டிசம்பர் மாத இறுதிக்குள் அதிபர் வெற்றிடங்களை நிரப்ப நடவடிக்கை – கல்வி அமைச்சர் சுசில்

0
127

டிசம்பர் மாத இறுதிக்குள் நாடு முழுவதுமுள்ள பாடசாலைகளில் நிலவும் அதிபர்களுக்கான வெற்றிடங்கள் நிரப்பப்படுமென கல்வியமைச்சர் சுசில் பிரேம ஜயந்த பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

நேர்முகப் பரீட்சையில், இடம்பெற்றுள்ள சிக்கல்கள் காரணமாக வழக்கு தொடர்ந்துள்ள தரப்பினரை கல்வி அமைச்சுக்கு அழைத்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளதாகவும் அவர்கள் தமது வழக்குகளை வாபஸ் பெற்றுக் கொள்வதாக தெரிவித்துள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

இதன் மூலம் இடைக்கால தடையுத்தரவு நீக்கப்படுமானால், அதிபர் வெற்றிடங்களை விரைவாக நிரப்ப முடியும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் நேற்று (09) நடைபெற்ற வாய்மூல விடை க்கான வினாக்கள் வேளையில் கிங்ஸ் நெல்சன் எம்பி எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கையிலேயே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.

நாடளாவிய ரீதியிலுள்ள பாடசாலைகளுக்கு 16 ஆயிரம் அதிபர்கள் தேவைப்படுகின்றனர். இந்நிலையில் தற்போது பன்னிரண்டாயிரம் அதிபர்களே சேவையில் உள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

அது தொடர்பில் மேலும் தெரிவித்த அமைச்சர்,

நேர்முகப் பரீட்சையின் போது சிக்கல்களை எதிர்நோக்கியுள்ள அதிபர்கள் நீதிமன்றத்தின் மூலம் இணக்கப்பாட்டுக்கு வந்ததும் நாலாயிரம் பேருக்கு அதிபர்கள் நியமனங்களை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.

அதே வேளை, கல்வி மறு சீரமைப்பு நடவடிக்கைகளால், அடுத்த ஜனவரி மாதம் முதல் நிர்வாக மாற்றங்களை ஏற்படுத்தவும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. சர்ச்சைக்குரிய பிரச்சினைகளாக மாறியுள்ள கல்வி வலயங்களை அதிகரிக்கும் பிரச்சினைகளுக்கும் இதன் மூலம் தீர்வு பெற்றுக் கொடுக்கப்படும் என்றும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

26,000 பட்டதாரிகள் அபிவிருத்தி அதிகாரிகளாக நியமிக்கப்பட்டுள்ள நிலையில், அவர்களில் பெருமளவானோரை ஆசிரியர் சேவைகளுக்குள் நியமிப்பதற்கான நடவடிக்கையும் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here