ஜனாதிபதி மாளிகை மற்றும் அலரி மாளிகையில் உள்ள சொத்துக்களுக்கு சேதம் விளைவிப்பதாக வெளியாகும் செய்திகள் தொடர்பில் மிகுந்த அவதானம் செலுத்துவதாகவும், இந்த கட்டிடங்களின் பொறுப்பு உரியவர்களிடம் ஒப்படைக்கப்படுவதை உறுதி செய்யுமாறு அங்குள்ள மக்களிடம் இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் கேட்டுக்கொண்டுள்ளது.
சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது
ஜனாதிபதி மாளிகை, அலரி மாளிகை, ஜனாதிபதி செயலகம் ஆகிய இடங்களை ஆர்ப்பாட்டக்காரர்கள் ஆக்கிரமித்துள்ள நிலையில், அங்கு பெருமளவான மக்கள் நாளாந்தம் வந்து செல்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொல்பொருள் முக்கியத்துவம் வாய்ந்த பல ஆவணங்கள் மற்றும் பிற பொதுச் சொத்துகளின் பாதுகாப்பை உறுதி செய்யவும், இந்தக் கட்டிடங்களின் முக்கியத்துவத்திற்கு மதிப்பளிக்குமாறும் சட்டத்தரணிகள் சங்கம் கேட்டுக்கொள்கிறது.
சட்டத்தரணிகள் சங்கம் சுமூகமான மற்றும் அமைதியான அதிகார மாற்றத்திற்கான தனது கோரிக்கையை மீண்டும் வலியுறுத்துவதாகவும், கட்சித் தலைவர்கள் பின்பற்றும் விரைவான தீர்வு நடவடிக்கைகளை வரவேற்பதாகவும் அந்த சங்கம் குறிப்பிட்டுள்ளது.