ஜனாதிபதி ஊடகப்பிரிவு பிரதி ஊடகப் பணிப்பாளராக சிரேஸ்ட ஊடகவியலாளர் கிருஸ்ணசாமி ஹரேந்திரன் நியமிக்கப்பட்டுள்ளார்.
மிக இள வயதிலேயே ஊடகத்துறையில் இணைந்து கொண்ட ஹரேந்திரன் இரண்டு தசாப்தங்களுக்கு மேல் பல்வேறு ஊடக தளங்களில் திறமைகளை வெளிப்படுத்தி வருகின்றார்.
சக்தி தொலைக்காட்சியின் செய்தி பிரிவில் ஹரேந்திரன் தனது ஊடகப் பயணத்தை ஆரம்பித்தார்.
செய்தியாளர், சூரியனின் பேப்பர் பொடியன், செய்தி ஆசிரியர், தொகுப்பாளர், பத்திரிகையாளர், தொலைக்காட்சி செய்திப் பிரிவு பணிப்பாளர், ஊடக பயிற்றுவிப்பாளர், சுயாதீன ஊடகவியலாளர், சர்வதேச ஊடக செய்தியாளர் (BBC, GermenTv,Pw) என பல்வேறு துறைகளில் தனது திறமைகளை மிளிரச் செய்துள்ளார்.
கொழும்பு பம்பலப்பிட்டி இந்துக் கல்லூரியின் பழைய மாணவரான ஹரேந்திரன், சர்வதேச புலனாய்வு செய்தி அறிக்கை தொடர்பிலான விசேட கற்கை நெறிகளை நோர்வேயியில் பூர்த்தி செய்துள்ளார் என்பதுடன், அமெரிக்காவின் ஐரெக்ஸ் ஊடகப் பயிற்சி நெறியையும் பூர்த்தி செய்துள்ளார்.
இலங்கையில் டிஜிட்டல் ஊடக தொழில்நுட்பங்களை கற்றுத்தேர்ந்த சர்வதேச ரீதியிலான அனுபவங்களை உடைய விரல் விட்டு எண்ணக்கூடிய தமிழ் இளம் ஊடகவியலாளர்களில் ஹரேந்திரனும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.
சமூக சேவையாளராகவும், யோகா ஆசிரியராக, ஆளுமை விருத்தி பயிற்றுவிப்பாளராக பணியாற்றி வருகிறார்.
ஜனாதிபதியின் ஊடக பணிப்பாளராக ஷானுக கருணாரட்ன ஏற்கனவே நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்த நிலையில் ஜனாதிபதி ஊடகப் பிரிவின் தமிழ்ப் பிரிவு பொறுப்பாளராகவும், பிரதி ஊடகப் பணிப்பாளராகவும் ஹரேந்தின் நியமிக்கப்பட்டுள்ளார்.