ஜெட் வேகத்தில் விலை அதிகரிப்பு செய்து ஆமை வேகத்தில் குறைப்பது வேடிக்கை – சபையில் உதயகுமார் எம்.பி – வீடியோ இணைப்பு

0
271

இலங்கையின் 8வது நிறைவேற்று அதிகார ஜனாதிபதி அதாவது, மக்கள் வாக்குகளால் நேரடியாக தெரிவு செய்யப்படாத ஆனால். பாராளுமன்ற உறுப்பினர்களால் வாக்கெடுப்பின் மூலம் நியமிக்கப்பட்ட ஜனாதிபதியின் அக்கிராசன உரை மீதான விவாதத்தில் உரையாற்றுவதையிட்டு மகிழ்ச்சி அடைகிறேன்.

இந்த பாராளுமன்ற வரலாற்றில் ஜனாதிபதிகளால் நிகழ்த்தப்பட்ட அக்கிராசன உரைகளில் பொதுப்படையான மற்றும் வெளிப்படையான அக்கிராசன உரையாக கௌரவ ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க  ஆற்றிய உரை காணப்படுகிறது. இதனை பலரும் வரவேற்றுள்ளனர்.

பொதுவாக, வாக்குறுதிகளை வாரி வழங்கும் உரைகளுக்கு பதிலாக எதிர்கால திட்டங்கள் மற்றும் தூரநோக்குடைய செயற்பாடுகள் அடங்கிய உரையாக இது அமைந்துள்ளது. ஆகவே, இது வெறும் உரையாக மாத்திரம் இருக்காமல் அதற்கு செயல்வடிவம் கொடுக்க வேண்டும். எனெனில், நாட்டு மக்களின் அன்றாட தேவைகள் மற்றும் பிரச்சினைகளுக்கு தீர்வு காண வேண்டியதே, காலத்தின் அவசரத் தேவையாக உள்ளது.

பொருளாதாரம் கடுமையான வீழ்ச்சியை சந்தித்துள்ளது, பணவீக்கம் பாரியளவு அதிகரித்துள்ளது. சுமார் இரண்டு வருடங்களுக்கு முன்பிருந்த அத்தியாவசிய பொருட்களின் விலைகள் அனைத்தும் இரண்டு மடங்கல்ல மூன்று – நான்கு மடங்காக அதிகரித்து காணப்படுகிறது.

விலைகளை அதிகரிக்கும் போது ஜெட் வேகத்தில் அதிகரிப்பதும், குறைக்கும் போது ஆமை வேகத்தில் குறைப்பதும் வேடிக்கையாக உள்ளது. எரிபொருள் விலைகளை அதிகரிக்கும் போது 100, 200 ரூபா என அசாதாரணமான முறையில் அதிகரித்தனர். ஆனால், குறைக்கும் போது 10.20 என அநீதி இழைக்கின்றனர். அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலை மாற்றத்திலும், இதுவே நடந்துள்ளது.

75% மின் கட்டணம் உயர்வு என்பது நாட்டு மக்களின் பொருளாதார நிலையில் மேலும் சுமையை ஏற்படுத்தும். அதனால், அரசாங்கம் உடனடியாக மின் கட்டண உயர்வை மீள்ப்பரிசிலனை செய்ய வேண்டும்.

ஒருபக்கம் சில பொருட்களுக்கு சிறிய விலை குறைப்பு செய்து மறுபக்கம் அசாதாரணமான முறையில் மின் கட்டணத்தை அதிகரித்துள்ளமை ஏற்றுக்கொள்ள முடியாதது.

அரசாங்கம் மக்களுக்கு நன்மை செய்ய வேண்டுமென நினைத்தால், மக்களின் சுமைகளை குறைக்க வேண்டுமேன உண்மையிலே அ்க்கறை இருந்தால், உடனடியாக அத்தியாவசிய பொருட்களின் விலைகளை குறைக்க வேண்டும்

நாட்டில் காணப்படும் பொருளாதார பிரச்சினைக்கு தீர்வு காண தேசிய வேலைத் திட்டம் அவசியம். இதனை ஜனாதிபதியும் தனது உரையில்
தெரிவித்துள்ளார். நாட்டின் டொலர் பற்றாக்குறையை தீர்ப்பதற்கு டொலர் பெறும் துறைகளை மேம்ப்படுத்த தேசிய வேலைத் திட்டம் அவசியம்.

இலங்கைக்கு அந்நிய செலாவணியை ஈட்டித்தரும் ஏற்றுமதித் துறைகள் பாதுகாக்கப்பட்டு முன்னேற்றப்பட வேண்டும். அதற்கு முறையான வேலைத் திட்டம் தயாரிக்கப்பட வேண்டும் என கேட்டுக் கொள்ள விரும்புகிறேன்.

இலங்கை சுமார் 7 பில்லியன் அமெரிக்க டொலர்கள் பெறுமதி வாய்ந்த பொருட்களை வருடாந்தம் ஏற்றுமதி செய்து வந்தது. இலங்கையின் ஏற்றுமதிகள் இந்த வருடத்தின் முதல் ஐந்து மாதங்களில் 5 பில்லியன் அமெரிக்க டொலர்களை வருமானமாகப் பெற்றுள்ளது.

