இராஜாங்க அமைச்சர் டயானா கமகேவிற்கு நவம்பர் 17ஆம் திகதி வரை வெளிநாடு செல்வதற்கு தடை விதித்து கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சுற்றுலா இராஜாங்க அமைச்சர் டயானா கமகேவின் குடியுரிமை தொடர்பில் தாக்கல் செய்யப்பட்ட முறைப்பாடு தொடர்பான வழக்கிற்குகு அமைய, சட்டத்தரணி குணரத்ன வன்னிநாயக்க உள்ளிட்ட பல சட்டத்தரணிகளால் தாக்கல் செய்யப்பட்ட நகர்த்தல் மனு மூலம் இன்றையதினம் (11) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே நீதிமன்றம் குறித்த உத்தரவை வழங்கியுள்ளது.
இராஜாங்க அமைச்சர் டயானா கமகேவின் குடியுரிமை தொடர்பில் வழக்கு இடம்பெறும் இச்சந்தர்ப்பத்தில் அவர் நாட்டை விட்டு செல்வதற்கான ஏற்பாடுகளை செய்து வருவதாக சட்டத்தரணிகளுக்கு கிடைத்த தகவலுக்கமைய குறித்த நகர்த்தல் மனுவை தாக்கல் செய்ததாக, சட்டத்தரணி குணரத்ன வன்னிநாயக்க தெரிவித்தார்.
அதற்கமைய, குறித்த விடயத்தை பரிசீலித்த கொழும்பு பிரதான நீதவான் நந்தன அமரசிங்க, எதிர்வரும் வியாழக்கிழமை, நவம்பர் 17ஆம் திகதி டயனா கமகே குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முன்னிலையாகுமாறு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அன்றையதினம் (17) வரை அவருக்கு வெளிநாடு செல்ல தற்காலிக தடை விதித்து நீதவான் உத்தரவிட்டதாக வன்னிநாயக்க குறிப்பிட்டார்.
அத்துடன், இது தொடர்பில் குடிவரவு குடியகல்வு கட்டுப்பாட்டாளருக்கு பெக்ஸ் மூலம் அறிவிக்க நீதவான் உத்தரவிட்டதாகவும் அவர் இதன்போது குறிப்பிட்டார்.