ஜனாதிபதியின் செயலாளராக சமன் ஏக்கநாயக்க நியமிக்கப்பட்டுள்ளார்.
இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் 8ஆவது நிறைவேற்றதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக ரணில் விக்ரமசிங்க இன்று (21) முற்பகல் பதவிப் பிரமாணம் செய்துகொண்டதைத் தொடர்ந்து இந்நியமனத்தை வழங்கியுள்ளார்.
இதற்கு முன்னர் ஜனாதிபதி செயலாளராக காமினி செனரத் கடமையாற்றியிருந்தார்.
ரணில் விக்ரமசிங்க பிரதமராக பதவி வகிக்கும்போது, சமன் ஏக்கநாயக்க, பிரதமரின் செயலாளராக பதவி வகித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
சமன் ஏக்கநாயக்க, இலங்கை நிர்வாக சேவையில் விசேட தர ஓய்வுபெற்ற அதிகாரி ஆவார். 2015 – 2019 காலப்பகுதியில் மூன்று தடவைகள் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் செயலாளராக கடமையாற்றிய அவர், நான்காவது தடவையாக கடந்த மே மாதம் மீண்டும் அப்பதவிக்கு நியமிக்கப்பட்டிருந்தார்.
ஈ.எம்.எஸ்.பி. ஏக்கநாயக்க, பேராதனைப் பல்கலைக்கழகத்தில் தனது முதல் பட்டத்தையும், ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தில் பொது நிர்வாகத்தில் முதுகலைப் பட்டத்தையும் பெற்றவராவார். இவர் தனது 30 வருடங்களுக்கும் அதிகமான நிர்வாக சேவையில், இளைஞர் விவகாரம், விளையாட்டு, சமுர்த்தி, வீடமைப்பு, கைத்தொழில், வெளிவிவகார மற்றும் நிதி ஆகிய அமைச்சுக்களிலும், மலேசியா மற்றும் இலண்டனில் உள்ள இலங்கை உயர் ஸ்தானிகராலயங்களிலும் சேவையாற்றியுள்ளார்.