெண்ணெய் திரண்டு வரும்போது பானையை போட்டு உடைத்தது போல ஜனநாயக ரீதியாக முன்னெடுக்கப்பட்டு வந்த போராட்டம் மீது பாதுகாப்பு படைகளை ஏவி தாக்குதல் நடத்தப்பட்டு ஜனநாயக மீறல் இடம்பெற்றுள்ளது.
அத்துடன் நாட்டு மக்களுக்கு உடனுக்குடன் உண்மை தகவல்களை வழங்கும் ஊடகவியலாளர்கள் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டு கருத்து வெளியிடும் சுதந்திரத்திற்கு இடையூறு ஏற்படுத்தப்பட்டுள்ளது.
இது நாட்டின் எதிர்கால முன்னேற்றத்திற்கு பெரும் தடையாக இருப்பதுடன் மனித உரிமைகள், ஜனநாயக கோட்பாடுகளுக்கு எதிரான செயல்பாடாகவும் காணப்படுகிறது.
ஆட்சி அதிகாரம் கைக்கு வந்த பின்னர் எது வேண்டுமானாலும் செய்யலாம் என நினைக்கும் ஆட்சியாளர்கள் அந்த ஆட்சி அதிகாரம் தமக்கு வருவதற்கு காரணமாக இருந்தவர்களை பற்றி சற்று சிந்தித்து பார்க்க வேண்டும் என்பது எனது நிலைப்பாடாக உள்ளது எனவும் தெரிவித்தார்.