வடக்கு,கிழக்கு மற்றும் மலையக மக்களின் பிரதான பிரச்சினைகளை முன்வைத்து ஐக்கிய மக்கள் சக்தியின் உத்தியோகபூர்வ அழைப்பின் பேரில் ஈரோஸ் ஜனநாயக முன்னணிக்கும் ஐக்கிய மக்கள் சக்திக்கும் இடையிலான சந்திப்பொன்று நேற்று புதன்கிழமை (21) கொழும்பில் இடம்பெற்றது.
ஐக்கிய மக்கள் சக்தியின் குருநாகல் மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் அசோக்க அபேசிங்க மற்றும் கட்சியின் முக்கியஸ்தர் சிறிலால் ரோகன ஆகியோர் இணைந்து இச் சந்திப்பை ஏற்பாடு செய்திருந்தனர்.
இக்கலந்துரையாடலில் ஈரோஸ் ஜனநாயக முன்னணி சார்பில் பொதுச் செயலாளர் இரா.ஜீவன் இராஜேந்திரன் தலைமையில் கிழக்கு, மலையகப் பிரதிகள் கலந்து கொண்டனர். இதன்போது வடக்கு, கிழக்கு மற்றும் மலையக மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளை முன்வைத்ததோடு, தமிழ்பேசும் மக்களை நாட்டை மாறி மாறி ஆட்சிசெய்த அரசாங்கங்கள் மட்டுமல்ல, சர்வதேசமும் தொடர்ந்தும் ஏமாற்றி வருகின்ற நிலையில் இந்த ஜனாதிபதி தேர்தல் நடைபெறுகிறது.
இந்நிலையில் நாங்கள் பிரதிநிதித்துவப்படுத்தும் ஈழத்தமிழர்கள் ஒருவகையான பிரச்சினைகளுக்கும், மலையகத் தமிழர்கள் வேறு வகையான பிரச்சினைகளுக்கும் முகம்கொடுத்து வருகின்றனர். ஆகவே ஈழத்தமிழர்கள் தங்களுடைய பிரச்சினைகளுக்கு தீர்வாக சுயநிர்ணய உரிமை சமஷ்டி முறையிலான கட்டமைப்பை பிரதான கோரிக்கையாக முன்வைத்துள்ளார்கள்.
அத்தோடு மலையகத் தமிழர்கள் சார்பாக நிலத்தொடர்புள்ள மாகாணசபை நிலத்தொடர்பற்ற முறையிலும் செயற்படக்கூடியவாறான அதிகாரப் பகிர்வுக் கட்டமைப்பொன்றை உருவாக்குவது மற்றும் ஒட்டுமொத்த மலையகத் தமிழர்களையும் நிலவுடைமையாளர்களாக உறுதிப்படுத்துவது போன்ற கோரிக்கைகளை முன்வைத்துள்ளார்கள்.
ஆகவே ஈரோஸ் ஜனநாயக முன்னணி மக்களின் கருத்துகளுக்கு மதிப்பளிக்கின்ற கட்சி என்ற அடிப்படையில் தமிழ்பேசும் மக்களின் உணர்வுகளைப் புரிந்து கொண்டு அதையே எமது பிரதான கோரிக்கைகளாகவும் முன்வைக்கின்றோம்.
இதனை நடைமுறைப்படுத்துவது ஒருசில நாட்களிலோ ஒருசில வாரங்களிலோ சாத்தியமான விடயமல்ல என்பதை எம்மால் புரிந்து கொள்ள முடிகிறது. ஆனால் இந்த விடயங்களைப் பேசுவதற்கான “களம்” ஒன்று உருவாக்கப்பட வேண்டும். இது ஜனாதிபதித் தேர்தல் முடிந்த பின் விரைவாக காலம் நிர்ணயிக்கப்பட்டு இருதரப்பும் அமர்ந்து பேசி இறுதி முடிவொன்றுக்கு வருவதற்கான பேச்சுவார்த்தையாக அமைய வேண்டும்.
ஆகவே உங்கள் தலைமையிலான ஆட்சி அமையும்போது நல்லெண்ண அடிப்படையில் உடனடியாக மாகாண சபைத் தேர்தலை நடாத்தி அரசியலமைப்பில் குறித்தொதுக்கப்பட்ட அதிகாரங்களை முழுமையாக மாகாண சபைகள் பயன்படுத்துவதை உறுதி செய்ய வேண்டுமென்ற அடிப்படையில் பேச்சுவார்த்தை நடைபெறுவதோடு, வடக்கு, கிழக்கு மற்றும் மலையக மக்களின் எதிர்ப்பார்ப்புகளை உள்ளடக்கிய ஆவணமொன்றும் அவர்களிடம் கையளிக்கப்பட்டது.
இதன்போது ஐக்கிய மக்கள் சக்தி வேட்பாளருக்கு ஆதரவு தெரிவிக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டது. இந்நிலையில் எமது கோரிக்கைகள் தொடர்பாக இருதரப்பு பேச்சுவார்த்தையில் ஏற்படும் திருப்தியின் அடிப்படையில் எமது முடிவை அறிவிப்பதாக நாம் தெரிவித்துள்ளோம் என ஈரோஸ் ஜனநாயக முன்னணியின் பொதுச் செயலாளர் இரா.ஜீவன் இராஜேந்திரன் தெரிவித்தார்.