ஏற்றுமதி அபிவிருத்தி சபையின் தகவல்படி 2022 மே மாதத்தில் வர்த்தக பொருட்கள் ஏற்றுமதி 980.2 மில்லியன் அமெரிக்க டொலர்களாக அதாவது 9.9% அதிகரிப்பை பெற்றுள்ளது. 2022 ஆம் ஆண்டு மே மாதத்தில் தைத்த ஆடை ஏற்றுமதி 30.1% மாக அதிகரித்துள்ளது. இது மிகவும் ஆரோக்கியமான விடயமாகும்.

இதேபோன்று, தேயிலை, இறப்பர் ஏற்றுமதி, சுற்றுலாதுறை மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்புத் துறையும் முன்னேற்றப்பட வேண்டும். அப்போதே நாம் எமது சரியான இலக்கை அடைய முடியும். நாட்டில் காணப்படும் பிரச்சனைகளுக்கும் வரிசைகளுக்கும் முடிவுகட்ட முடியும்.

உலக சந்தையில், தேயிலை விலை அதிகரித்துள்ள போதும் இலங்கையில் பெருந்தோட்ட மற்றும் சிறுதோட்ட தேயிலை உற்பத்தி குறைந்துள்ளது. ஏற்றுமதி வீழ்ச்சி கண்டுள்ளது. அதனை சீர்செய்வதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கடந்த 2021ம் ஆண்டின் முதல் மூன்று மாதங்களில் 69.8 மில்லியன் கிலோ கிராமாக இருந்த தேயிலை ஏற்றுமதி இந்த வருடத்தின் முதல் காலாண்டில் 63.7 மில்லியன் கிலோகிராமாக குறைந்தது. 1999ஆம் ஆண்டு முதல் காலாண்டிற்கு பிறகு, தேயிலை ஏற்றுமதி இந்த அளவுக்குக் குறைந்திருப்பது இதுவே முதன்முறை என்பதை நாம் கருத்திற் கொள்ள வேண்டும்.

ரஷ்ய – உக்ரைன் மோதல் மற்றும் காலநிலை மாற்றம் என்பன தேயிலை ஏற்றுமதியில் தாக்கம் செலுத்தியுள்ள போதிலும் இரசாயன உரப்பிரச்சினையே அதிகளவான தாக்கத்தை செலுத்தியுள்ளது.

இத்தன ஆண்டுகளாக நமது நாட்டின் பொருளாதாரத்திற்கு முதுகெழும்பாக இருந்து நமக்கு அன்னிய செலவாணியை ஈட்டு தந்த பெருந்தோட்ட தொழிலாளர்களையும் பெருந்தோட்டத்துறையையும் பாதுகாக்க வேண்டும்.

ஏற்றுமதி பொருளாதாரத்திற்கு அப்பால், முதலீட்டு திட்டங்கள் குறித்து கவனம் செலுத்த வேண்டியது பொருளாதாரத்தை வலுப்படுத்த மிகவும் உறுதுணையாக இருக்கும்.

முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் நட்டமடைந்த நிறுவனங்களை முகாமத்துவம் செய்தல் போன்ற விடயங்களில் சர்வதேச நாணய நிதியம் இலங்கைக்கு பல ஆலோசனைகளை வழங்கி உள்ளது. இலங்கை அதன் அரசியல் நெருக்கடிகளிலிருந்து மீளும் வரையில், சர்வதேச நாணய நிதியத்தின் – பொருளாதார உதவிச்செயற்திட்டம் இலங்கைக்குக் கிட்டப்போவதில்லை.

போதுமான பொருளாதார கொள்கை நடைமுறைப்படுத்தப்படும் வரையில், இலங்கைக்கு புதிதாக நிதி வழங்க உலக வங்கிக்கு திட்டமில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதுபோலவே, அரசியல் ஸ்திரத்தன்மை தொடர்பிலும் உலக வங்கி, சர்வதேச நாணய நிதியம் போன்றவை பரிந்துரைகளை செய்துள்ளது.

இதன் அடிப்படையில், சர்வகட்சி அரசாங்கம் ஒன்று அமைக்கப்படுவதன் தேவை உணர்த்தப்பட்டுள்ளது. எனவே, அமைச்சுப் பதவிகளுக்கும் சலுகைகளுக்கும் மாத்திரம் மட்டுப்படுத்தப்பட்ட சர்வ கட்சி அரசாங்கமாக அல்லாது, ஒரு அர்த்த புஷ்டி உள்ள சர்வகட்சி அரசாங்கம் அமைக்கப்பட வேண்டும்.

சர்வகட்சி அரசாங்கம் உட்பட அனைத்து விடயங்களுக்கும் கால வரையறை நிர்ணயிக்கப்பட்டு, செயல்படுத்தக்கூடிய அரசியல் யாப்பு மாற்றங்கள், பொருளாதார மாற்றங்கள் உள்ளிட்டவற்றை நிறைவேற்ற வேண்டும். அதன் பின்னர், விரைவில் தேர்தல் நடத்தப்பட்டு, மக்களின் ஜனநாயகம் பாதுகாக்கப்பட்டு, நிலையான அரசாங்கம் உருவாக்கப்பட வேண்டும்.

எனவே, இந்த விடயங்களை கருத்திற் கொண்டு தேசிய வேலைத் திட்டம் ஒன்று தயாரிக்கப்பட்டு அதன் இலக்குகளை அடைய நாம் அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என்று கேட்டுக் கொண்டு விடைபெறுகிறேன்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here