ஜீவனுக்கு ஆதரவாக தோட்டவாரியாக பணிபகிஷ்கரிப்பு

0
117

இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் பொதுச்செயலாளரும் அமைச்சரவை அமைச்சருமான ஜீவன் தொண்டமான் உள்ளிட்ட சகாக்களை கைது செய்து நுவரெலியா நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யுமாறு நீதிமன்றம் கடந்த (22) திங்கட் கிழமை உத்தரவு பிறப்பித்திருந்தது.

இதை தொடர்ந்து அமைச்சர் ஜீவன் தொண்டமானுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையிலும்,பெருந்தோட்ட தொழிலாளர்களின் சம்பள உயர்வு விடயத்தில் தடைக்கல்லாக செயற்பட்டுவரும் களனிவெளி உள்ளிட்ட சில கம்பனிகளுக்கு எதிராகவும் தோட்டத் தொழிலாளர்கள் பணிபுறக்கணிப்பு நடவடிக்கையில் ஈடுப்பட்டுள்ளனர்.

அந்த வகையில் செவ்வாய் கிழமை (23) அன்று நுவரெலியா,நானு ஓயா,மற்றும் டிக்கோயா ஆகிய பிரதேசங்களில் இயங்கும் களனிவெளி பெருந்தோட்ட முகாமைத்துவ நிறுவனத்தின் கீழ் இயங்கும் அனைத்து தேயிலை தோட்ட தொழிலாளர்களும் கட்சி பேதமின்றி பணிபுறக்கணிப்பில் ஈடுப்பட்டனர். இப் பணிபுறக்கணிப்பு இன்று (24) இரண்டாவது நாளாகவும் தொடர்கிறது.

இந்த நிலையில் ஜீவன் தொண்டமானுக்கு ஆதரவு தெரிவித்து தலவாக்கலை மற்றும் ஹொரண பெருந்தோட்ட முகாமைத்துவ நிறுவனத்தின் கீழ் இயங்கும் தோட்ட தொழிலாளர்களும் இன்று(24) பணிபுறக்கணிப்பு நடவடிக்கையில் குதித்துள்ளனர்.

அந்த வகையில், தலவாக்கலை பெருந்தோட்ட முகாமைத்துவ நிறுவனத்தின் கீழ் இயங்கும் ஹொலிரூட், வட்டகொட, லோகி, கிரேட்வெஸ்டன், பேரம்,மட்டுகலை, சமர்செட், ரதல்லை, கிளரென்டன்,கெல்சி மஹாலியா ஆகிய தோட்டத் தொழிலாளர்களும் பணிபுறக்கணிப்பில் குதித்துள்ளனர்.

அதேபோல் ஹொரண பெருந்தோட்ட முகாமைத்துவத்தின் கீழ் மஸ்கெலியா பிரதேசத்தில் இயங்கும் மாநிளு, ஸ்டோக்ஹோம், கௌரவில,
ஓல்டன், பெயார்லோன் ஆகிய தோட்டங்களிலும் தொழிலாளர்கள் பணி புறக்கணிப்பில் ஈடுப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆ.ரமேஸ்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here