டி.பி.எஸ். ஜெயராஜின் நூல் கொழும்பு தமிழ்ச்சங்கத்தில் வெளியீடு

0
111

டி.பி.எஸ். ஜெயராஜ் என அறியப்படும் கனடாவில் வாழும் இலங்கையின் மூத்த பத்திரிகையாளரும் அரசியல் ஆய்வாளருமான டேவிட் பியூவெல் சபாபதி (டி.பி.எஸ். ) ஜெயராஜ் எழுதிய ‘ இலங்கையில் அரசியல் அதிகாரத்தின் வர்க்க மாற்றம் ‘ என்ற நூல் வெளியீட்டு நிகழ்வு இன்று ஞாயிற்றுக்கிழமை (9/3) மாலை 5.30 மணிக்கு கொழும்பு தமிழ்ச்சங்கத்தின் விநோதன் மண்டபத்தில் இடம்பெறவிருக்கிறது.

முன்னாள் தினக்குரல் பத்திரிகையின் பிரதம பொறுப்பாசிரியர் சிரேஸ்ட ஊடகவியலாளர் வீரகத்தி தனபாலசிங்கம் தலைமையில் நடைபெறும் இந்நிகழ்வில் மூத்த பத்திரிகையாளர் அனந்த் பாலகிட்ணர் வெளியீட்டு உரையையும் கொழும்பு பல்கலைக்கழக சட்டபீட விரிவுரையாளர் பேராசிரியர் அருளானந்தம் சர்வேஸ்வரனும் சட்டத்தரணியும் சமூக, அரசியல் செயற்பாட்டளருமான சுவஸ்திகா அருலிங்கமும் சமகால அரசியல் நிலைவரங்கள் பற்றிய உரைகளையும் நிகழ்த்துவர்.

இந்த நூல் குமரன் புத்தக இல்ல பிரசுரமாக வெளிவருகிறது.

டி.பி.எஸ். ஜெயராஜ் பற்றி…

வீரகேசரி தமிழ்ப் பத்திரிகையின் அலுவலக நிருபராக இணைந்துகொண்டதன் மூலம் 1977 ஆம் ஆண்டில் பத்திரிகைத்துறையில் பிரவேசித்தார். கொழும்பில் பணியாற்றிய அதேவேளை அவர் வீரகேசரியின் யாழ்ப்பாண நிருபராக ஐந்து மாதங்களும் மட்டக்களப்பு நிருபராக மூன்று மாதங்களும் செயற்பட்டார்.

‘ தி ஐலண்ட் ‘ ஆங்கில தினசரியில் அலுவலக நிருபராக 1981 ஆம் ஆண்டில் இணைந்து ஆங்கிலப் பத்திரிகைத்துறையில் பிரவேசம் செய்த ஜெயராஜ் பிறகு அந்த பத்திரிகையின் பிரதி செய்தி ஆசிரியரானார். நிருபராக பணியாற்றியதற்கு அப்பால் அவர் ‘ தி ஐலண்ட் ‘ பத்திரிகையில் ‘ கிடுகு வேலிக்கு பின்னால் ‘ ( Behind the Cadjan Curtain) என்ற மிகவும் பிரபல்யமான பத்தியையும் எழுதினார்.

ஜெயராஜ் ‘ தி இந்து’ ஆங்கிலத் தினசரி மற்றும் செய்திச் சஞ்சிகையான ‘ ஃ புரொண்ட் லைன் ‘ ஆகியவற்றின் கொழும்புச் செய்தியாளராகவும் பணியாற்றினார். யாழ்ப்பாணத்தில் இருந்து வெளியான ‘த சற்றர்டே றிவியூ’ ஆங்கில வாரப்பத்திரிகையின் பிரதி ஆசிரியராகவும் குறுகிய காலம் அவர் பதவி வகித்தார்.

கனடாவுக்கு புலம்பெயர்ந்த பிறகு ஜெயராஜ் ‘ செந்தாமரை’, ‘ மஞ்சரி’ என்ற இரு தமிழ் வாரப்பத்திரிகைகளை ஆரம்பித்து அவற்றின் ஆசிரியராக பணியாற்றினார். சுயாதீனப் பத்திரிகையாளர் என்ற வகையில் அவர் கனடா, அமெரிக்கா, ஐக்கிய இராச்சியம், ஜேர்மனி, அவுஸ்திரேலியா, இந்தியா, நேபாளம் மற்றும் இலங்கை ஆகிய நாடுகளின் பல்வேறு சஞ்சிகைகளில் எழுதியிருக்கிறார். தற்போது அவர் கொழும்பில் இருந்து வெளியாகும் ‘ டெயிலி மிறர்’ , ‘ டெயிலி ஃபைனான்சியல் ரைம்ஸ் ‘ ஆகிய ஆங்கிலப் பத்திரிகைகளில் வாரம் ஒருதடவை பத்திகளை எழுதிவருகிறார்.

ஜெயராஜ் அமெரிக்காவின் ஹாவார்ட் பல்கலைக்கழகத்தில் பத்திரிகைத்துறைக்கான நீமன் ஆய்வுநிலை மாணவராக அனுமதி பெற்றவர். அவர் இலங்கை பத்திரிகை ஆசிரியர்கள் சங்கத்தினால் (The Editors Guild of Sri Lanka ) வழங்கப்படும் டி.ஆர். விஜேவர்தன விருதை ஒரு தடவையும் ஆண்டின் சிறந்த பத்தி எழுத்தாளருக்கான ( ஆங்கிலம் ) பி.ஏ. சிறிவர்தன விருதை இரு தடவைகளும் பெற்றார். ஜெயராஜ் வடமராட்சி கரவெட்டியைச் சொந்த ஊராகக் கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here