ஜனாதிபதி ரணில் – கலாநிதி எஸ்.ஜெயசங்கர் சந்திப்பு

0
138

புதுடில்லி சென்றுள்ள ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கும் இந்திய சிரேஷ்ட அமைச்சர் கலாநிதி எஸ்.ஜெயசங்கருக்கும் இடையிலான சந்திப்பு  (10) நடைபெற்றது.

இந்திய முதலீட்டில் இலங்கையில் ஆரம்பிக்கப்பட்டு இடைநடுவில் தடைப்பட்டுள்ள அபிவிருத்தித் திட்டங்களை துரிதமாக மீள ஆரம்பிப்பது குறித்து இங்கு ஆராயப்பட்டதோடு இந்த செயற்பாடுகளை ஆராய்வதற்காக விரைவில் இலங்கைக்கு விஜயம் செய்யவிருப்பதாக ஜெயசங்கர் தெரிவித்தார்.

அண்டை நாடுகளுக்கு முதலிடம் கொடுக்கும் இந்தியாவின் கொள்கை குறித்தும் இந்த சந்திப்பில் கருத்துப் பரிமாறப்பட்டன.

திருகோணமலையை மையமாக கொண்டு இந்திய அரசாங்கத்தினால் ஆரம்பிக்கப்பட இருக்கும் கைத்தொழில் வலயம் தொடர்பாகவும் இதன்போது ஆராயப்பட்டதோடு பல இந்திய முதலீட்டாளர்கள் அங்கு தமது முதலீட்டுகளை மேற்கொள்ளவுள்ளதாகவும் இந்த தொழில் வலயத்தில் இந்தியாவைத் தவிர ஏனைய நாடுகளின் முதலீட்டாளர்களையும் இங்கு முதலீடு செய்வதற்கு இணைத்துக் கொள்ள எதிர்பார்ப்பதாகவும் ஜெய்சங்கர் குறிப்பிட்டார்.

இந்த சந்திப்பில் கருத்துத் தெரிவித்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, புதிய பொருளாதார மாற்றச் சட்டத்தின் மூலம் விவசாயம், சுகாதார கல்வி மற்றும் பொருளாதார முகாமைத்துவம் ஆகிய துறைகளின் அதிகாரங்கள் மாகாண சபைகளுக்கு வழங்கப்படவுள்ளதாக குறிப்பிட்டார்.

அத்தோடு உண்மை மற்றும் நல்லிணக்கச் சட்ட மூலம் எதிர்வரும் ஜூலை மாதத்திற்குள் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் எனவும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.

இலங்கையில் செயற்படுத்தப்பட்டுள்ள விவசாய நவீனமயமாக்கல் வேலைத்திட்டம் தொடர்பிலும் இங்கு கலந்துரையாடப்பட்டதுடன் இரு நாட்டு மீனவர்களுக்கு இடையில் நிலவும் பிரச்சினைகளைத் தீர்ப்பது தொடர்பில் விரைவான தீர்மானத்தை எட்டுவது தொடர்பிலும் கவனம் செலுத்தப்பட்டது.

தோட்ட லயன் அறைகள், தோட்ட கிராமங்களாக வர்த்தமானி மூலம் அறிவிக்கப்படும் எனவும், அது தொடர்பான வர்த்தமானி வெளியிடப்பட்டதன் பின்னர் உள்நாட்டலுவல்கள் அமைச்சின் தலையீட்டின் மூலம் அந்தந்த கிராமங்களை அபிவிருத்தி செய்ய முடியும் எனவும் ரணில் விக்ரமசிங்க குறிப்பிட்டார்.

எதிர்வரும் காலங்களில் இலங்கைக்கு விஜயம் செய்யுமாறு இந்தியப் பிரதமருக்கு அழைப்பு விடுத்தது தொடர்பாகவும் ஜனாதிபதி இங்கு நினைவு கூர்ந்தார்.

ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க, வெளிவிவகார அமைச்சின் செயலாளர் அருணி விஜேவர்தன, இந்தியாவுக்கான இலங்கை உயர்ஸ்தானிகர் ஷேனுகா செனவிரத்ன, ஜனாதிபதியின் பிரத்தியேக செயலாளர் சாண்ட்ரா பெரேரா மற்றும் இந்திய அரசாங்கத்தின் பிரதிநிதிகள் ஆகியோர் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here