இரண்டாம் எலிசபெத் மகாராணியின் இறுதிக் ஊர்வலத்தில் இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தி பங்கேற்கச் சென்ற ஜனாதிபதி தலைமையிலான குழுவினர் குறித்து பொய்யான தகவல்களை பரப்பி சில பாராளுமன்ற உறுப்பினர்களும் சமூக ஊடகங்களும் மக்களை தவறாக வழிநடத்த முயற்சிப்பதாக அவதானிக்கப்படுகிறது.
உத்தியோகபூர்வ அழைப்பின் பிரகாரம் இறுதிக் கிரியையில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுடன் ஜனாதிபதியின் பிரத்தியேக செயலாளர் செண்ட்ரா பெரேரா மற்றும் ஜனாதிபதியின் சர்வதேச உறவுகளுக்கான பணிப்பாளர் தினுக் கொலம்பகே ஆகியோர் உத்தியோகபூர்வமாக உள்வாங்கப்பட்டிருந்தனர். மேலும், ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ வைத்தியரும் உடன் சென்றிருந்தார்.
முதற்பெண்மணி சிரேஷ்ட பேராசிரியர் மைத்திரி விக்ரமசிங்க தனது தனிப்பட்ட செலவில் இந்தப் பயணத்தில் இணைந்து கொண்டதுடன், காலநிலை மாற்றம் தொடர்பான ஜனாதிபதியின் ஆலோசகரும் ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவருமான ருவன் விஜேவர்தனவும் ஐக்கிய இராச்சியத்திற்கு தனிப்பட்ட விஜயமொன்றை மேற்கொண்டிருந்த நிலையில், நேற்று (19) நடைபெற்ற புலம்பெயர்ந்து வாழும் இலங்கையர் சந்திப்பில் கலந்துகொண்டார்.
இரண்டாம் எலிசபெத் மகாராணியின் இறுதி ஊர்வலத்தில் சர்வதேச நாடுகளை சேர்ந்த தலைவர்கள் பலரும் கலந்து கொண்டனர்.